பிலிப்பீன்சில் இடம்பெற்ற அமைதிக்கான பேரணியில் திரளானோர் பங்கேற்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஜனவரி 13, இத்திங்களன்று, Iglesia ni Cristo (INC) என்ற அமைப்பின் ஏறத்தாழ 20 இலட்சம் உறுப்பினர்கள் பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் இடம்பெற்ற அமைதி பேரணியில் ஒன்றுகூடி துணை அரசுத் தலைவர் Sara Duterte-வை பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சிகளை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தனர் என்று யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
அந்நாட்டு அரசுத் தலைவர் ஃபெர்டினாண்ட் மார்கோஸுக்கும் துணை அரசுத் தலைவர் Duterte-வுக்கும் இடையிலான அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் இந்தப் பேரணி இடம்பெற்றது என்றும், அரசியல் தலைவர்கள் பொது சேவை மற்றும் அமைதியில் கவனம் செலுத்த வேண்டும் என்று ICN அமைப்பின் அமைச்சர் Rommel Topacio அவர்கள் வலியுறுத்தினார் என்றும் அச்செய்தி நிறுவனம் மேலும் கூறுகிறது
இந்தப் பேரணியானது ஊழல், இலஞ்சம் மற்றும் தவறான நடத்தை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக Duterte-வை பதவி நீக்கம் செய்வதிலிருந்து பாதுகாக்கும் முயற்சியாக சிலரால் பார்க்கப்படுகிறது என்று உரைக்கும் அச்செய்தி, இப்பேரணி அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கப் பெற்றது என்றும், Duterte-வை பதவி நீக்கம் செய்வதற்கான உந்துதல் அதிகரித்து வரும் நிலையில் அவரைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர் என்றும் விளக்கமளிக்கிறது.
அதேவேளையில், ஆர்வலர்கள் மற்றும் தலத் திருநிலையினர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஊழல் எதிர்ப்பு விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்காக இம்மாத இறுதியில் தங்கள் சொந்த பேரணியை நடத்துவதற்குத் திட்டமிட்டு வருகின்றனர் என்றும் கூறுகிறது அச்செய்திக் குறிப்பு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்