MAP

கோவாவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் புனித பிரான்சிஸ் சவேரியாரின் அழியாத உடல் கோவாவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் புனித பிரான்சிஸ் சவேரியாரின் அழியாத உடல்  

புனித சவேரியாரின் வழியில் நாம் அனைவரும் நற்செய்தியின் தூதுவர்கள்

கடவுளால் அழைக்கப்பட்ட தூதர்கள், அழைக்கும் அவரின் மகத்துவத்திற்கும் பணியின் மகத்துவத்திற்கும் முன் தங்களை மிகவும் சிரியவர்களாக்கிக் கொண்டார்கள் : கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

புனித பிரான்சிஸ் சவேரியாரின் புனித நினைவுச்சின்னங்களை வெளிப்படுத்துவது என்பது, பெரும் மறைபரப்புப் பணியாளரான அவரது கொண்டாட்டத்திற்கு இவ்வாண்டு ஒரு முக்கியத்துவத்தை சேர்க்கிறது என்று கூறினார் நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீடத்துறையின்  தலைவரான, கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே

டிசம்பர் 3, இச்செவ்வாயன்று, இந்தியாவின் கோவா மாநிலத்திலுள்ள புனித சவேரியார் பேராலயத்தில் நிகழ்ந்த சிறப்புத் திருப்பலியின்போது இவ்வாறு தெரிவித்த கர்தினால் தாக்லே அவர்கள், அனைவரையும் நற்செய்தி அறிவிப்பாளார்களாக மாறவும் அழைப்பு விடுத்தார்.

நாம் நற்செய்தியின் தூதுவர்கள் என்பதைத்தான் புனித பிரான்சிஸ் சவேரியாரின் அழியாத தூய உடல் நமக்கு எடுத்துக்காட்டுகிறது என்றும், நமது அன்றாட வாழ்வில், ஒரு தூதுவர் என்பவர் ஒரு செய்தியைக் கொண்டு வருபவர் அல்லது எடுத்துச் செல்பவர் என்று பொருள்படுகிறது என்றும் குறிப்பிட்டார் கர்தினால் தாக்லே.

வானதூதர்கள், இறைவாக்கினர்கள் மற்றும் திருத்தூதர்கள் யாவரும் கடவுளின் நற்செய்தியை அறிவித்து ஒளிரும் மறைப்பணியாளர்கள் என்று எடுத்துக்காட்டிய கர்தினால் தாக்லே, நமதாண்டவர் இயேசுவே இறைத்தந்தையின் தலைச்சிறந்த மறைப்பணியாளார் என்றும் சுட்டிக்காட்டினார்.

அனைத்து விவிலியத் தூதர்களும், இறைவாக்கினர் எரேமியா, திருத்தூதர் பவுல் ஆகியோரை எடுத்துக்காட்டுகளாகக் கொண்டு 'கடவுளின் நற்செய்தியை மற்றவர்களுக்கும் பிற நாடுகளுக்கும் அறிவிக்க அழைக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களைப் பொறுத்தவரை, ‘எல்லாமே கடவுளின் அன்பான அழைப்பில் தொடங்குகிறது என்றும் சுட்டிக்காட்டினார் கர்தினால்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 டிசம்பர் 2024, 15:13