தடம் தந்த தகைமை - ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால்....
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும், (மாற் 9:35) என்றார் இயேசு.
இயேசு அறிமுகம் செய்த இறையாட்சியில் தலைவர் - தொண்டர், முதல்வர் - பணியாளர் எனும் படிநிலைகள் கிடையாது. தாம் ஒரு போதகராக இருந்தும் தம் சீடர்களை நண்பர்களாகவும் (யோவா 15:15), தம்மை அச்சீடர்களின் பணிவிடையாளராகவும் (லூக் 22:27) ஆக்கிக் கொண்ட பாங்கு உலகத் தலைமைகளுக்கெல்லாம் அவர் விடுத்த சவால்.
முந்தி வந்தவர், மூத்தவர், முனைவர், முதல் மதிப்பெண் பெற்றவர், முரண்படாதவர், முறைப்படி வந்தவர் என துதி பாடி முதன்மைகளைக் கவ்வுவதெல்லாம் இயேசுவின் இறையாட்சிக்கு எதிரானது. பணிவும் பணிவிடை மனமுமே குழும வாழ்விற்கான அழகு.
இவையிரண்டும் குறைபடும் குழுமத்தில் குழப்பமும் குறைகூறுதலுமே குடிவாழும். ஏனெனில் இறையாட்சி என்பது மன்னராட்சியோ, சர்வாதிகாரத்தனமோ அல்ல, அது முழுக்க முழுக்க பொதுநலக் கூட்டுமுயற்சியில் மலரும் நேயநிலை. இன்று இயேசுவின் இயக்கமாம் திருஅவையில் பணிவிடையாளர்களைவிடத் தலைவர்கள்தான் தென்படுகிறார்கள். உண்மையான தலைமையின் நிலைமையை இயேசு காலடி கழுவி கல்வாரியில் பாடமாக்கினார். அதனைக் கற்றலும் கருத்தாய்ப் பின்பற்றலுமே திருஅவையின் முதல் வேலை.
இறைவா! நீர் ஒரு பகட்டில்லாப் பணியாளர் என்பதை உணர்ந்த நானும் உம் வழியில் பயணிக்கத் துணையாகும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்