MAP

அரசி ஈசபேலின் கொடிய மரணம் அரசி ஈசபேலின் கொடிய மரணம்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 64-2, தீயவர், அவர்தம் நாவால் அழிவர்!

நமது எதிரிகளைக் கண்டு மனம் தளராது இறைவனிடம் முழுதுமாகச் சரணடைந்து அவர்தரும் ஆன்மிக வலிமையால் அவர்களை வெல்வோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 64-2, தீயவர், அவர்தம் நாவால் அழிவர்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘இறையாற்றலால் எதிரிகளை வெல்வோம்!’ என்ற தலைப்பில் 64-வது திருப்பாடலில் 1 முதல் 6 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம், அதனைத் தொடர்ந்து வரும் 7 முதல் 10 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்வோம். இப்போது அவ்வார்த்தைகளை இறை அமைதியில் வாசிப்போம். "ஆனால், கடவுள் அவர்கள்மேல் அம்புகளை எய்ய, அவர்கள் உடனே காயமுற்று வீழ்வார்கள். தங்களது நாவினாலேயே அவர்கள் அழிவார்கள்; அவர்களைப் பார்ப்போர் அனைவரும் எள்ளி நகைப்பார்கள். அப்பொழுது எல்லா மனிதரும் அச்சம் கொள்வர்; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பர்; அவரது அருஞ்செயலைப்பற்றிச் சிந்திப்பர். நேர்மையாளர் ஆண்டவரில் அகமகிழ்வர்; அவரிடம் அடைக்கலம் புகுவர்; நேரிய உள்ளத்தோர் அவரைப் போற்றிடுவர்" (வச 7-10). கடந்த வாரம் இத்திருப்பாடலின் முதல் பகுதியில் தாவீது அரசரின் எதிரிகள் குறித்த பண்புகளையும், அவர்தம் தீய  செயல்பாடுகளையும் குறித்து சிந்தித்தோம். இந்த இரண்டாம் பகுதியில். தாவீதின் எதிரிகள் எப்படியெல்லாம் வீழ்ந்துபோவார்கள் என்பதை அவர் எடுத்துரைப்பதைக் குறித்துத் தியானிப்போம். தாவீதின் இந்த வார்த்தைகளைப் பார்க்கும்போது இரண்டு விவிலிய மாந்தர்களின் வாழ்க்கை எனது நினைவுக்கு வருகின்றது.

‘தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது பழமொழி. வாழ்வில் பெரும்பகுதியை அக்கிரமங்களிலும் பிறரை அழிப்பதிலும் செயல்பட்ட அபிமலேக்கு என்பவர் அழிந்து போனதை குறித்து  நாம் முதலில் தியானிப்போம். இஸ்ரயேலில் கிதியோன் என்ற நீதித்தலைவர் மிகவும்  மகத்தானவர். நற்பண்புகள் நிறைந்தவர். இவருடைய ஒரே மகன் தான் அபிமலேக்கு. தானோ தன் குடும்பத்தாரோ அரசனாக இருக்க மாட்டார்கள் என்று கிதியோன் வாக்கு கொடுத்திருந்தார். ஆனால் அபிமலேக்கு தன் கவர்ச்சியான பேச்சுக்களால் தன்னை ஒரு தலைவனாக்கிக் கொண்டு அரசனானார். மூன்று ஆண்டுகள் கொடுங்கோல் ஆட்சி நடத்தினார். ‘பொறுத்ததுபோதும் பொங்கியெழு’ என்ற கதையாக, மக்கள் அவருக்கு எதிராக வெகுண்டெழுந்தனர். தன்னை எதிர்த்தவர்களை ஊர் ஊராகச் சென்று அபிமலேக்கு அழித்தார். அப்படி ஓர் ஊரை அழிக்க அதனை நெறுங்கியபோது, அவ்வூர் மதிலிலிருந்து ஒரு பெண் பெரிய எந்திரக்கல்லை அவர்மீதுத் தூக்கிப் போட அது அபிமலேக்கின் மண்டையை உடைத்தது, அவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். ஒரு தலைவன் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு. மக்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தீமை செய்யாதிருக்கலாம். ஆனால் தீமையை மட்டுமே செய்து வந்த அபிமலேக்கு அந்தத் தீமையினாலேயே அழிந்து போனார்.

இன்னொர் எடுத்துக்காட்டு அரசி ஈசபேல். ஆகாபு அரசனின் மனைவியாகிய இவள் பெரும் வஞ்சகக்காரி. தீமை செய்வதில் மிகவும் கைதேர்ந்தவள். தனக்கென்று வைத்திருந்த நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை தீய வழியில் கைப்பற்றினாள். அதாவது, தன் ஏவலரை ஏவிவிட்டு நாபோத்தை வஞ்சகமாக கொலைசெய்து அவனது திராட்சைத் தோட்டத்தைக் கைப்பற்றி தனது கணவனுக்குக் கொடுத்தவள். நாபோத்தின் மாசற்ற இரத்தத்தை சிந்த காரணமானத்தின் விளைவாக, இவளது முடிவு மிகவும் கோரமானதாக அமைந்தது. “இஸ்ரியேல் நிலப் பகுதியில் ஈசபேலின் உடலை நாய்கள் தின்னும் ஈசபேலின் பிணம் இஸ்ரியேல் நிலப்பகுதியில் சாணத்தைப் போன்று கிடப்பதைப் பார்த்த எவருமே, இதுதான் ஈசபேல் என்று கூற முடியாது" (2 அரசர் 9:30-37) என்று எலியாவின் வழியாக ஆண்டவர் உரைத்த இறைவாக்கு அவளது கொடிய மரணத்தின் வழியாக நிறைவேறியது. எதற்கும் ஒரு முடிவு உண்டு, ஓர் எல்லை உண்டு என்பார்கள். நம்மை யார் தடுப்பார் என்ற ஆணவத்தில்  நாம் தீமை செய்யாதிருப்போம். இல்லையேல் நாம் அழிவது உறுதி. ஏனென்றால், கடவுள் எப்போதும் நமது தீய செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார். அவர் கோபத்திலிருந்து நம்மால் தப்ப இயலாது. ஆகவே நன்மை செய்ய பழகுவோம். தீமையை விட்டு விலகுவோம்.

இரண்டாவதாக, “இந்த தீயசெயல்களைக் காணும் எல்லா மனிதரும் அச்சம் கொள்வர். ‘கடவுளின் செயல்களை எடுத்துரைப்பர்; அவரது அருஞ்செயலைப் பற்றிச் சிந்திப்பர். நேர்மையாளர் ஆண்டவரில் அகமகிழ்வர்; அவரிடம் அடைக்கலம் புகுவர்; நேரிய உள்ளத்தோர் அவரைப் போற்றிடுவர்" என்றும் கூறி இந்தத் திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது. நம் கண்களுக்கு முன்பாக எத்தனையோ வேண்டத்தகாத காரியங்களை நடப்பதைப் பார்க்கின்றோம். இதைக் காணும்பொழுது பலர் மனமாற்றம் பெறுகின்றனர், ஆனால் சிலர் தங்களின் தீய செயல்களைத் தொடர்கின்றனர். ஒவ்வொரு நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி தவறுகள் இழைப்பவருக்கு அவற்றின் தன்மையைப் பொறுத்து தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் ஆழமாகப் பார்க்கும்போது, இந்தத் தண்டனைகள் வழங்கப்படுவதைக் காணும் மற்றவர்கள் இம்மாதிரியான தவறுகளைச் செய்யக் கூடாது என்பதற்காகத்தான். ஆனாலும் தவறுகள் தொடரத்தான் செய்கின்றன. குறிப்பாக, மரண தண்டனைகள் இவ்வகையானதுதான். மன்னிக்கப்படாத குற்றங்களை செய்தவருக்கு கொலை தண்டனை அதாவது, மரண தண்டனை உண்டு என்பதை வள்ளுவரும் கூறியிருக்கின்றார். இதனை, "கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்" (குறள் 550) என்ற குறளில் கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம் என்கிறார். ஹிட்லர், இடியமீன், முசோலினி போன்றார் நிகழ்த்திய மனிதன்மையற்ற செயல்களுக்காக எப்படியெல்லாம் அவர்கள் தண்டிக்கப்பட்டனர் என்பதை இவ்வுலகின் தலைவர்கள் அறிந்திருந்தும் கூட, அவர்களின் அந்த இரக்கமற்ற கொடிய செயல்கள் போர்கள், மோதல்கள் என்னும் பெயரில் இன்றும்  தொடரத்தான் செய்கின்றன. உக்ரைன்மீது இரஷ்யாவும், பாலஸ்தீனத்தின்மீது இஸ்ரேலும் நடத்தும் போர்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். அப்படியென்றால், திட்டமிட்டு இந்தப் போரில் ஈடுபட்டுள்ள அனைவருமே கடவுளுக்கு எதிராகத் தீய வழியில் செயல்படுபவர்கள்தானே! ஆக, உலக வரலாற்றில் நிகழ்ந்தவற்றையெல்லாம் மறந்துவிட்டு அவர்கள் தான்தோன்றித்தனமாகச் செயல்படுகிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகிறது. தங்களின் தரம் தாழ்ந்த ஆளுமைப் போக்குகளால் இவ்வுலகின் பார்வையிலிருந்து தாங்கள் தப்பிவிட்டதாக நினைத்தாலும் கடவுளின் பார்வையிலிருந்து அவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது என்பது திண்ணம்.

முன்னொரு காலத்தில் ஓர் உப்பு வியாபாரி இருந்தார். அவர் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவார். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் அவர் அந்த ஊருக்குள் போக வேண்டும். ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்குக் கிளம்பிச் சென்றார். வழியில் உள்ள அந்த ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் அதன் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது. கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டார். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடங்களிலேயே அப்படியே தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது. எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம்! இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை. கழுதைக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் வியாபாரிக்குப் பெரிய நட்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்பினார். மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்குப் புறப்பட்டார். கழுதையின் முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு மிகவும் கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. அப்போது திடீரென அதற்கு முந்தைய நாள் ஞாபகம் வந்தது. எனவே, அது மெல்ல தடுமாறுவது போல பாவனை செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது. அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது. அதனால் அதற்கு மீண்டும் மகிழ்ச்சி. கழுதை தனது தந்திரத்தால் பலநாள்கள் தொடர்ந்து இதையே செய்து வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டார். பெரிய நட்டத்தையும் சந்தித்து வந்தார்.

ஒரு நாள் வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்குக் கிளம்பிச் சென்றார். செல்லும் வழியில் கழுதை கொண்டு வருகின்ற உப்பு எப்படிக் காணாமல் போன்கின்றது என்பதை யோசித்துக்கொண்டே கழுதையின் நடவடிக்கைகளை கவனித்தார். கழுதை வேண்டுமென்றே ஆற்றுக்குள் விழுந்தது. அப்போதுதான் அவருக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தார். அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதையின் முதுகில் ஏற்றினார். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. அப்போது எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது. உடனே மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அப்போது கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கடினப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது. தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க வேண்டும் என்று முடிவெடுத்தது.

ஆகவே, வஞ்சகம், சூது, கெட்ட எண்ணம், கொடுஞ்செயல் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டவர்கள் ஒருநாள் கண்டிப்பாக கடவுளால் அழித்தொழிக்கப்படுவார்கள் என்பதை மனதில் கொள்வோம். நாமும் தாவீதைப் போன்று நேரிய வழியில் வாழ்ந்து கடவுளிடம் சரணடைவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 ஜனவரி 2025, 13:10