MAP

கேரளாவின் அழகிய வயநாடு மலைப்பகுதி கேரளாவின் அழகிய வயநாடு மலைப்பகுதி  

வனச் சட்டங்களில் மாற்றங்களை எதிர்க்கும் கேரளத் தலத்திருஅவை!

கேரளாவில் ஏறத்தாழ 30 விழுக்காடு காடுகள் உள்ளன, ஏறக்குறைய 30 இலட்சம் விவசாயிகள் இந்த காடுகளின் ஓரங்களில் வாழ்கின்றனர், அவர்களில் பலர் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கேரளாவின் சீரோ மலபார் திருஅவையின்  ஆயர்கள்  அம்மாநில அரசு வனச் சட்டங்களில்  கொண்டுவந்துள்ள மாற்றங்களை எதிர்க்கின்றனர் என்று கூறியுள்ளது  யூக்கான் செய்தி நிறுவனம்.

மேலும் ‘வன அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கட்டுப்பாடற்ற அதிகாரங்களை’ அவர்கள் முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்ற எண்ணத்தில் அவர்கள் இந்த எதிர்பைத் தெரிவிப்பதாகவும் அச்செய்தி நிறுவனம் உரைக்கிறது.

கேரளாவில் உள்ள சீரோ மலபார் திருஅவையின் கத்தோலிக்க ஆயர்கள், 1961-ஆம் ஆண்டின் கேரள வனச் சட்டத்தில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்தங்களை எதிர்த்து வருகின்றனர் என்றும், ஆனால் வனப் பாதுகாப்பை மேம்படுத்தவும், சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்யவுமே, இந்தச்சட்டத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன என்று ஆளும் கம்யூனிஸ்ட் தலைமையிலான மாநில அரசு கூறுகிறது என்றும் எடுத்துக்காட்டுகிறது அச்செய்திக் குறிப்பு.

அதேவேளையில், இந்த மாற்றங்கள் காடுகளுக்கு அருகில் வாழும் விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், குறிப்பாக வன அதிகாரிகளுக்கு அதிகப்படியான அதிகாரங்களை வழங்குவதன் மூலம் தனிநபர்களை பிடியாணை (Warrant) இல்லாமல் கைது செய்வது அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் சொத்துக்களை தேடுவது போன்றவை நிகழ வாய்ப்புள்ளது என்பதாலேயே இதனைத் தாங்கள் எதிர்ப்பதாகவும் ஆயர்கள் வாதிடுகின்றனர் என்றும் உரைக்கிறது அச்செய்தி.

மேலும் காடுகளுக்கு அருகில் கழிவுகளை கொட்டுவதைக் குற்றமாக்குவது மற்றும் அபராதத் தொகையை அதிகரிப்பது குறித்தும் ஆயர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளதாக எடுத்துக்காட்டுகிறது அச்செய்தி .

அதிகரித்து வரும் மனித-விலங்கு மோதல்கள், குறிப்பாக காட்டுப்பன்றிகள் மற்றும் யானைகள் பயிர்களை அழித்து, சில வேளைகளில் விவசாயிகளைக் கொல்வது சம்மந்தமான பிரச்னைகளைத் தீர்க்க  மாநில அரசு முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள ஆயர்கள், வனப் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், வன விலங்குகளின் தாக்குதலில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் சட்டத்தை அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துவதாகவும் உரைக்கிறது அச்செய்தி.

2017 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், மனித-விலங்கு மோதல்களால் 445 பேர் இறந்துள்ளனர். மேலும் 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மட்டும் 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 31 பேர் காயமடைந்துள்ளனர். கேரளாவில் ஏறத்தாழ 30 விழுக்காடு காடுகள் உள்ளன. ஏறக்குறைய 30 இலட்சம் விவசாயிகள் இந்தக் காடுகளின் ஓரங்களில் வாழ்கின்றனர். அவர்களில் பலர் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 ஜனவரி 2025, 14:52