MAP

காசாவில் இடிபாடுகள் காசாவில் இடிபாடுகள்  (AFP or licensors)

காசா போர்நிறுத்தம், வரவேற்கப்பட வேண்டிய திருப்புமுனை

காசாவில் இடைக்காலப் போர்நிறுத்தம் இடம்பெறுவதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என்ற கேள்வி எழுப்பப்பட்டாலும், இந்த போர் நிறுத்தம் தடையின்றி தொடரவேண்டும் என்பதே அனைவரின் ஆவல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

காசாவில் அறிவிக்கப்பட்டுள்ள போர்நிறுத்தம் எச்சரிக்கையுடன்கூடிய நம்பிக்கைகளை வழங்கினாலும், வருங்காலம் குறித்த நம்பிக்கைகள் சிதறுண்டும், காசாவின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமலும் இருக்கின்றன என்ற ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் கர்தினால் பியர்பத்திஸ்தா பிட்சபாலா.

தற்போதைய போர்நிறுத்தம் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட வேண்டிய திருப்புமுனை என்பதையும் சுட்டிக்காட்டிய  யெருசலேமின் இலத்தீன் ரீதி முதுபெரும் தந்தை, கர்தினால் பிட்சபாலா அவர்கள், அதேவேளை நமக்கு முன்னிருக்கும் சவால்களையும் நாம் இனம்கண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.  

மக்கள் ஒவ்வொருவரின் வாழ்வையும் காயப்படுத்தியுள்ள இந்த போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது குறித்து அனைத்து மக்களும் மகிழ்வதாக உரைத்த கர்தினால் அவர்கள், வன்முறைகள் நிறுத்தப்பட்டது நம்பிக்கையைத் தந்தாலும், அமைதியின் பாதை நீண்டதாகவும் கடினமானதாகவும் இருப்பதை மறுக்க முடியாது என மேலும் கூறினார்.

போர் நிறுத்தம் என்பது முதல்படிதான், ஏனெனில் அமைதியின் பாதை என்பது மிகவும் நீண்ட தூரமுடையது, இடைக்காலப் போர் நிறுத்தத்தால் மோதல்கள் முற்றிலுமாக முடிவுக்கு வருவதில்லை என்பதையும் எடுத்துரைத்தார் கர்தினால் பிட்சபாலா.

இடைக்காலப் போர்நிறுத்தம் இடம்பெறுவதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என்ற கேள்வி எழுப்பப்பட்டாலும், இந்த போர் நிறுத்தம் தடையின்றி தொடரவேண்டும் என்பதே அனைவரின் ஆவல் என்பதையும் எடுத்துரைத்தார் யெருசலேமின் இலத்தீன் ரீதி முதுபெரும் தந்தை, கர்தினால் பிட்சபாலா.

46ஆயிரம் பேரின் உயிரிழப்புகள், 19இலட்சம் பாலஸ்தீனியர்களின் இடம்பெயர்வுகள் என்பவைகளுக்கு காரணமான 15 மாதங்களான இஸ்ராயேல் குண்டுவீச்சுகளுக்குப்பின் தற்போது இஸ்ராயேலும் ஹாமாஸ் புரட்சிக்குழுவும் போர்நிறுத்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 ஜனவரி 2025, 15:40