MAP

ஜெனிவாவில் மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஜெனிவாவில் மனித உரிமைகள் கூட்டத் தொடர்  (ANSA)

வாரம் ஓர் அலசல் – டிச. 10. அனைத்துலக மனித உரிமைகள் தினம்

அனைத்து மனிதர்களின் உரிமைகளையும் மதித்து, பிறப்பாலும் தொழிலாலும் எழும் வேறுபாடுகளைக் களைந்து, அனைவரும் அனைத்து அடிப்படை வசதிகளும் பெற்று மகிழும் நாள் வேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

வாழ்வுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை போன்ற அடிப்படை உரிமைகளை அனைவரும் பெற்று சுதந்திரமாக வாழ வேண்டும். கருத்துச் சுதந்திரம், எழுத்துரிமை, கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளைப் பெற்று சுதந்திரமாக உயிர் வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இவற்றையே மனித உரிமை என்று சொல்கிறோம். நாடு, சமூகம், பொருளாதாரம், அரசியல், நீதி ஆகியவற்றில் மனிதன் மனிதனாக வாழ்வுதற்கான உரிமை ஒவ்வொருவருக்கும் உறுதி செய்யப்பட வேண்டும். நாடு, மொழி, ஜாதி, இனம், பொருளாதாரம் போன்ற எந்தக் காரணத்தைக் காட்டியும் ஒருவனுடைய இந்த உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்துவதே உலக மனித உரிமை நாள். இதைத்தான் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 10ஆம் தேதி நாம் கொண்டாடுகிறோம்.

இனம், நிறம்,  மொழி, பாலினம், அரசியல், ஜாதி, மதம், பிறப்பு, சொத்து, பிற அந்தஸ்து, தேசிய அல்லது சமூக தோற்றம் என எதிலும் பாகுபாடு பார்க்கக்கூடாது என்பதை உணர்த்துவதே ஆண்டுதோறும் டிசம்பர் 10 அன்று உலகம் முழுவதும் மனித உரிமைகள் தினம் கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கமாகும். கலாச்சாரம், சமூகம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாத்தியமான அனைத்து சூழல்களிலும் சமூகத்தின் நலனை உறுதிப்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 1948ல் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஏற்றுக்கொண்டது. அதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. இதில் 53 நாடுகள் அங்கம் வகித்தன.

முதல் பணியாக, சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்க வேண்டும் என்று இந்தக் குழு முடிவு செய்தது. இதற்காக, அமெரிக்க அதிபரின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகளை அடையாளம் கண்டு உலக மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பித்தது. இந்தப் பிரகடனத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் 58 நாடுகள், 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி அங்கீகாரம் வழங்கின. இந்த நாள்தான் 1950ஆம் ஆண்டு முதல் உலக சர்வதேச மனித உரிமை நாளாக அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 76ஆவது ஆண்டு ஆகும்.

2ஆம் உலகப்போரின் பின், 1948 டிசம்பர் 10 பாரிசில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம் அறிவிக்கப்பட்டது. மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம் என்பது, ஒரு நபரின் உரிமைகளைப் பற்றிய ஓர் அடிப்படை ஆவணமாகும். இது ஒரு முன்னுரை மற்றும் 30 சட்டப்பிரிவுகளைக் கொண்டது. இவை ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை அங்கீகரிக்கின்றன. இந்த ஆவணம் 500க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. மேலும், இது உலகிலேயே அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொள்வதில் முக்கியப் பங்காற்றிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

மனித உரிமைகள் பிரகடனத்தை உற்று நோக்குகையில் “அனைத்து மனிதர்களும் சுதந்திரமாகவும், கண்ணியத்திலும் உரிமைகளிலும் சமமாகவும் பிறந்தவர்கள். அவர்கள் பகுத்தறிவும் மனசாட்சியும் கொண்டவர்கள், மற்றும் சகோதரத்துவ உணர்வுடன் ஒருவருக்கொருவர் செயல்பட வேண்டும்” என பிரகடனத்தின் முதலாவது சட்டப்பிரிவு கூறுகின்றது. இதனைக் கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு நாட்டிற்கும் இருக்கின்றது. பிரகடனத்தின் சட்டப்பிரிவு 3ன் படி “ஒவ்வொரு மனிதனுக்கு வாழ்வதற்கும், சுதந்திரம் பெறுவதற்கும், அவரவர் வாழ்வின் பாதுகாப்பிற்கும் உரிமை உண்டு”.  பிரகடனத்தின் சட்டப்பிரிவு 5ன் படி “எந்த ஒரு நபரும் கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான தண்டனைக்கு உட்படுத்தப்படக்கூடாது”.

பிரகடனத்தின் சட்டப்பிரிவு 9ன் படி “எந்த நபரையும் தன்னிச்சையாக கைது செய்யவோ, சிறையில் வைக்கவோ அல்லது நாடு கடத்தவோ கூடாது”. பிரகடனத்தின் சட்டப்பிரிவு 16.3ன் படி “குடும்பமானது சமூகத்தின் இயற்கைக் கருவாகும், மேலும் சமூகம் மற்றும் அரசால் பாதுகாக்கப்படுவதற்கான உரிமையைக் கொண்டுள்ளது”. இறுதியாக பிரகடனத்தின் சட்டப்பிரிவு 17.2ன் படி “எந்த ஒரு தனி மனிதனின் சொத்தும் தன்னிச்சையாக பறிக்கப்பட முடியாதது”. உத்தரபிரதேசத்தில் புல்டோசர்கள் கொண்டு பல வீடுகள் அழிக்கப்பட்டதும், உச்சநீதிமன்றத்தால் அது கண்டிக்கப்பட்டதும் நமக்கு தெரியாததல்ல.

சமத்துவம், சமாதானம், சுதந்திரம், நம்பிக்கை, செழுமை, நீதி போன்ற உன்னதமான விடயங்களை மையமாகக் கொண்டது அனைத்துலக மனித உரிமைகள் தினம். ஆனால் இவை அனைத்துமே மறுக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து, வார்த்தைகளால் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து, வாழ்வோ சாவோ என்று அன்றாட வாழ்விற்கு அல்லலுறும் மக்களுக்கு அகில உலக சமூகம் நீதி வழங்கும் வரை, பூமியில் அமைதி என்பது வெகுதூரத்தில் காணப்படும் கானல் நீர்தான்.

ஓர் ஊரில் குடிக்கும் தம்ளர்களை தனித்தனியே வைத்ததும், இன்னும் ஓர் ஊர்க் கடையில் மாணவர்களுக்கு பொருள்கள் தராமல் புறக்கணித்ததும் செய்திகளில் வந்தது, அதுவும் அண்மையில் வந்தது நாம் அறியாததல்ல. இது போன்ற நிகழ்வுகள் இன்னும் தீண்டாமை முழுமையாக நீங்காததையே காட்டுகிறது. ஜாதிகளின் பெயரால் நம்முடன் பயணிக்கும் சக மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக சொல்லலாம். ஒரு மனிதன் வாழ்வதற்கான குடிநீர், கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அடிப்படை விஷயங்கள் அனைத்தும் அடங்கும். இது மட்டுமில்லாமல் வாழும் உரிமை, கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துச்சுதந்திரம் போன்ற தனி மனித சுதந்திரங்களையும் உள்ளடக்கியுள்ளது மனித உரிமைகளுக்கான பட்டியல்.

வார்த்தைகளால் நோகடிப்பதும், கண்டுகொள்ளாமல் புறக்கணித்து மனதை வருத்துவதும், சொத்துக்களைத் தராமல் ஏமாற்றுவதும், பெற்றோரைப் பார்த்துக் கொள்ளாமல் தவிக்க விடுவதும் போன்ற உணர்வுடன் தொடர்புடைய பல விடயங்களும் மனித உரிமைகளின் கீழ் வருவதால் தற்போது பாதிக்கப்பட்டவர்கள் விரும்பும் பட்சத்தில்  சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தனி மனித ஒழுக்கத்தைப் போற்றும் ஒரு நாட்டில் ஜனநாயகம் மேம்படவும் நீதியை சமமாக நிறுவவும் மனித உரிமைகள் முக்கியமாகிறது. அனைத்து மனிதர்களின் உரிமைகளையும் மதித்து பிறப்பாலும் தொழிலாலும் எழும் வேறுபாடுகளைக் களைந்து ஏற்றத்தாழ்வு இன்றி அனைவரும் கல்வி முதல் அனைத்து அடிப்படை வசதிகளும் பெற்று மகிழும் நாள் என்று வருகிறதோ அன்றுதான் இது போன்ற நாட்களின் பெருமையும் உயரும். இந்த நிலை வர ஆணோ பெண்ணோ, சக மனிதர்களை சமமாக மதித்து அவர்களின் உணர்வுகளைப் புரிந்து மனிதநேயத்துடன்  வாழ உறுதி எடுக்க வேண்டும். அப்போதுதான் மனித உரிமைகள் என்பதே தகுந்த கவுரவம் பெறும்.

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை எல்லா தரப்பினரிடமும் வலியுறுத்துவதே, மனித உரிமை நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம். உலகில் உள்ள எல்லா மனிதர்களும் சமமானவர்களே. எல்லாருக்கும் சம உரிமை உண்டு. மற்றவர்களிடம் இருந்து நாம் என்ன உரிமையை எதிர்பார்க்கிறோமோ அதே உரிமையை அவர்களுக்கும் நாம் தர வேண்டும். யாரையும் யாரும் அடிமைப்படுத்தக் கூடாது.

மனிதனின் கவுரவத்தையும் அவனின் பிரிக்க முடியாத உரிமைகளையும் அறிந்து ஏற்றுக்கொள்வதே அவனுக்கு அளிக்கும் சுதந்திரம், நீதி, சமாதானத்தின் அடித்தளம் என்று அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் முன்னுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல. யாராலும் யாருக்கும் வழங்கப்பட்டதும் அல்ல. ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போது அவனுடன் பிறந்ததுதான் மனித உரிமை. அதனால், ஒருவரின் உரிமையைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. இன்னும் சொல்லப் போனால், ஒரு குடிமகனின் மனித உரிமையைப் பறிக்க அந்த நாட்டின் அரசுக்குக்கூட அதிகாரம் இல்லை. உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் சமமான உரிமைகளும் அடிப்படை சுதந்திரமும் உள்ளன. இவற்றை உலகுக்கு உரக்கச் சொல்லும் நாள்தான் உலக மனித உரிமை நாள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 டிசம்பர் 2024, 13:37