அன்னை ஓர் அதிசயம் – மரியின் கிராமம் திருத்தலம், நைரோபி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
1980ஆம் ஆண்டு மே மாதத்திலும், 1985ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருநற்கருணை மாநாட்டுக்காகவும் ஆப்ரிக்காவின் கென்ய நாட்டுக்கு புனித திருத்தந்தை 2ஆம் ஜான் பால் அவர்கள் திருப்பயணம் மேற்கொண்ட பின்னர் அந்நாட்டில் இறைவனின் தாய் மரியாவுக்கென ஒரு தேசியத் திருத்தலம் தேவை என்பதை கென்ய ஆயர்கள் உணர்ந்து ஒரு தேசிய அன்னைமரியாத் திருத்தலம் அமைப்பதற்குத் தீர்மானித்தனர். Nakuru மறைமாவட்டம், கென்யாவின் மத்திய பகுதியில் இருப்பதாலும், நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் வருவதற்கு வசதியான பகுதியாக அது இருப்பதாலும் அம்மறைமாவட்டத்தில் தேசிய அன்னைமரியாத் திருத்தலத்தை எழுப்புமாறு 1984 மற்றும் 1985ஆம் ஆண்டுகளில் கென்ய ஆயர் பேரவை அம்மறைமாவட்டத்தைக் கேட்டுக்கொண்டது. அதேசமயம் 1980களின் தொடக்க காலங்களில் கென்யாவின் பல பகுதிகளில் மக்கள் அன்னைமரியாவைக் காட்சியில் கண்டதாக அறிவித்து வந்தனர். Nakuru மறைமாவட்டத்தின் Subukiaவிலுள்ள Magomano பள்ளி வளாகத்தில் 1984ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 28ஆம் தேதி வரை அன்னைமரியாவை மக்கள் காட்சியில் கண்டதாக நற்செய்தியாளர் புனித யோவான் பங்குத்தந்தை அருள்பணி John Jones அறிவித்தார். இப்பங்கிலும், நாட்டின் சில இடங்களிலும் அன்னைமரியா பக்தி தீவிரமடைந்தது, குறிப்பாக செபமாலை பக்தி முயற்சி பிரபலமடைந்தது.
அருள்பணி John Jonesம் தனது பங்கிலிருந்த சிறிய கிறிஸ்தவச் சமூகங்களைச் சந்தித்து அன்னைமரியா பற்றிய கத்தோலிக்கத் திருஅவையின் போதனைகளை விளக்கினார். விவிலியத்திலிருந்து மேற்கோள்களையும் சுட்டிக்காட்டினார். 1985ஆம் ஆண்டின் துவக்கத்தில் அப்பங்கில் அன்னைமரியாவுக்கென ஒரு சிறிய திருத்தலம் கட்டத் தீர்மானித்தார். அப்பங்கைச் சேர்ந்த Munanda என்ற ஊரில் திருத்தலம் கட்டி, அயர்லாந்திலிருந்து கொண்டு வந்திருந்த சிறிய அன்னைமரியா திருவுருவத்தையும் அங்கு அவர் வைத்தார். இதன்மூலம் 1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்னைமரியா ஆண்டையும் Nakuru மறைமாவட்ட ஆயரின் ஆசீரோடு சிறப்பாகத் தொடங்கினர் அப்பங்கு மக்கள். 1988ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்னைமரியா ஆண்டையும் சிறப்பாக நிறைவு செய்தனர். இவ்வழிபாடுகளில் எல்லா இடங்களிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். மக்களின் இப்பக்தியைக் கண்ட Nakuru ஆயர் Ndingi Mwana' Nzekiம் கர்தினால் Maurice Michael Otunga அவர்களும் சேர்ந்து கென்ய நாட்டுக்கு ஒரு தேசிய அன்னைமரியாத் திருத்தலத்தை எழுப்புவதற்குத் தகுந்த இடம்தேடும் பணியில் தீவிரமாக இறங்கினர். அச்சமயத்தில், புதிதாகக் கட்டப்படவிருக்கும் இந்தத் திருத்தலம் "இறைவனின் அன்னை மரியின் கிராமம்" என அழைக்கப்பட வேண்டும் என கர்தினால் Otunga அறிவித்தார். இதன்மூலம் Subukiaவில் அமைக்கப்படவிருந்த தேசியத் திருத்தலத்துக்கு "இறைவனின் அன்னை மரியின் கிராமம்" என்ற பெயர் அதிகாரப்பூர்வமானது. இறைவனின் அன்னை விழாவான சனவரி முதல் தேதியன்று இங்கு விழாவைச் சிறப்பிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
உண்மையில் Subukia, புவியியல் அமைப்பின்படியும் முக்கியவத்தும் வாய்ந்தது. கென்யாவின் பல்வேறு பூர்வீக இன மக்களை ஒன்று சேர்ப்பதற்கும் இவ்விடம் வசதியாக இருந்தது. ஏனெனில் ஏற்கனவே Subukia பள்ளத்தாக்கில் இந்தப் பூர்வீக இனங்களில் பலர் வாழ்ந்து வந்தனர். மேலும், பூமத்தியரேகை Subukia வழியாகச் செல்வதால் உலகின் இரண்டு அரைக்கோளங்களை இணைக்கும் இடமாகவும் இவ்விடம் உள்ளது. 1989ஆம் ஆண்டு மே மாதத்தில் திருத்தலம் கட்டுவதற்கு இடம் தேடுவதற்குச் சிறப்பு குழு உருவாக்கப்ட்டது. இதன் உறுப்பினர்கள், அன்னைமரியாவை மக்கள் காட்சியில் கண்ட Munadana வளாகம் 12 ஏக்கர் இடமாக இருந்ததால் பெரிய இடம் தேடினர். இக்குழு இதற்கு முயற்சிகள் எடுத்த 48 மணி நேரத்துக்குள்ளாக, எதிர்பாராதவிதமாக, ஒருவர் 50 ஏக்கரை இலவசமாகக் கொடுப்பதற்கு முன்வந்தார். திருத்தலத்தை விரிவுபடுத்துவதற்கு மேலும் 200 ஏக்கர் தேவைப்பட்டது. தளபதி Ikou Muteithia என்பவர் மலிவான விலையில் இந்த இடத்தை விற்பதற்கு முன்வந்தார். பின்னர் புதிய திருத்தலத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின.
1991ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி அமல மரி அன்னை விழாவன்று அந்தப் பசிலிக்கா அமைந்துள்ள குன்றில் அடர்ந்த புதர்ச்செடிகளை பணியாள்களின் தலைவர் Henry Muthuku அகற்றிக்கொண்டிருந்தபோது ஒரு சிறிய நீரூற்று வெளிப்பட்டது. அங்கு தோண்டியபோது தண்ணீர் தொடர்ந்து ஊற்றெடுத்து ஓடியது. அது இந்நாள்வரை வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கின்றது. இதை அன்னையின் அற்புதம் என்றே மக்கள் நம்புகின்றனர். அங்கு தொடர்ந்து பல புதுமைகள் இடம்பெற்று வருகின்றன. பல நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர். நைரோபியின் Subukia இறைவனின் அன்னை, மரியின் கிராமம் திருத்தலம், கென்ய மக்களை ஒன்றிணைக்கும் புனித இடமாக விளங்கி வருகிறது. கத்தோலிக்கர் மட்டுமல்ல, பிற மதத்தவரும் அங்குச் சென்று தங்களின் விசுவாசத்தை ஆழப்படுத்தி வருகின்றனர். 200 கிலோ மீட்டர் கால்நடையாகச் சென்று பக்தர்கள் அன்னையின் அருள்பெற்றுச் செல்கின்றனர். தங்களின் மெக்காவாக இதனை மக்கள் கருதுகின்றனர். தற்போது அத்திருத்தலத்தின்மீது பெரிய திருச்சிலுவை வைக்கப்பட்டுள்ளது. புனித திருத்தந்தை 2ஆம் ஜான் பால் அவர்கள் இத்திருத்தலத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளார்.
அன்னை ஓர் அதிசயம் - லுகான் அன்னைமரியா, அர்ஜென்டினா
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் 16ம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்பட்டுவரும் லுகான் அன்னைமரியாத் திருவுருவம் புகழ்மிக்க ஒரு நிகழ்வைக் குறித்து நிற்கின்றது. இந்தத் திருவுருவம் இன்றும் அர்ஜென்டினாவின் லுகான் பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த லுகான் அன்னைமரியின் பரிந்துரையால் இக்காலத்தில் நடைபெற்ற ஒரு புதுமை குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஒரு மறையுரையில் குறிப்பிட்டார். உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையாகவே செபம் செய்தால் நாம் கேட்கும் வரம் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லி ஒரு புதுமையையும் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அர்ஜென்டினாவில் ஒரு தம்பதியரின் மகள் கடும் காய்ச்சலால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அச்சிறுமி உயிர்பிழைக்கமாட்டார் என மருத்துவர்கள் கைவிட்டுவிட்டனர். உடனடியாக அச்சிறுமியின் தந்தை பேருந்தில் ஏறி அங்கிருந்து ஏறக்குறைய 70 கிலோ மீட்டரில் இருக்கின்ற Zelaya நகரின் லுகான் அன்னைமரியா பசிலிக்கா சென்றார். அவர் அவ்விடத்தை அடைந்தபோது இரவு மணி 9. பசிலிக்காவைப் பூட்டி விட்டனர். இவர் மனந்தளராமல் பசிலிக்காவின் வெளியிலுள்ள இரும்புக்கம்பிக் கதவைப் பிடித்தவாறு முழந்தாளிட்டு இரவெல்லாம் கண்ணீரோடு செபித்தார். காலையில் மீண்டும் பேருந்தில் ஏறி அந்த மருத்துவமனையை அடைந்தார். மருத்துவமனையில் அவரது மனைவி, தங்களது மகளுக்கு காய்ச்சல் குறைந்துவிட்டது, மகள் பிழைத்துக்கொள்வார் என மருத்துவர்கள் கூறியதைக் கண்ணீருடன் விவரித்தார். பின்னர் அச்சிறுமியும் பிழைத்துக் கொண்டார். லுகான் அன்னைமரியா செய்த புதுமையைக் கண்டு அக்குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீர் விட்டு, அத்தாய்க்கு நன்றி செலுத்தினர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சொந்த நாடான அர்ஜென்டினாவிலுள்ள இந்த லுகான் அன்னைமரியாத் திருவுருவம் அர்ஜென்டினாவுக்கு அனுப்பப்படுவதற்காக பிரேசில் நாட்டில் செய்யப்பட்டது. அர்ஜென்டினாவில் வாழ்ந்த போர்த்துக்கல் நாட்டுக் குடியேற்றதாரர் ஒருவர், தான் வாழ்ந்த Santiago del Estero என்ற பகுதியில் கத்தோலிக்க விசுவாசத்தை உயிர்த்துடிப்புள்ளதாக்க விரும்பி அன்னைமரியா பெயரில் ஓர் ஆலயம் கட்ட விரும்பினார். அதனால் 1630ஆம் ஆண்டில் அமலமரி திருவுருவத்தைச் செய்யுமாறு ஒரு சிற்பியிடம் கேட்டார். இத்திருவுருவம் செய்யப்பட்டு அர்ஜென்டினாவின் Buenos Aires துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து மாட்டு வண்டியில் Santiago del Esteroக்கு எடுத்துச் செல்லப்பட்டது. போகும் வழியில் லுகான் ஆற்றங்கரையில் அந்த வண்டி மாடுகள் நின்று விட்டன. மாடுகள் ஆற்றைக் கடக்க மறுத்துவிட்டன. அந்த இடத்தில் மாடுகளை எவ்வளவோ அடித்துப் பார்த்தும் அவை நகரவில்லை. அந்த அமலமரித் திருவுருவம் வைக்கப்பட்டிருந்த பெட்டி அந்த வண்டியில் இருக்கும்வரை அந்த மாடுகள் நகரவே இல்லை. பல தடவைகள் பல வழிகளில் முயற்சித்தும் ஒன்றும் நடக்கவில்லை. பின்னர் அந்த வண்டியை விட்டு அப்பெட்டியை இறக்கியவுடன் அந்த மாடுகள் நகர்ந்தன. எனவே லுகானில் அன்னைமரியா கோவில்கொள்ள விரும்புகிறார் என்பதை அவ்வூர் மக்கள் புரிந்து கொண்டனர். அந்த இடம் தற்போதைய Zelaya நகரமாகும்.
வண்டி மாடுகள் நின்ற அந்த இடத்துக்கு அருகிலிருந்த Don Rosendo Oramas என்பவரின் வீட்டுக்கு மக்கள் இந்த அன்னைமரியா திருவுருவத்தை எடுத்துச் சென்றனர். Don Rosendo Oramas, அன்னைமரியாவுக்கென ஒரு சிறிய ஆலயம் கட்டினார். அந்த முதல் ஆலயம் நாற்பது ஆண்டுகள் இருந்தது. பின்னர் அவ்விடத்தில் 1685ஆம் ஆண்டில் பெரிய திருத்தலம் கட்டப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் மீண்டும் புதிய திருத்தலம் கட்டப்பட்டது. இவ்வன்னையின் புகழை அறிந்த திருத்தந்தை 13ஆம் லியோ, 1886ஆம் ஆண்டில் லுகான் அன்னைமரியா திருவுருவத்துக்கு திருஅவை ஒழுங்குப்படி முடிசூட்டத் தீர்மானித்தார். லுகான் அன்னைமரியாவுக்குச் சூட்டப்பட்டுள்ள கிரீடமானது சுத்தத் தங்கத்தாலானது. இக்கிரீடத்தில், வைரம், மாணிக்கம், மரகதம், நீலமாணிக்கம் என 365 கற்களும், 132 முத்துக்களும் பதிக்கப்பட்டுள்ளன. இதில் அர்ஜென்டினா குடியரசு மற்றும் பேராயரின் அதிகாரப்பூர்வ அடையாளச் சின்னங்களைக் கொண்ட தகடுகளும் உள்ளன. களிமண்ணாலான இத்திருவுருவம் 2 அடி உயரம் கொண்டது.
1930ம் ஆண்டில் திருத்தந்தை 11ம் பயஸ், லுகான் அன்னைமரியாவை, அர்ஜென்டினா, உருகுவாய், பரகுவாய் ஆகிய நாடுகளின் பாதுகாவலராக அறிவித்தார். அர்ஜென்டினாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே 1982ஆம் ஆண்டில் நடைபெற்ற Falklands சண்டையின்போது புனித திருத்தந்தை 2ஆம் ஜான் பால் அவர்கள் இந்த லுகான் அன்னைமரியா திருத்தலம் சென்று, லுகான் அன்னைமரியா திருவுருவத்துக்கு தங்க ரோஜாவைக் காணிக்கையாகக் கொடுத்தார்.
அன்பு நேயர்களே, தன்னைத் தேடிவரும் பிள்ளைகளுக்குத் தினமும் புதுமைகள் செய்யும் அன்னை மரியிடம் நாமும் நம்பிக்கையோடு செபிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்