காசாவில் மீண்டும் வாழ்வைத் துவக்க நம்பிக்கைப் பிறந்துள்ளது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மத்தியக் கிழக்குப் பகுதியில் இடைக்காலப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது காசா பகுதி மக்களிடையே புதிய நம்பிக்கைகளை விதைத்துள்ளதாகவும், மக்கள் மீண்டும் வாழத் துவங்கியுள்ளார்கள் எனவும் கூறினார் காசாவின் ஒரே கத்தோலிக்கப் பங்குதளத்தின் பங்குகுரு Gabriel Romanelli.
ஹாமாஸ் குழுவுக்கும் இஸ்ராயேலுக்கும் இடையே போர் நிறுத்தம் இடம்பெற்றுவருவது குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட அருள்பணி ரொமனெல்லி அவர்கள், ஒராண்டிற்கு மேலாக இடம்பெற்றுவரும் போர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது, உடனடி அமைதியைக் குறிக்கவில்லை, இன்னும் துப்பாக்கிச் சுடுதல் மற்றும் குண்டுவெடிப்புகளின் சப்தங்களைக் கேட்க முடிகிறது என மேலும் உரைத்தார்.
முழு அமைதி திரும்ப நாட்கள் ஆகும் என்பது உண்மையெனினும், மக்களிடம் மீண்டும் வாழ்வைத் துவக்கலாம் என்ற நம்பிக்கைப் பிறந்துள்ளது என உரைத்த அருள்பணி ரொமனெல்லி அவர்கள், மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிவர இன்னும் அச்சம் கொண்டேயுள்ளார்கள், ஏனெனில் பல பகுதிகள் இன்னும் இராணுவத்தின் இடமாகவே நோக்கப்படுகின்றன என்றார்.
போர் நிறுத்தக் காலத்திலும் கடலுக்குச் சென்று நீந்துவதற்கான சிறு ஆசைக்குக்கூட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக உரைத்த அருள்பணியாளர், எவ்வாறு வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவது, எவ்வாறு வாழ்வைத் துவங்குவது என்ற நிச்சயமற்ற நிலை மக்களில் இன்னும் நிலவி வருவதாக மேலும் கூறினார்.
காசாவில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும், சுத்தக்குடிநீர், மின்சாரம் போன்றவைகளும் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாக இருப்பதாகவும், காசா பகுதி முற்றிலுமாக சேதப்படுத்தப்பட்டுள்ளதால் அதனை மீண்டும் கட்டியெழுப்பவேண்டிய பணி துவக்கப்படவேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார் அருள்பணி ரொமனெல்லி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்