மியான்மார் நாட்டிற்காக 24 மணி நேர செப வேண்டல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மியான்மார் நாட்டில் 2021 பிப்ரவரியில் துவங்கி இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கும் வன்முறை மோதல்கள் முடிவுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் 24 மணி நேர ஜெப வழிபாட்டை நடத்தவுள்ளதாக கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.
Aid to the Church in Need என அழைக்கப்படும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு, 23 நாடுகளிலுள்ள தன் அலுவலகங்களிலும் பிப்ரவரி முதல் தேதி 24 மணி நேர ஜெப வேண்டலை மியான்மார் நாட்டிற்காக துவக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
மியான்மார் நாட்டிற்கான ஜெப முயற்சியில் தங்கள் நண்பர்களும், நல்மனமுடையோரும் இணையுமாறு அழைப்பு விடுக்கும் இந்த பிறரன்பு அமைப்பு, இன்னும் மியான்மார் நாட்டிற்குள் 28 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடிபெயர்ந்தவர்களாக வாழ்வதாக உரைக்கும் ஐ.நா. அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ளது.
மியான்மாரின் ஜனநாயக அரசை 2021ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி இராணுவம் கவிழ்த்ததிலிருந்து அந்நாட்டில் வன்முறை மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இதற்கிடையே, மியான்மார் இராணுவ அரசு, அந்நாடில் அவசர காலநிலையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்