தடம் தந்த தகைமை - கண்தான் உடலுக்கு விளக்கு
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாக இருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். (மத் 6:22).
ஒரு மனிதரின் பார்வை அவரது கண்ணொளி பொறுத்தே அமைகின்றது. கண் உடல் உறுப்புகளுள் முக்கியமானது. உணர்வுக்கு அது உறுதுணை. பேச முடிந்தவற்றை வாய் பேசிவிடுகிறது. முடியாதவற்றைக் கண் பேசுகிறது. அந்த விழிகளே நம் உடலின் ஒளி விளக்குகள் என இயேசு மொழிகின்றார். ஒளியாக மிளிரப் பணித்த இயேசு, ஒளி உமிழும் கண்களை நமக்கென மட்டும் தக்க வைக்க அறிவுறுத்தவில்லை.
கண் நலம் என்பது எதையும் தெளிவாகப் பார்ப்பது மட்டுமல்ல, இதய நேய உணர்வுகளால் கூர்ந்து நோக்குவது, அதனை நேர்நிலை உணர்வோடு அணுகுவது, அதற்கெனத் தியாகங்கள் செய்ய முனைவது. அதுமட்டுமன்று, கருணையாளர்கள் கண்ணொளி கொண்டு வாழ்ந்தாலும் மண்ணோடு தங்களை மாய்த்துவிட மாட்டார்கள். மண் துறப்புக்குப் பின்னும் கண் தானத்தால் நீடூழி வாழ்வர். முகப் பார்வை இழந்தாலும் அகப் பார்வையை ஒருபோதும் இழக்க வேண்டாமே. விழி இழந்தோரும் ஒளியாகலாம், தன் வாழ்வு பிறருக்கு வழியானால்.
இறைவா! நீர் தந்த விழிகள் பார்க்க மட்டுமல்ல, பார்வை கொடுக்க என்றுணர்ந்து அதைச் செயலாக்க வரம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்