தடம் தந்த தகைமை – முத்துக்களைப் பன்றிகள் முன்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம். எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும் (மத் 7:6) என்கிறார் இயேசு.
இயேசுவின் போதனைகள் மேதமை மிக்கவை. அவரது கொள்கைகள் நிலைப்பாடு நிறைந்தவை. சட்டம், சடங்கு, மரபு, இனம் என்ற வெறிகளுக்குள் அடைபட்டுக் கிடந்தோருக்கு அவை ஆத்திரத்தைக் கொடுத்தன. பலர் அவற்றை அலட்சியப்படுத்தினர். இன்னும் சிலர் எதிர்குரல் எழுப்பினர். நற்சிந்தனைகள், நற்பார்வைகள், நற்செயல்களை ஏற்க மனமில்லாதவர்களுக்குமுன் நல்லவை யாவும் நஞ்சாகவே தென்படும். இங்கே மத்தேயுவின் உள்மன உணர்வும் கொப்பளிக்கிறது.
யூதர் தம்மைச் சாராதப் பிற இனத்தாரை நாய், பன்றி என்றே எண்ணினர், அழைத்தனர். அச்சொல்லாடல் இங்கே கையாளப்பட்டுள்ளது. நல்லவற்றைக் கேட்கமாட்டார்கள், ஏற்கமாட்டார்கள் என்றெண்ணி அவற்றை எடுத்துரைக்காமல் இருப்பதும் நன்றல்ல. நல்லதைச் சொல்வோம், செய்வோம். அவை இன்றில்லாவிடினும்… நாளை, நாளை இல்லாவிடினும் இன்னொரு நாளில் முளைத்தெழும் என்ற நம்பிக்கையை நெஞ்சினின்று ஒருபோதும் கிள்ளி எறிய வேண்டாம். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு (423)
இறைவா! எதையும் திறந்த மனதோடு ஏற்று வாழும் பரந்த பார்வை தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்