அன்னை ஓர் அதிசயம் - அதிசய பனிமாதா திருத்தலம், கள்ளிகுளம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது தெற்கு கள்ளிகுளம் பனிமாதா திருத்தலம். இது இந்தியாவின் முன்னணி அன்னைமரியின் ஆலயங்களில் ஒன்றாக உள்ளது. கள்ளிகுளம் கிராமத்தில் ஒரு காலத்தில் கள்ளிச்செடிகளும் முட்புதர்களும் மண்டிக் கிடந்தன. கள்ளிகுளத்தில் ஏறத்தாழ 1700ஆம் ஆண்டுவாக்கில் மக்கள் முதன் முதலில் குடியேறினர். கள்ளிகுளம், வடக்குன்குளத்திற்கு ஏறக்குறைய 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு வடக்குன்குளம் பங்குத்தந்தையரே மேய்ப்புப்பணிகளைச் செய்து வந்தனர். கள்ளிகுளம் மக்கள் வடக்குன்குளம் பங்குத்தந்தையின் உதவியுடன் ஒரு சிறிய ஓலைக் குடிசையில் சிற்றாலயம் அமைத்து அதை அன்னைமரியாவுக்கென அர்ப்பணித்து செபித்து வந்தனர். 1838ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மார்ட்டின், மோசேட் என்ற இரு இயேசு சபை குருக்கள் கள்ளிகுளத்திற்கு வந்தனர். அவர்களின் கண்காணிப்பில் பழைய சிற்றாலயம் சீரமைக்கப்பட்டு பெரிதாகக் கட்டப்பட்டது. கள்ளிகுளம் நீண்ட காலமாகத் தேரைக்குளம் என்றே அழைக்கப்பட்டது. ஆலயம் அமைந்திருந்த இடம் தேரைக் குளமேயாகும். காலப்போக்கில் கள்ளிகுளத்தில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை பெருகியது. அதனால் புதியதோர் பெரிய ஆலயம் தேவை என்பதை மக்கள் உணர்ந்தனர்.
1884ஆம் ஆண்டு கள்ளிகுளம் கிராம மக்களும், அங்கு மறைப்பணியாற்றிய இயேசுசபை அருள்பணியாளர்களும் அன்னை மரியின் புகழ்பாட ஓர் ஆலயம் அமைப்பதென முடிவெடுத்தனர். ஆலயம் கட்டுவதற்கான இடம், ஆலய அளவு ஆகியவை குறித்து அவர்களால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. அவர்கள் அன்னையை வேண்டினர். அது ஒரு கடும் கோடை காலம். ஒரு நாள் காலையில் கள்ளிகுளம் மக்கள் வியக்கத்தக்க ஒரு நிகழ்வைக் கண்டனர். அந்தக் கோடை காலத்திலும் ஊரின் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் பனியாலான போர்வையால் போர்த்தப்பட்டிருந்தது. அன்றுதான் மக்கள் அன்னையின் ஆசீரைக் கண்டுணர்ந்தனர். புதிய ஆலயம் அமைய வேண்டிய இடத்தையும் அதன் அளவையும் அன்னை மரியே பனி வடிவில் அற்புதமாகக் குறித்துக் காட்டினார் என்று சொல்வார்கள். 1884ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ஆலயத்திற்கு இயேசு சபை அருள்தந்தை கவுசானல் அவர்கள் அடிக்கல் நாட்டினார். அதன் வண்ணக் கோபுரம், தொலை தூரத்தில் நடமாடும் மக்களையும் அன்னையின் ஆசி பெற அழைப்பது போன்ற தோற்றம் கண்கொள்ளாக் காட்சியாகத் திகழ்கிறது. இந்த ஆலயத்தின் சிற்பி, அருட்திரு.விக்டர் டெல்பெக் அடிகளார் ஆவார். சிலுவை வடிவத்தில் இவ்வாலயத்தை அமைக்க அவர் திட்டமிட்டார்.
மக்கள் தங்களின் சொந்த உழைப்பினால் இவ்வாலயத்தைக் கட்டியெழுப்பினர். 1885ஆம் ஆண்டு விண்ணெட்டும் உயர ஆலயத்தை அவ்விடத்தில் கட்டி அன்னையின் திருவுருவத்தை நிறுவி அவ்வாலயத்தை பனிமாதாவுக்கு அர்ப்பணித்தனர். இந்த ஆலயத்தின் மொத்த நீளம் 151 அடியாகும், மற்றும் அகலம் 56 அடியாகும். பெரிய கோபுரம் மட்டும் 160 அடி உயரமாகும். இதில் ஏறிச் செல்வதற்கு உட்புறமாக 143 அடுக்கு வளைவுப்படிகள் உள்ளன. தூத்துக்குடியை அலங்கரிக்கும் புனித பனிமய அன்னை பேராலயத்திற்கு அடுத்தபடியாக தென்னகத்தில் பனிமயத்தாயின் பெயரால் புகழ் பெற்று விளங்கும் திருத்தலம் கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயமாகும்.
1939ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 23ஆம் நாள் கள்ளிகுளம் வரலாற்றில் பொன்னான நாள். பாறைக்கிணறு குருசடி அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆறு சிறுவர்களுக்கு மாலை 6.30 மணியளவில், மலையில் அன்னைமரியா காட்சியளித்து அவ்வூரை ஆசீர்வதித்துள்ளார். அக்காட்சியின்போது அன்னையின் பொற்பாதம் பதிந்த இடத்தில் அழகியதோர் கெபி தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதனை, தூத்துக்குடி முதல் ஆயர், மேதகு பிரான்சிஸ் திபுர்சியுஸ் ரோச் அவர்கள், 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் நாள் திருப்பொழிவு செய்து திறந்து வைத்தார். அப்போது அவர் கள்ளிகுளத்தைத் ‘தென்பாண்டி நாட்டின் லூர்துபதி’ என அழகு பெயர் சூட்டி அழைத்து மகிழ்ந்தார். அன்னையின் அற்புதக் காட்சியினால் கள்ளிகுளத்தின் சிறப்பு தென்னகமெங்கும் பரவியது. அது மரியின் திருத்தலமாக மாறியது. அன்னை காட்சி தந்த மலையானது பற்பல காலங்களில் பங்குத் தந்தையர்களால் அழகுபடுத்தப்பட்டது. மாதா கெபி வரை, முறையான படிகள் வெட்டப்பட்டன. இன்று மலையேறும் படிக்கட்டைத் தழுவிய வண்ணம் அழகிய செபமாலை மறையுண்மைகள் தலங்களையும் சிலுவைப் பாதைத் தலங்களையும் காணலாம். இன்றும் மக்கள் கூட்டம் மலை மாதாவைத் தரிசித்து பல வரங்களைப் பெற்று வருகின்றது. ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையில் அன்னைமரியின் பக்தர்கள் கூட்டம் பனி மலையில் அலை மோதுகிறது. கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயமும், அன்னையின் காட்சி மலையும் வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய அதிசயத் திருத்தலமாகும். இத்திருத்தலத்தின் திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் நாள் சிறப்புறக் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் வாழ்க்கையில் மலைபோல் வருகின்ற துன்பங்களெல்லாம் அன்னையின் அருளால் பனிபோல் மறையும் என்பதை, பனிமாதாவை அணுகுவோர் அனைவரும் உணர்வர்.
பனிமாதாவிடம் நம் ஆசைகளையும் ஏக்கங்களையும் எடுத்துரைத்து அருள் பெறுவோம்.
அன்னை ஓர் அதிசயம் - மழை மலைத் தாயின் புனித அருள் தலம்
காஞ்சி மாவட்டத்தில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அச்சிறுபாக்கம் பள்ளிப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பசுமையான மலைக்குன்றில் அமைந்துள்ளது மழை மலைத் தாயின் புனித அருள் தலம். இத் திருமலை நல்லாயன் குன்று என்றும் அழைக்கப்படுகிறது.
1960க்கும் 70க்கும் இடையிலான காலத்தில் தமிழகத்தில் புயல், வறட்சி போன்ற இயற்கை அழிவுகள் நிகழ்ந்தன. 1966ஆம் ஆண்டு நவம்பரில் ஒரு புயல் சென்னையில் பெரும் சேதம் ஏற்படுத்தியது. ஒன்றன் பின் ஒன்றாக தமிழகத்தை புயல்கள் தாக்கியதோடு மட்டுமல்லாமல் 1967 முதல் 1969 வரை தமிழகத்தை கடும் வறட்சி பாதித்தது.
அப்போது அருட்தந்தை புஷ்பம் அடிகளார் மரியன்னையின் திருஉருவத்தை ஒரு தேரில் வைத்து அச்சிறுபாக்கம் பங்கு ஆலயமான புனித சூசையப்பர் ஆலயத்திலிருந்து 65 கி.மீ. தொலைவு வரை மழை வேண்டி ஜெபித்துக்கொண்டு பொதுமக்கள் புடைசூழ எடுத்துச் சென்றார். தேர் புறப்பட்ட 9ஆம் நாள் மறுபடியும் ஆலயத்தை வந்தடைந்தவுடன் மக்களின் மனம் குளிரும் வண்ணம் பெருமழை பெய்தது. இதைக் கண்ட மக்கள் திரளாகக் கூடி நின்று மழையைக் கொடுத்த "மழை மாதாவே" என்று குரலெழுப்பி மகிழ்ந்தனர்.
மலையில் வீற்றிருந்து மழையைத் தந்த அன்னைக்கு "மழை மலை மாதா" என்று பெயரிட்டு மக்கள் அன்றிலிருந்து வழிபட ஆரம்பித்தனர்.
செங்கல்பட்டு மறை மாவட்டத்தின் துணைப் பாதுகாவலியாக மழை மலை அன்னை கொண்டாடப்படுகிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்