இறையியலாளர் பணி. Felix Wilfred மறைவுக்கு ஆசிய திரு அவை இரங்கல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஆசியாவின் முன்னணி இறையியலாளர் 76 வயது நிரம்பிய அருள்பணியாளர் Felix Wilfred அவர்கள், ஜனவரி 7, இச்செவ்வாயன்று சென்னையில் பெருத்த மாரடைப்பால் இறைபதம் அடைந்தார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருள்பணியாளர் Wilfred ஒரு புகழ்பெற்ற இந்திய இறையியலாளர் ஆவார். இறையியல், சமூக நீதி மற்றும் ஏழைகள் மற்றும் பொதுநிலையினருக்காக வாதிடுவதில் திருஅவையின் பங்கு பற்றிய அவரது முற்போக்கான மற்றும் தீவிரமான கருத்துக்களுக்காக உலகளவில் அவர் அங்கீகரிக்கப்பட்டார்.
அவர ஒரு மகிழ்ச்சியான மற்றும் அணுகக்கூடிய இறையியலாளராக விளங்கியதுடன், ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு அவர் வழிகாட்டியுள்ளார். மேலும் அவர் அனைத்துலக இறையியல் மறுஆய்வுக் குழுவின் தலைவராகவும், மறைந்த திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் கீழ் செயல்பட்டுவந்த வத்திக்கானின் அனைத்துலக இறையியல் ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார். அத்துடன் அவர் ஆசிய ஆயர் பேரவையின் இறையியல் பணிகள் அலுவலகத்தின் செயலாளராகவும் பணியாற்றினார் மற்றும் இந்திய இறையியல் கழகத்தை வழிநடத்தினார்.
இறையியல் புலமை, மதங்களுக்கு இடையிலான உரையாடல், சமூக நீதி ஆகியவற்றில் அருள்பணியாளர் Wilfred அவர்களின் பங்களிப்பு மகத்தானது. அவர் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியா உட்பட பல பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்பித்தார், மேலும் டப்ளின் மூவொரு கடவுள் கல்லூரியில் (Trinity College, Dublin) இந்திய ஆய்வுகளின் தலைவராகப் பணியாற்றினார்.
அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், கல்விநிலைய முதல்வராகவும் இருந்தார். மேலும் சிறந்த கல்விப் பணியையும் கொண்டிருந்தார், அத்துறையில் அவர் சிறந்து விளங்கியதற்காக பல தங்கப் பதக்கங்களைப் பெற்றார்.
கோட்டார் மறைமாவட்டத்தின் அருள்பணியாளரான வில்பிரட் 1972-ஆம் ஆண்டில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் 2014-ஆம் ஆண்டில் குழித்துறை மறைமாவட்டம் புதிதாக உதயமானபோது, அவர் அதன் அங்கமானார். அவரது கல்வி அறிவுத்திறன் ஆழமான ஆன்மிகத்துடன் இணைந்து, இறையியல் மற்றும் உலகளாவிய தென்னகத்தில் செல்வாக்குமிக்கப் படைப்புகளை உருவாக்கியது.
அருள்பணியாளர் Wilfred அவர்கள் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார், ஆசிய கிறிஸ்தவத்தின் ஆக்ஸ்போர்டு கையேடு மற்றும் மத அடையாளங்கள் மற்றும் உலகளாவிய தெற்கு ஆகியவை மிகவும் குறிப்பிடத்தகுந்தவை. இந்நூல்கள் அறிவார்ந்த வட்டாரங்களில் மிகவும் மதிப்புக்குரியதாகக் கருதப்பட்டன.
அருள்பணியாளர் வில்பிரட் அவர்கள் ஒரு பல்மொழியாளராகவும் (A polyglot) விளங்கினார். அவர் ஆங்கிலம், அவரது தாய்மொழியான தமிழ், இத்தாலி மற்றும் பிரெஞ்சு மொழிகளில் நன்கு பேசக்கூடியவராக இருந்தார். இலத்தீன், ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் பணிபுரியும் புலமையும், சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகளிலும் அவருக்கு அடிப்படை புலமை இருந்தது.
அருள்பணியாளர் வில்பிரட் அவர்கள், 2024-ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்ற பிறகு திடீரென மரணமடைந்தது இறையியல் சமூகத்தைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனாலும் நீதி, சமய நல்லிணக்கம் மற்றும் கலாச்சார புரிதலை வளர்ப்பதில் அவரது மரபுரிகைப் பண்பு (legacy) எதிர்கால சந்ததியினருக்கு ஒரு கலங்கரை விளக்கமாக நினைவுகூரப்படும் என்பது திண்ணம். (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்