திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – ஆணைமடல் பகுதி 11
மெரினா ராஜ் – வத்திக்கான்
எதிர்நோக்கின் அடையாளங்கள் அதை தங்களில் முதன்மைப்படுத்தும் இளையோர்க்கு தேவை. தற்போது இளையோர் தங்களது கனவுகள் நொறுக்கப்பட்டது போன்று காண்கின்றார்கள். அவர்களது எதிர்காலம் ஏமாற்றம் அடையவிடக் கூடாது. இளையோரது உற்சாகத்தில் எதிர்காலம் நிறுவப்பட்டுள்ளது. குறிப்பாக பேரழிவுகள் மற்றும் சமூகத்துயரங்கள் ஏற்படும்போது தங்களது சட்டையின் கைப்பகுதியை மடக்கிக்கொண்டு பிறருக்கு உதவும் போது அவர்களது உற்சாகமும் ஆற்றலும் ஏராளமாக வெளிப்படுகின்றது. இதை நாம் காணும் போது நமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. ஆனால் அத்தகைய இளையோர் பலர் இன்று நம்பிக்கையின்றியும் எதிர்நோக்கின்றியும், அதனை இழந்து, வாழும் நிலையில் இருப்பதை நாம் காண்கின்றோம். இதைக் காணும்போது நமக்கு வருத்தமளிக்கின்றது.
எதிர்காலம் நிச்சயமற்ற ஒன்றாக இருக்கும்போது, கனவுகள் நனவாகாமல் இருக்கும்போது, வேலையோ, பொறுப்போ, படிப்போ நிச்சயமற்ற நிலையில் இருக்கும்போது, நமது விருப்பங்களை நிறைவேற்ற முடியாத நிலையில் வருந்தும்போது, நிகழ்காலத்தை மனச்சோர்விலும் சலிப்பிலும் வாழ்வது தவிர்க்க முடியாததாகிறது. போதைப்பொருட்களின் மாயை, ஆபத்து, நிலையற்றவற்றைப் பின்தொடர்வது போன்றவை மற்றவர்களை விட அவர்களிடம் குழப்பத்தை உருவாக்கி, வாழ்க்கையின் அழகையும் அர்த்தத்தையும் மறைத்துவிடுகின்றது. அவர்களை இருண்ட படுகுழிகளில் நழுவச் செய்து, சுய அழிவுச் செயல்களைச் செய்யத் தள்ளுகிறது. இத்தகைய நிலையில் திருஅவையின் யூபிலி அவர்களுக்கு உந்துதல் அளித்து நல்வாழ்விற்கு அழைக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கின்றது. புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்துடன் குழந்தைகள், மாணவர்கள், திருமண ஒப்பந்தம் செய்யப்பட்ட தம்பதிகள், இளைய தலைமுறையினரை கவனித்துக்கொள்வோம்! இளைஞர்களுடனான அருகிருப்பும், மகிழ்ச்சியும் திருஅவை மற்றும் உலகின் எதிர்நோக்காக இருக்கின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்