இயேசுவின் திருமுழுக்குக் கோவில் எதிர்நோக்கின் அடையாளம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இயேசுவின் திருமுழுக்குக் கோவிலைப் புனிதப்படுத்தும் திருச்சடங்கு எதிர்நோக்கின் அடையாளமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார் எருசலேமின் இலத்தின் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, பேராயர் Pierbattista Pizzaballa.
ஜனவரி 10, வெள்ளிக்கிழமை இன்று, அல்-மக்தாஸில் உள்ள இயேசுவின் புதிய திருமுழுக்குக் கோவிலைப் புனிதப்படுத்தும் திருச்சடங்கிற்கு முன்னதாக அதாவது, ஜனவரி 8, இவ்வியாழனன்று, வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார் பேராயர் Pizzaballa.
இந்த நிகழ்வு தான் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த ஒன்றுதான் என்றும், இது பல்லாண்டு கால தயாரிப்பின் உச்சம் என்றும் உரைத்துள்ள பேராயர், இந்நிகழ்வில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கலந்துகொள்கிறார் என்பதையும் மகிழ்வும் தெரிவித்துள்ளார்.
திருஅவையின் யூபிலி ஆண்டையும், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் அல்-மக்தாஸ் திருத்தூதுப் பயணத்தின் 25-வது ஆண்டு விழாவையும் இணைக்கும் விதமாக இத்தருணத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்த பேராயர், தனது திருத்தூதுப் பயணத்தின்போது, உலகின் மிகப் பழமையான நகரத்திற்கு அருகாமையில், ஆழ்ந்த ஆன்மிக முக்கியத்துவத்துடன், "வரலாற்றில் மூழ்கிய இடம்" (steeped in history) என்று இதனை திருத்தந்தை அழைத்ததையும் நினைவுகூர்ந்துள்ளார்.
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பாலின் இந்த வருகையைப் பிரதிபலிக்கும் வகையில், கிறிஸ்துவைப் பின்பற்றுமாறு யோர்தானில் உள்ள கிறிஸ்தவர்களை வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தி, நடந்துகொண்டிருக்கும் மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியில் இன்னும் பெரிய அர்த்தத்தைப் பெறுகிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் பேராயர் Pizzaballa.
ஒரு புதிய கோவிலின் அர்ப்பணிப்பு யோர்தான் மற்றும் மத்திய கிழக்கில் வளர்ச்சி மற்றும் உயிர்ச்சக்திக்கான திருஅவையின் அர்ப்பணிப்பு மற்றும் ஒன்றிப்பை அடையாளப்படுத்துகிறது என்று மேலும் கூறினார் பேராயர்.
கத்தோலிக்க விசுவாசிகள், அரசு அதிகாரிகள், பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் திருஅவையின் பணி, மதச் சுதந்திரம், உலகளாவிய அமைதி மற்றும் மனித மாண்பை ஆதரிப்பவர்கள் உட்பட பரந்த பார்வையாளர்களுக்குத் திருத்தந்தையின் வாழ்த்துக்களை வழங்குவதற்காக கர்தினால் பரோலினை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்