MAP

தாவீதின் இறைவேண்டல் தாவீதின் இறைவேண்டல்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 65-1, கடவுளின் கோவில் தரும் நிறைவு!

நாமும் நமது பாவ வாழ்விலிருந்து கடவுளை நோக்கித் திரும்புவோம். அவரது திருக்கோவிலில் அவர் தரும் நன்மைகளால் நிறைவு பெறுவோம்.
விவிலியத் தேடல் : திருப்பாடல் 65-1, கடவுளின் கோவில் தரும் நிறைவு!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘தீயவர், அவர்தம் நாவால் அழிவர்!’ என்ற தலைப்பில் 64-வது திருப்பாடலில் 7 முதல் 10 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து அத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்ந்தோம். இவ்வாரம் 65-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். 'நன்றிப் புகழ்ப்பா' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 13 இறைவசனங்களைக் கொண்டுள்ளது.

இந்தத் திருப்பாடல் நாம் கடவுளுக்கு வல்லமை மற்றும் நன்மையின் மகிமையைக் கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுகிறது. இந்தத் திருப்பாடலில் கடவுளின் அரசை அருளின் அரசாகவும், பாதுகாப்பின் அரசாகவும் இரண்டு கண்ணோட்டங்களில் பார்க்கின்றார் தாவீது அரசர்.  முதலாவதாக, அருளின் அரசில் (வச. 1), கடவுளை மன்றாட்டுக்களைக் கேட்பவராகவும் (வச. 2), பாவங்களையும் குற்றங்களையும் போக்குபவராகவும் (வ. 3), மக்களின் ஆன்மாக்களைத் திருப்திப்படுத்துபவராகவும் (வச. 4), அவர்களைப் பாதுகாத்து ஆறுதல் அளிப்பவராகவும் (வச. 5) கண்ணோக்குகின்றார். இரண்டாவதாக, பாதுகாப்பின் அரசில், மலைகளை உறுதிப்படுத்தும் கடவுளின் ஆற்றல் (வச. 6), கடலை அமைதிப்படுத்தும் அவரது வல்லமை (வச. 7), கிழக்கு முதல் மேற்குவரை வாழும் மக்களுக்குத் தரும் பாதுகாப்பு (வச. 8), மற்றும் பூமியைப் பலனடையச் செய்யும் (வச. 9-13) அவரின் செயல்களை எடுத்துரைக்கின்றார். மேலும் நம் வாழ்வில் கடவுள் வழங்கியுள்ள இந்த ஆசீர்வாதங்களுக்கு நாம் மிகுந்த அளவில் கடன்பட்டிருக்கின்றோம் என்பதையும் இத்திருப்பாடல் நமக்கு உணர்த்துகிறது. ஆகவே, இந்தத் திருப்பாடலை எளிய முறையில் அடிக்கடி பாடுவதற்கு நாம் அழைக்கப்படுகிறோம். இப்போது இத்திருப்பாடலின் முதல் நான்கு இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம்.  முதலில் அவ்வார்த்தைகளை பக்திகொண்ட மனதுடன் வாசிப்போம். "கடவுளே, சீயோனில் உம்மைப் புகழ்ந்து பாடுவது ஏற்புடையது! உமக்குப் பொருத்தனைகள் செலுத்துவதும் சால்புடையது! மன்றாட்டுக்களைக் கேட்கின்றவரே! மானிடர் யாவரும் உம்மிடம் வருவர். எங்கள் பாவங்களின் பளுவை எங்களால் தாங்கமுடியவில்லை; ஆனால் நீர் எங்கள் குற்றப் பழிகளைப் போக்குகின்றீர். நீர் தேர்ந்தெடுத்து உம்மருகில் வைத்துக்கொள்ளும் மனிதர் பேறு பெற்றோர்; உம் கோவிலின் முற்றங்களில் அவர்கள் உறைந்திடுவர்; உமது இல்லத்தில், உமது திருமிகு கோவிலில் கிடைக்கும் நன்மைகளால் நாங்கள் நிறைவு பெறுவோம்." (வச. 1-4)

"கடவுளே, சீயோனில் உம்மைப் புகழ்ந்து பாடுவது ஏற்புடையது! உமக்குப் பொருத்தனைகள் செலுத்துவதும் சால்புடையது! மன்றாட்டுக்களைக் கேட்கின்றவரே! மானிடர் யாவரும் உம்மிடம் வருவர்" என்கின்றார் தாவீது. இங்கே சீயோன் என்பது ஒரு குறிப்பிட்ட, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது. சீயோன் என்பது எருசலேம் நகரத்தில் உள்ள ஒரு மலையைக் குறிப்பதுடன், அந்நகரையும் குறிக்கின்றது.  ஆனால் இது புனித இடம் அல்லது இறைவனின் அரசு என்று பொருள்படும் ஒரு பொதுவான வழியில் பயன்படுத்தப்படுகிறது. சீயோன் என்ற வார்த்தையானது எபிரேயச் சொல்லான சியோன் (Tsiyon) என்பதிலிருந்து வருகிறது. மேலும் யூத நம்பிக்கையில் இந்த வார்த்தைக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது என்பதையும் பார்க்கின்றோம். சீயோன் என்பது பெரும்பாலும் கடவுளின் பிரசன்னத்தின் அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது. பழைய ஏற்பாட்டில், இது கடவுளின் வாழ்விடமாகக் கருதப்பட்டது. தாவீது தனது திருப்பாடல்களில் பல இடங்களில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றார். குறிப்பாக, ‘ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார்’ என்று கூறும் தாவீது, “இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்;  இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன்" என்று கடவுளே உரைப்பதாகவும் தெரிவிக்கின்றார் (காண்க. திபா 132:13-14). ஆக, இந்த இடத்தில் கடவுளுக்குப் பொருத்தனைகளைச் செலுத்துவது சாலச் சிறந்தது என்றும் கருதுகின்றார். மேலும் உன்னதக் கடவுள் வாழும் இப்படிப்பட்ட புனித இடத்தில் செலுத்தப்படும் பொருத்தனைகளின் வேண்டுதல்கள் உடனடியாகக் கேட்கப்படும் என்றும் ஆழமாக நம்பிக்கைகொள்கின்றார் அவர். மேலும் "எரிபலியுடன் உமது இல்லத்தினுள் செல்வேன்; என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன். அவற்றை என் துன்ப வேளையில் என் நா உரைத்தது; என் வாய் உறுதி செய்தது" (காண்க. திபா 66:13-14) என்றும் மொழிகின்றார் தாவீது.

பழைய ஏற்பாட்டில் இந்தப் பொருத்தனைகள் செலுத்தும் பழக்கம் அதிகம் இருந்துள்ளது என்பதையும் நம்மால் காண முடிகின்றது. அதுமட்டுமன்றி, கடவுளிடமிருந்து தங்கள் இறைவேண்டலின் பலனாகப் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்குப் பொருத்தனைகள் செய்து அதனை நிறைவேற்றியதையும் பார்க்கின்றோம். ‘கடவுள் என்னோடிருந்து நான் போகிற இந்த வழியில் எனக்குப் பாதுகாப்பளித்து உண்ண உணவும், உடுக்க உடையும் தந்து, என் தந்தையின் வீட்டிற்கு நான் நலமுடன் திரும்பச் செய்வாராயின், ஆண்டவரே எனக்குக் கடவுளாக இருப்பார். மேலும், நான் நினைவுத் தூணாக நாட்டிய இந்தக் கல்லே கடவுளின் இல்லம் ஆகும். மேலும், நீர் எனக்குத் தரும் யாவற்றிலும் பத்தில் ஒரு பங்கு உமக்குச் செலுத்துவேன்’ (தொநூ 28:20) என்று யாக்கோபு கூறுகின்றார். இரண்டாவதாக, “படைகளின் ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி. என்னை மறவாமல் நினைவு கூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன். அவனது தலைமேல் சவரக் கத்தியே படாது” (1சாமு. 1:9-11) என்று அன்னா பொருத்தனை செய்து வேண்டிக்கொள்கிறார். மேலும் அவரின் இறைவேண்டல் நிறைவேறிய வேளை, தான் கூறியது போன்று தனது மகன் சாமுவேலை முன்னிட்டு அவருக்குப் பொருத்தனைகள் செய்கின்றார் அன்னா.

பொருத்தனைகள் செலுத்துவது என்பது எல்லா மதங்களிலும் காணப்படும் ஒரு நம்பிக்கை செயலாக இருக்கின்றது. குறிப்பாக, கிறிஸ்தவர்களாகிய நம்மிடம் இது வெகுவாகவே காணப்படுகிறது. நம் தமிழகச் சூழலில் வேளாங்கண்ணி போன்ற அன்னை மரியாவின் திருத்தலங்களிலும், புளியம்பட்டி போன்ற கோடி அற்புதங்கள் புரியும் புனித அந்தோனியார் திருத்தலங்களிலும் மக்கள் வெள்ளமென திரண்டு வந்து பொருத்தனைகளைச் செய்து இறைவேண்டுதல்கள் எழுப்புகின்றனர். சிறப்பாக, இந்த வழிபாடுகளில் பிற மதங்களைச் சேர்ந்த மக்களும் அதிக எண்ணிக்கையில் பங்குகொள்கின்றனர். அத்துடன், தாங்கள் என்ன நோக்கத்திற்காகப் பொருத்தனைகள் செய்து வேண்டிக்கொண்டனரோ, அது நிறைவேறும் வேளை, அவர்கள் அத்திருத்தலங்களுக்குத் திரும்ப வந்து தங்களின் பொருத்தனைகளை நிறைவேற்றுவதையும் நாம் காண முடிகின்றது.

இரண்டாவதாக, "எங்கள் பாவங்களின் பளுவை எங்களால் தாங்கமுடியவில்லை; ஆனால் நீர் எங்கள் குற்றப் பழிகளைப் போக்குகின்றீர்" என்கின்றார் தாவீது. இங்கே கடவுளை மனிதரின் பாவங்களையும், குற்றப்பழிகளையும் போக்கக் கூடியவராகக் காட்டுகின்றார் தாவீது. மேலம் இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் இது அடிக்கடி நிகழ்வதை நாம் பார்க்கின்றோம். அதாவது, எத்தனையோ சூழல்களில் கடவுளை வெறுத்து, தங்கள் பாவச்செயல்களால் அவரைவிட்டு வெகுதொலைவில் போனபோதெல்லாம் கடவுள் அவர்களை மீண்டும் அழைத்து அவர்தம் பாவங்களைப் போக்கி தனது சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்கின்றார். இங்கே மன்னிப்பு என்பது அவர்கள் பெறும் புதுவாழ்வை அர்த்தம்படுத்துகிறது. இஸ்ரயேல் வீட்டாருக்கு ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: என்னைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள் (காண்க. ஆமோ 5:4) என்று ஆமோஸ் உரைக்கின்றார்.  மேலும் "என்னைவிட்டு விலகிய மக்களே! திரும்பி வாருங்கள்; உங்கள் நம்பிக்கையின்மையிலிருந்து உங்களைக் குணமாக்குவேன்” என்ற ஆண்டவரின் அழைப்புக்கு “இதோ நாங்கள் உம்மிடம் வருகிறோம். நீரே எங்கள் கடவுளாகிய ஆண்டவர்" (காண்க எரே 3:22) என்று மக்கள் உரைப்பதாகவும் எரேமியா எடுத்துக்காட்டுகின்றார். இது கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கிய பாவ மன்னிப்பையும் புதிய வாழ்வையும் வெளிப்படுத்துகின்றது. மேலும் “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” (காண்க மாற் 1:15) என்று மன்னிப்புப்பெற அழைப்புவிடுக்கும் நமதாண்டவர் இயேசு, “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்" (காண்க. மத் 11:28-29) என்று உரைக்கின்றார். ஆக, பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் தன்னை வெளிப்படுத்தும் கடவுளும் அவரது ஒரே திருமகனாகிய இயேசுவும் மக்களின் பாவங்களைச் சுமந்துகொண்டு அவர்களுக்கு மன்னிப்பும் புதுவாழ்வும் அளிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

இறுதியாக, "நீர் தேர்ந்தெடுத்து உம்மருகில் வைத்துக்கொள்ளும் மனிதர் பேறு பெற்றோர்; உம் கோவிலின் முற்றங்களில் அவர்கள் உறைந்திடுவர்; உமது இல்லத்தில், உமது திருமிகு கோவிலில் கிடைக்கும் நன்மைகளால் நாங்கள் நிறைவு பெறுவோம்" என்கின்றார் தாவீது. இங்கே கடவுளால் மன்னிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் மக்கள் என்றென்றும், அவரது திருமுன்னிலையில் வாழ்ந்திடுவர் என்பதையும், அவர்தரும் நன்மைகளால் நிறைவு பெறுவர் என்பதையும் எடுத்துக்காட்டுகிறார். பொதுவாக, ஒரு மனிதரின் வாழ்வில் நிறைவான நிலை, நிறைவற்ற நிலை என இரண்டு நிலைகள் காணப்படுகின்றன. முதலாவதாக, நிறைவற்ற நிலை என்பது கடவுளுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்து, பாவங்களும், தீய செயல்களும் புரிந்து அவரிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கும்போது ஏற்படுவது. இரண்டாவதாக, நிறைவான நிலை என்பது, தங்களின் பாவங்களை உணர்ந்து, கடவுளிடம் திரும்பி வந்து அவரிடம் மன்னிப்பு வேண்டும்போது கிடைக்கும் அருள்கொடை. இந்த அருள்கொடைதான் என்றும் நிலையானதும் நிறைமகிழ்வை அளிக்கக் கூடியதுமாக இருக்கின்றது. இதன் காரணமாகவே, "உமது இல்லத்தில், உமது திருமிகு கோவிலில் கிடைக்கும் நன்மைகளால் நாங்கள் நிறைவு பெறுவோம்" என்கின்றார் தாவீது. ஆகவே, நாமும் நமது பாவ வாழ்விலிருந்து மனம் திரும்பி, கடவுளை நோக்கித் திரும்புவோம். அவர் தரும் நன்மைகளால் நிறைவு பெறுவோம். இவ்வருளுக்காக இந்நாளில் மன்றாடுவோம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஜனவரி 2025, 12:34