MAP

நைஜீரியாவில் ஒரு கோவிலில் காவல் துறையினரின் பாதுகாப்பு நைஜீரியாவில் ஒரு கோவிலில் காவல் துறையினரின் பாதுகாப்பு  

நைஜீரியாவில் படுகொலை செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு நினைவுத் திருப்பலி!

கடந்த 2023-ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்புத் தினத்தன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை குறிவைத்து தீவிரவாதிகள் குறைந்தது 20 இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான் 

கடந்த 2023-ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்புத் தினத்தன்று, நைஜீரியாவின் பீடபூமி மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ கிராமங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய ஒருங்கிணைந்த தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு சிறப்பு நினைவுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதாக ICN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 5, இஞ்ஞாயிறன்று போக்கோஸில் உள்ள புனித திருமுழுக்கு யோவான் கோவிலில் இடம்பெற்ற ஆண்டவருடைய திருக்காட்சிப் பெருவிழாத் திருப்பலியை தலைமையேற்று வழிநடத்திய Pankshin ஆயர் Michael Gobal Gokum அவர்கள், இத்தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்தார் என்றும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.

ஆயர் கோகும் அவர்கள், இவ்வன்முறை குறித்துப் பெரிதும் வருத்தம் தெரிவித்த அதேவேளை, இதில் தப்பிப்பிழைத்தவர்களின் நம்பிக்கை மற்றும் மீட்டெழுச்சியைப் பாராட்டியதுடன், பீடபூமி மாநில அரசின் ஆதரவிற்காகவும், மற்றும் ACN  எனப்படும் தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் அமைப்பு உள்ளிட்ட அனைத்துலக அமைப்புகளின்  உதவிகளுக்காகவும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மேலும் இவ்வன்முறையினால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு நைஜீரிய அரசை ஆயர் வலியுறுத்தியதுடன்,  பாதுகாப்பின்மையால் ஏற்படும் பரவலான பட்டினியையும் எடுத்துக்காட்டினார்.

இறுதியாக, இவ்வன்முறைத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக இறைவேண்டல் செய்த ஆயர், இந்தத் துயரத்தை விளைவித்தவர்களை மன்னித்து ஏற்கவும், குணப்படுத்துதலை மேம்படுத்தவும் கேட்டுக்கொண்டதுடன், வசதி படைத்தவர்கள் தேவையில் இருப்போருக்கு உதவிட வேண்டுமெனவும் விண்ணப்பித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 ஜனவரி 2025, 12:10