வாரம் ஓர் அலசல் - சாதி, மதம் தாண்டிய பொங்கல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
- "தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர் தங்கள்
- செம்மை வாழ்வின் சிறப்பு நாள்; வீடெல்லாம்
- பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய் ஏலமும் புது நெருப்பேற்றி அரிசியைப்
- பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்
- எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்ப நாள்!"
-என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தை முதல் நாள் தமிழருக்கு புது வாழ்வு பிறக்கும் நாள் என சிறப்பாகப் பாடியிருக்கிறார்.
சாதி, இனம், மதம் தாண்டி கொண்டாடும் பொங்கல் என்றுமே சமத்துவப் பொங்கல் தான்.
"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று நம் மக்கள் பொதுவாகச் சொல்லுவார்கள். ஏர் உழுது விதை விதைத்த உழவனின் வியர்வைக்குப் பரிசாகத் தானிய மணிகள் கிடைக்கும் தை மாதம் தான் விவசாயிகளின் உழைப்புக்கு வெளிச்சமூட்டக்கூடிய மாதம்.
நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் திருவிழா தான் இந்த பொங்கல் திருவிழா.
- "சுழற்றும் ஏற்பின்னது உலகம் அதனால்
- உழந்தும் உழவே தலை." - என்று திருவள்ளுவர் சொன்னது போல் உழவுத் தொழில் தான் உலகின் தலையாய தொழில். 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்றார் மகாகவி பாரதியார். அந்த உழவருக்கான திருநாள் தான் பொங்கல், ஆம் இது ஒரு நன்றியின் விழா.
தமிழ்நாட்டில் தை மாதத்தின் முதல் நாளில் பொங்கல் விழா மங்களச் சிறப்போடு கொண்டாடப்படுகிறது. இது ஓர் அறுவடைவிழா. இறைவன் நல்கிய நல் விளைச்சலுக்காக அவருக்கு நன்றி செலுத்தும் விழா. பொதுப்படக் கூறின் இந்திய விழாக்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட புராண நிகழ்வின் அடிப்படையில் எழுந்ததாகவே இருக்கும். ஆனால் பொங்கல் விழாவைப் பொருத்தமட்டில், அது எத்தகைய புராணத்தையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. இறைவன்பால் மக்கள் கொண்டிருந்த நன்றிப் பெருக்கே பொங்கல் விழாவாக உருவெடுத்தது.
ஆகவே பொங்கல் விழா இன,மத வேறுபாடின்றி தமிழக மக்கள் அனைவருக்குமுரிய ஒரு பொது விழா. ஒரு சமூக விழா. நிலத்தை பண்படுத்திப் பயிர் செய்யும் உழவர்கள் மட்டுமல்ல, அதன் பலனை உண்டு மகிழும் அனைவருமே இந்நன்றிப் பெருவிழாவைக் கொண்டாட வேண்டும்.
தமிழர்களின் கலாச்சார அடையாளமாய் நிமிர்ந்து நிற்கிறது பொங்கல் விழா. சங்ககாலமான கி.மு இருநூறுக்கும் கி.பி முன்னூறுக்கும் இடைப்பட்ட காலத்திலேயே தமிழர்கள் பொங்கல் விழா கொண்டாடியதாக நம்பப்படுகிறது. அறுவடை விழாவாகக் கொண்டாடப்படும் பொங்கல், தங்களுக்கு நல்ல விளைச்சலைக் கொடுத்த இயற்கைக்கும், இறைவனுக்கும் நன்றி செலுத்தவும், தங்கள் கவலைகளை விலக்கி புதிய பயணத்தைத் துவங்கவும் கொண்டாடப்படுகிறது. மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையின் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. தமிழினத்தின் ஒட்டுமொத்த பண்பாட்டின் அடையாளமாகக் கொண்டாடப்படுவது தான் "அறுவடைத் திருநாள்", "தமிழர் திருநாள்" என்று அழைக்கப்படுகின்ற பொங்கல் திருநாள். "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" என்று கலித்தொகை அன்றே தைத்திங்களைக் கொண்டாடி இருக்கிறது.
- "மது குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப்
- புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்" - என்று பொங்கல் விழாவைப் பற்றிய குறிப்பு சீவகசிந்தாமணியில் இருப்பதால் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் பொங்கல் விழா கொண்டாடி இருக்கிறார்கள் என்பது புலனாகிறது.
பொங்கல் விழா தமிழர் விழாவாக பெருமையுடன் கொண்டாடப்படும் அதே வேளையில் பொங்கல் விழாவின் அர்த்தத்துடனான விழாக்கள் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றன.
ஆதிகாலத்திலேயே விவசாயிகள் அறுவடை விழா கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். கிரேக்க, உரோம, எகிப்திய, எபிரேயக் கலாச்சாரங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவடை விழா கொண்டாடியிருக்கின்றன.
இவ்வாறு உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடை விழாக்கள் இயற்கையோடு மனிதனுக்கு உரிய தொடர்பையும், இறைவனோடும் சக மனிதனோடும் மனிதன் கொள்கின்ற உறவையும் வெளிப்படுத்துபவையாக திகழ்கின்றன. எந்த ஒரு விழாவும் வெறும் அடையாளத்தை மட்டும் அணிந்து கொண்டு அதன் அர்த்தத்தை இழந்து விடுமெனில் பயனற்றதாகி விடுகிறது. விழாக்கள் அதன் அர்த்தங்களை அறிந்து கொள்ள அழைப்பு விடுக்கின்றன. மனிதனோடும், இயற்கையோடும், இறைவனோடும் கொண்டுள்ள உறவை உறுதிப்படுத்தவும், சீரமைக்கவும் இந்த விழாக்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.
தமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்படும் அதே நாளில் இந்தியா முழுவதும் அறுவடை விழா பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் லகோரி என்றும், அஸ்ஸாமில் போகாலி பிகு என்றும், உத்தர பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் பீகாரில் மகர் சங்கராந்தி என்றும், ஆந்திராவில் போகி என்றும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. கேரளாவில் இந்த நாளில் தான் மலையில் மகர ஜோதி ஏற்றப்பட்டு வழிபடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையும், கிறிஸ்தவர்களும்
ஒரு சமுதாயத்தின் பண்பாடு, அச்சமுதாயத்தில் நிலவும் சமயத்தோடு நெருங்கிப் பிணைக்கப்பட்டுள்ளது. இவ்வுண்மையை நன்குணர்ந்த திருஅவை, பண்பாட்டிற்குப் பெரும் மதிப்பு அளித்து வந்துள்ளது. திருஅவைக்கும் பண்பாட்டிற்குமுள்ள நெருங்கிய தொடர்பை 2ஆம் வத்திக்கான் சங்கம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. திருஅவையின் "அமைப்பிற்கு வெளியே தூய்மை, உண்மை என்னும் அம்சங்கள் பல காணப்படுகின்றன", என்று இச்சங்கம் ஏற்றுக்கொள்ளுகிறது. எனவே "பிற மறைகளிலே காணக் கிடக்கின்ற உண்மையானதும், தூய்மையானதுமான எதையும் திருஅவை உதறித் தள்ளுவதில்லை". மாறாக அவைகளை "உண்மையாகவே மதிக்கிறது". (கிறிஸ்தவமில்லா மறைகள்-2) "இயலுமாயின் ...... இறைபணியிலும் கூட அதை ஏற்றுக்கொள்ளுகிறது" (இறைபணி-37, 40) என்கிறது சங்க ஏடு.
தற்போது அனைத்து கிறிஸ்தவ பள்ளிகளிலும், இதர கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களிலும் பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். கிறிஸ்தவம் எந்த கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிரானது அல்ல. கிறிஸ்தவ கலாச்சாரம் என்ற ஒரு தனிப்பட்ட கலாச்சாரம் என்று எதுவும் இல்லை. ஆனால் ஐரோப்பியர்கள் இந்தியர்களுக்கு நற்செய்தி அறிவித்ததினால் அவர்களின் தாக்கம் இந்திய கிறிஸ்தவர்களிடம் இருக்கிறது. நம்மை பொறுத்தவரை இது தேவையில்லாத ஒன்றுதான். குறிப்பாக திருமணத்தில் கோர்ட் சூட் அணிவது, கவுன் அணிவது இது போன்ற சில காரியங்களைச் சொல்லலாம்.
தமிழர்களாக, தமிழ் மொழி வழியாக, ஆண்டவரை தொழுது கொள்ளும் போது, தமிழ் பண்பாட்டோடு ஆண்டவரை ஆராதிப்பதுதான் முறையானதும்கூட. விவசாயிகளோடு நாம் சேர்ந்து அறுவடைக்காக கடவுளுக்கு நன்றி சொல்வது ஏற்புடையதுதானே. பொங்கல் பண்டிகை வரலாற்றுரீதியாக விவசாயச் செயல்பாடுகளோடு தொடர்புடைய ஒன்று. இம்மாதிரி விவசாயத்தோடு தொடர்புடைய பண்டிகைகள், விழாக்கள் உலகம் முழுக்கவே இருக்கின்றன. அவற்றில் பெருமளவில் எல்லாச் சமூகங்களும் கலந்தே பங்கேற்கின்றன.
தமிழ் மொழியோடு, அதன் மண்ணோடு, அது சார்ந்த பண்பாட்டு நடவடிக்கைகளோடு இயங்கும் அனைவரும் தமிழர்களே. இங்கு சாதி, மத எல்லைகள் அனைத்துமே அடுத்தகட்டம்தான்.
பொங்கலைக் கடவுளுக்குப் படைத்தல்தான் பொங்கல் விழாவின் முக்கியக் கட்டமாய் அமைந்துள்ளது. இப்பொங்கல், நிலத்திலிருந்து கிடைக்கும் முதற்கனியாகிய அரிசியிலிருந்து சமைக்கப்படுகிறது. நிலத்தின் முதற்கனியை இறைவனுக்குப் படைப்பது திருவிவிலியத்தில் எங்கும் காணப்படுகிறது.
பழைய ஏற்பாட்டில், ஏப்ரல் மாதத்தில் பார்லியையும் (2 சாமு 21:9) மே மாதத்தில் கோதுமையையும் மக்கள் அறுவடை செய்தனர். அப்போது அவர்கள் எல்லாரும் மகிழ்ந்நிருந்தனர். (இச16:15) இம்மகிழ்ச்சியில் மக்கள் படைப்பின் இறைவனை மறந்துவிடவில்லை. நல்ல விளைச்சலை நல்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தினர் (திபா 67:6). அறுவடை விழாக் கொண்டாடி மகிழ்ந்தனர். இவ்விழாவின்போது அறுவடையின் முதற்கனியாகிய கதிர்கட்டை இறைவனுக்குக் காணிக்கையாக அளித்தனர் (லேவி 23:10). இதனால்தான் அறுவடைவிழா, 'முதற்கனியின் நாள்' என்று அழைக்கப்பட்டது (எண் 28:26). இதன் தொடர்ச்சியாகவே, மிருகங்களின் தலைக்குட்டியையும், மனிதர்கள் தம் தலைப்பேற்றையும், குறிப்பாக ஆண்குழந்தையையும் (விப13:12,தொ.நூ22:2) இறைவனுக்குக் காணிக்கையாக அளிக்கும் வழக்கம் உருப்பெற்றது.
ஆகவே, சாதி மத எல்லைகளைக் கடந்து இந்த தமிழர் விழாவை சிறப்பிப்போம். உலகமெங்கும் பல்வேறு நாட்களில், பல்வேறு பெயர்களில் சிறப்பிக்கப்படும் அறுவடையின் நன்றி விழா, உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது.
அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்