MAP

கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ  (AFP or licensors)

இணைந்து பணியாற்றுவது ஒன்றிப்பின் அடையாளம்! : கர்தினால் சாக்கோ

கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துகிறது. கிறிஸ்துவின் பணியின் பின்னணியில் திருஅவையும் கிறிஸ்தவர்களும் அந்தந்த சூழல்களுக்கேற்ப இதனைச் செயல்படுத்த வேண்டும் : கர்தினால் சாக்கோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது பகிரப்பட்ட நம்பிக்கை மற்றும் ஒருவருக்கொருவர் மீதான மரியாதையில் வேரூன்றிய ஆன்மிக மற்றும் நடைமுறை பெருமுயற்சியாகும் என்று கூறியுள்ளார் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ.

உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கத் தலத் திருஅவைகள் பிற கிறிஸ்தவ சபைகளுடன் இணைந்து இம்மாதம் 18-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதிவரை கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான இறைவேண்டல் வாரத்தை சிறப்பிக்கும் வேளையில் இவ்வாறு கூறியுள்ளார் கர்தினால் சாக்கோ.

மேலும் கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ  சபைகளை ஒரே அமைப்பாக இணைப்பது மட்டுமல்ல, மாறாக, பன்முகத்தன்மையைத் தழுவி வேறுபாடுகள் இருந்தபோதிலும் ஒன்றிணைந்து செயல்படுவது என்பதையும் விசுவாசிகளுக்கு அவர் நினைவூட்டியுள்ளார்.

ஒவ்வொரு கிறிஸ்தவத் திருச்சபைக்கும் உள்ள ஒரு தனித்துவமான வரலாறு, மரபுகள் மற்றும் ஆளுகை பாதுகாக்கப்பட வேண்டும் என்று தனது உரையில் கேட்டுக்கொண்டுள்ள கர்தினால், , கிறிஸ்தவ மரபுகளுக்கு இடையே நெருக்கமான உறவுகளுக்கான பாதையாக உரையாடல் மற்றும் பகிரப்பட்ட பார்வை விளங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கிறிஸ்தவத்  திருச்சபைகளுக்கு இடையே, குறிப்பாக, கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் மரபுகளுக்கு இடையே உள்ள உறவை, கிறிஸ்தவத்தின் "இரண்டு நுரையீரல்கள்" என்று திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் விவரித்தபடி, ஏற்கனவே உள்ள ஒன்றிப்பின் பல அடிப்படை அம்சங்களையும் எடுத்துக்காட்டியுள்ளார் கர்தினால் சாக்கோ.

பெந்தக்கோஸ்து கிறிஸ்தவச் சபைகளின் பங்களிப்புகளை ஒப்புக்கொண்டுள்ள கர்தினால் 2015-ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ. அமைப்பினரால் கொள்ளப்பட்ட காப்டிக் கிறித்தவர்கள் கத்தோலிக்க நாள்காட்டியில் சேர்க்கப்பட்டுள்ளதையும், கிழை வழிபாட்டு முறை திருஅவையில் இருந்து நினிவேயின் புனித ஈசாக்கை உரோமன் மறைச்சாட்சியர் இயலில் சேர்க்கும் திருத்தந்தையின் அண்மைய முடிவு குறித்தும் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 ஜனவரி 2025, 14:29