MAP

இயேசுபாலன் முன் வணங்கும் பங்களாதேஷ் மக்கள் இயேசுபாலன் முன் வணங்கும் பங்களாதேஷ் மக்கள் 

தடம் தந்த தகைமை - உமது திருவுளம் விண்ணுலகில்

ஒவ்வொரு மனித மனங்களுக்குள்ளும் எத்தனை எத்தனை ஏக்கங்கள், தேடல்கள், நன்மை செய்வதற்கான தாகங்கள் நிறைந்துள்ளன. இவையெல்லாம் கடவுளின் ஏக்கங்களே.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக! (மத் 6:10), என ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தார் இயேசு.

கடவுளை மறந்த மனித ஆட்சியே மண்ணில் நிலவியது. அதிகாரம், அடிமைத்துவம், ஆட்சி பிடித்தல், ஆதிக்கம் செலுத்தல், அதற்கெனச் சட்டங்கள் என எல்லாம் சேர்ந்து மனிதருக்குள் வெறுப்பையும், போட்டியையும், போர்களையும் விதைத்தது. இச்சூழலில்தான் ஒரு மாற்று ஆட்சி மலராதா என்ற ஏக்கம், ஆண்டு கொண்டிருந்தவர்களைத் தவிர்த்த எல்லாருக்குள்ளும் எழுந்தது. அந்த ஏக்கத்தில் முளைத்த விதையே இயேசு சொன்ன இறையாட்சி. இது ஆளும் நிலை அல்ல, வாழும் நிலை. இது வெறும் வார்த்தை அல்ல, நேய நிறைச் செயல்பாடு.

கடவுளின் வாழிடம் மனித மனங்கள்தாம். ஒவ்வொரு மனித மனங்களுக்குள்ளும் எத்தனை எத்தனை ஏக்கங்கள், தேடல்கள், நன்மை செய்வதற்கான தாகங்கள் நிறைந்துள்ளன. இவையெல்லாம் கடவுளின் ஏக்கங்களே. அந்த ஏக்கங்கள் மனங்களுள் புதைந்துவிடாமல் வாழ்வெளியில் செயலாய் ஒளிர வேண்டும். அது எளியோர்க்கான விடியலாக வேண்டும். அவ்வாறு எல்லாரும் இன்புற்று வாழும் நிறைவாழ்வே இறையாட்சி. அந்த இறையாட்சியை நிலைப்படுத்தும் பொறுப்பு நம் எல்லாருக்கும் உரியது. இயேசு அறிமுகம் செய்த இறையாட்சி என்பது ஓர் இடமோ, பொருளோ, பதவி நிலையோ அல்ல, முழுக்க முழுக்க உயர் மதிப்பீடுகள் நிறைந்த வாழ்வுமுறை.

இறைவா! உம் மதிப்பீடுகளை என் மனதில் புகட்டும். அவற்றைச் செயலாக்கும் இடமெல்லாம் உமதாட்சி நிலவட்டும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 ஜனவரி 2025, 12:44