MAP

மெஜூகோரே அன்னை மரியா திருத்தலம் மெஜூகோரே அன்னை மரியா திருத்தலம்   (AFP or licensors)

அருளின் இடமான மெஜூகோரே அன்னை மரியா திருத்தலத்திற்கு வாருங்கள்!

திருஅவையின் வழிகாட்டுதல் மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மேய்ப்புப் பணியாளருக்குரிய மனப்பான்மையுடன் இத்திருத்தலத்தில் நிகழும் மாற்றத்தை காணவும், அனுபவிக்கவும் மக்களை அழைக்கும் வகையில், மெஜூகோரே உண்மையில் ஓர் அருளின் இடமாக அமைந்துள்ளதை இந்நேர்காணலில் உறுதிப்படுத்தியுள்ளார் பேராயர் Aldo Cavalli

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அருளின் இடமாக விளங்கும் மெஜூகோரே அன்னை மரியா திருத்தலதிற்கு அனைவரும் வாருங்கள் என்று அழைப்பொன்றை விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அத்திருத்தலத்தின் அப்போஸ்தலிக்கப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பேராயர் Aldo Cavalli

வத்திக்கான் செய்தித்துறை அலுவலகத்தில் திருப்பீடத் தகவல் தொடர்புத் துறையின் செய்திப் பிரிவு இயக்குனர் முனைவர் அந்திரேயா தொர்னியெல்லி அவர்கள் மேற்கொண்ட இந்த நேர்காணலின்போது இவ்வாறு அழைப்புவிடுத்துள்ளார் ஆயர் Cavalli

இந்த நேர்காணலில், பேராயர் Cavalli அவர்கள், போஸ்னியா மற்றும் ஹெர்ச்சேகோவினாவில் உள்ள திருப்பயணத் தளமான மெஜூகோரேவில் தனது மூன்று ஆண்டு வாழ்க்கை மற்றும் பணியின் அனுபவங்களையும் உள்ளொளிகளையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

மெஜூகோரே குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்கள் இல்லாத ஓர் எளிய இடமாக இருந்தாலும், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் எனப் பலர் இறைவேண்டல் செய்யவும், மனமாற்றத்தை அனுபவிக்கவும், தங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்தவும் வரும் ஆன்மிக மாற்றத்தின் தளமாக எப்படி மாறியது என்பதையும் இந்நேர்கணலில் விளக்கியுள்ளார் பேராயர்

திருப்பயணிகளின் ஆன்மிக வளர்ச்சி, அதிக எண்ணிக்கையிலான பணிகள் மற்றும் கத்தோலிக்க நம்பிக்கையுடன் இணைந்த நேர்மறையான செய்திகள் உட்பட, மெஜூகோரேயின் நேர்மறையான பலன்களையும் இதில் எடுத்துக்காட்டியுள்ளார் பேராயர் Cavalli

இத்திருத்தலம் குறித்த கத்தோலிக்கத் திருஅவையின் வழிகாட்டுதலின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ள பேராயர், குறிப்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அண்மைய நெறிமுறைகள்,  மெஜூகோரேயின் ஆன்மிக பலன்களில் கவனம் செலுத்துகிறது மற்றும் இவ்விடத்தை அருளின் இடமாக அங்கீகரிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மெஜூகோரே மரியன்னை வழங்கும் அமைதிக்கான செய்தியை இந்நேர்காணலில் அடிகோடிட்டுக் காட்டியுள்ள பேராயர், இது கடவுள் மற்றும் மனிதர்களிடையே அமைதியை மையமாகக் கொண்டது என்றும், வாழ்க்கை மற்றும் குடும்பத்தை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எதிரொலிக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்வேறு மத நம்பிக்கைகளுக்கு இடையே உரையாடலின் அவசியத்தை எடுத்துக்காட்டியுள்ள பேராயர், மத மற்றும் இன மோதல்களால் குறிக்கப்பட்ட ஒரு பகுதியில் மெஜூகோரே அன்னையின் அமைதி குறித்த செய்தி மிகவும் பொருத்தமுடையதாக அமைந்துள்ளது என்பதையும் ஒப்பிட்டுக்காட்டியுள்ளார்.

பொஸ்னியா-கேர்சேகோவினா (Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெஜூகோரே  (Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியா 25-06-1981-ஆம் ஆண்டு 7 இளையோருக்கு முதல் முறையாகக் காட்சி அளித்தார். திருஅவை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியா, இங்குக் காட்சி அளித்து கொண்டு இருக்கிறார். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார் என்பதை இதன்வழி அறிகிறோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 ஜனவரி 2025, 15:15