தடம் தந்த தகைமை – தம் உடைமையெல்லாம் விட்டுவிடாத
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராக இருக்க
முடியாது, (லூக் 14:33) என்கிறார் இயேசு.
சீடத்துவத்தின் சிறப்பம்சங்கள் மூன்று. 1) எளிமை 2) திட்டமிடல் 3) தன்னிழத்தல். இயேசுவைப் பின்பற்றுவேன், ஆனால் எதையும் இழந்திட எனக்கு மனமில்லை என்றால் அவர் இன்னும் எதையோ பெற்றுக் கொள்ளவே வருகின்றார் எனப் பொருள். நம் மனம் என்கின்ற துணியில் 2 சுயநலக் கறைகள் படர்வதுண்டு. 1) நான் என்ற அகந்தை 2) எனக்கு
என்ற அபகரிப்பு. இவற்றைப் பகிர்வு எனும் சலவைக் கட்டியால் கழுவினாலே உண்மையான பின்பற்றுதலில் நம்மைப் பிணைக்க முடியும்.
'செல்வம் சேர்த்தால்தான் செல்வாக்கு' என்ற செல்லரித்துப்போன சிந்தைக்குள் தன் சீடர்கள் விழுந்துவிடக் கூடாது என்பதில் இயேசு மிகக் கவனமாக இருந்தார். இன்று திரு அவையும், அதைச் சீர்படுத்தப் புறப்பட்ட துறவறமும் பல பிறரன்புப் பணிகளில் அணிவகுத்தாலும் நிறுவனத்தனத்திற்குள் ஆட்பட்டிருப்பது பெரும் ஆபத்தானது. எப்போது
நாம் ஏழையரின் திரு அவையாக, ஏழையர்க்கான திரு அவையாக மாறுகின்றோமோ அப்போதுதான் இயேசுவின் திரு அவையாக உருமாறுகிறோம். அப்படியானால், அதுவரை இயேசுவின் பெயர் சொல்லி பிழைக்கும் திருஅவை! நாம் விரும்புவதைக் கொடுப்பது சுயநலம், மற்றவர்கள் விரும்புவதைக் கொடுப்பது பிறர்நலம்.
இறைவா! சேர்த்துச் செருக்கு அடைவதைவிட பகிர்ந்து பாசம் பெறுவதே மேல் என உணர்ந்து என்னையும், என்னிடமுள்ளதையும் இழக்கும் துணிவைத் தாரும்..
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்