குடியேற்றதாரரை நாட்டைவிட்டு அனுப்பும் செய்தி காயப்படுத்துகிறது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அமெரிக்க ஐக்கிய நாட்டில் அரசோடு பதிவுச் செய்யாமல் வாழ்ந்துவரும் குடியேற்றதாரர்களைக் கூண்டோடு வெளியேற்ற புதிய அரசு முடிவுச் செய்திருப்பது குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட அந்நாட்டின் Chicago கர்தினால் Blase Cupich அவர்கள், மனித மாண்பு, நீதி, குடியேற்றதாரர்கள் மற்றும் அடைக்கலம் தேடுவோரின் உரிமைகளுக்கென திருஅவை தன் குரலை மீண்டும் எழுப்பும் என தெரிவித்தார்.
சிகாகோ பகுதியில் அனுமதியின்றி வாழும் குடியேற்றதாரர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்ற செய்தி, கவலை தருவது மட்டுமல்ல, ஆழமாகக் காயப்படுத்துவதாகவும் உள்ளது என்றார் கர்தினால்.
பொதுநலனுக்காக உழைக்க வேண்டிய புதிய அரசு, போதிய ஆவணங்களற்ற குடியேற்றதாரர்களை வெளியேற்ற முயன்றுவருவது, அப்பகுதியின் குயேற்றதாரர் வரவேற்றல் பண்பிற்கு எதிராகச் செல்வதாகும் என உரைத்த கர்தினால் Cupich அவர்கள், சிகாகோ பகுதியில் வாழும் அனைத்து மக்களும் குடியேற்றதாரர்களால் பலன் பெற்றவர்களே எனவும் எடுத்துரைத்தார்.
சட்டத்தின் ஆட்சியையும் ஒவ்வொரு மனிதனின் மாண்பையும் மதிக்கும் தீர்வுகள் பேச்சுவார்த்தைகள் வழி எட்டப்பட வேண்டும் என்ற விண்ணப்பதையும் விடுத்தார் கர்தினால்.
போதிய ஆவணங்கள் இன்றி நாட்டிற்குள் அனுமதியின்றி குடியேறிய பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்ற அரசின் முயற்சிகளுக்கு தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்ட கர்தினால் Cupich அவர்கள், இது குடும்ப வாழ்வுக்கு எதிரானது என மேலும் உரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்