காங்கோ ஜனநாயகக் குடியரசில் நெருக்கடி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காங்கோ ஜனநாயகக் குடியரசில் இடம்பெற்றுள்ள மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது 'இயேசுவின் அமைதி' (Pax Christi) என்ற அனைத்துலக அமைப்பு.
ஜனவரி 29, இப்புதனன்று, வெளியிட்ட அறிக்கையொன்றில் அவ்வமைப்பு இந்த அழைப்பினை விடுத்துள்ள வேளை, புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோர் குடும்பங்களின் துயர நிலைகளையும், அங்கு ஏற்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகளின் சரிவையும் எடுத்துக்காட்டியுள்ளது.
மேலும் அமைதி, நீதி மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மாண்பிற்கு முன்னுரிமை அளிக்க அனைத்துலகச் சமூகம் அவசர மற்றும் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ள அதேவேளை, அமைதி சாத்தியம் என்றாலும், அதற்குத் தீர்க்கமான தலையீடு அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
M23 என்ற அமைப்பின் கிளர்ச்சியாளர்களால் மீண்டும் எழுச்சி பெற்றுள்ள வன்முறை, ருவாண்டாவின் ஆதரவுடன், போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறுகிறது என்றும், ஆப்பிரிக்கா தலைமையிலான அமைதி முயற்சிகளைத் தடுக்கிறது என்றும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
அங்கு நிலைமை மோசமாகிவிட்டது, குறிப்பாக, கோமாவைச் சுற்றி (Goma), அண்மைய கிளர்ச்சி நடவடிக்கைகளால் 8,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், பலவீனமான இச்சூழல் பசி, நோய் மற்றும் வன்முறையின் ஆபத்துகளை அதிகரிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது அவ்வமைப்பு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்