MAP

சிறு வண்ணக்கற்களால் உருவாக்கப்பட்ட இயேசு உருவப்படம் சிறு வண்ணக்கற்களால் உருவாக்கப்பட்ட இயேசு உருவப்படம்  (@ Vatican News)

தடம் தந்த தகைமை - உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது?

நம் அடிப்படைத் தேவைகளை அன்றாடம் கடவுளிடமிருந்து பெற்று அனுபவிக்கும் நாம் ஏனையோரின் அடிப்படைகளில் அக்கறை காட்டவும் கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் மறத்தலாகாது.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா?(மத் 6:25).

நிறைவற்றவர் ஒருபோதும் நிம்மதி அடைவதில்லை. இஸ்ரயேல் மக்கள் 40 ஆண்டுகளாக விடுதலைப் பயண அனுபவம் பெற்றும் அதனை வழிநடத்திய கடவுளையோ, தங்களை விடுவிக்கப் போராடிய மோசேயையோ நம்பவில்லை. இந்த நம்பிக்கையில்லா உணர்வு அவர்களது உடலோடும், உயிரோடும், உணர்வோடும், உதிரத்தோடும் ஒட்டிப் போனது. எதையும், எவரையும் நம்பாமலே தங்கள் அன்றாட வாழ்வை நகர்த்தினர். இந்த நம்பிக்கையின்மை அவர்களுள் ஒருவிதமான அச்சத்தை உருவாக்கியது. இன்றைய உணவு? தண்ணீர்? உடை? உறைவிடம்? மகிழ்ச்சி? இப்படி எல்லாவற்றையும் கேள்வியாகப் பார்த்து மலைத்தனர்.

உடலைப் படைத்து அதனுள் உயிர் வைத்து உலகனுப்பிய தந்தைக் கடவுள் அதற்கானவற்றைத் தந்திட மறப்பாரா? மறுப்பாரா?. நம் அடிப்படைத் தேவைகளை அன்றாடம் கடவுளிடமிருந்து பெற்று அனுபவிக்கும் நாம் ஏனையோரின் அடிப்படைகளில் அக்கறை காட்டவும் கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் மறத்தலாகாது. பிறர்க்கு உதவிட நம் கைகளை நீட்டுகையில் அவர்களது முகத்தில் கடவுளின் புன்னகை தெரியும்.

இறைவா! உம் உயிரின் நீட்சி நான் என்பதில் என்னுள் எத்துணை மகிழ்ச்சி! அதைப் பிற உயிர்களுக்கும் பங்கிடும் பண்பைத் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஜனவரி 2025, 13:37