தடம் தந்த தகைமை : யூதர் தம்மைக் காத்துக்கொள்ள எஸ்தர் தூண்டல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஆமான் தூக்கிலிடப்பட்ட சில நாள்களில் மன்னர் அகஸ்வேர், யூதரின் பகைவனான ஆமானின் இல்லத்தை அரசி எஸ்தருக்கு வழங்கினார். மொர்தக்காய்க்கும் தமக்கும் உள்ள உறவை எஸ்தர் வெளிப்படுத்த, அவரும் மன்னரின் முன்னிலைக்கு வந்தார். ஆமானிடமிருந்து கழற்றப்பெற்ற தம் கணையாழியை மன்னர் எடுத்து மொர்தக்காய்க்கு அளித்தார். எஸ்தரும் மொர்தக்காயை ஆமான் வீட்டின் பொறுப்பாளராக நியமித்தார்.
மீண்டும் எஸ்தர், யூதருக்கு எதிராய்ச் சதிசெய்த தீயோன் ஆகாகியானான ஆமானின் திட்டங்கள் யாவும் குலைந்து போகுமாறு, மன்னரின் காலடிகளில் வீழ்ந்து, அழுது மன்றாடி, அவரது தயவினை நாடினார். உடனே மன்னர் தம் பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்ட, அவர் எழுந்து மன்னர்முன் நின்றார். அவர், ‘‘மன்னருக்கு இது நலமெனப்பட்டால், அவர்தம் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால், அரசருக்கு இது சரியெனத் தோன்றினால், நானும் உம் பார்வையில் இனியவளெனப்பட்டால் மன்னரின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள யூதர் அழிந்துபோகுமாறு வஞ்சனையாய்த் திட்டமிட்ட அம்மதாத்தின் மகனும் ஆகாகியனுமான ஆமான் எழுதிய மடல்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பும்படி எழுதுவீராக! என் மக்களுக்கு நேரிடும் தீங்கினையும், என் உறைவினரின் படுகொலையினையும் நான் எவ்வாறு காண இயலும்?’’ என்று கூறினார்.
அப்பொழுது மன்னர் அகஸ்வேர், அரசி எஸ்தரையும் யூதரான மொர்தக்காயையும் நோக்கி, ‘‘இதோ! ஆமானின் இல்லத்தை எஸ்தருக்கு அளித்தேன்; யூதருக்கு எதிராய்க் கை நீட்டிய ஆமான் தூக்கிலிடப்பட்டான். மன்னரின் பெயரால் எழுதப்பட்டு, அவர் கணையாழியின் முத்திரை பதிக்கப்பெற்ற எம்மடலும் திருப்பிப் பெற இயலாதபடியால், உங்கள் பார்வையில் நலமெனத்தோன்றும் அனைத்தையும் மன்னரின் பெயரால் நீங்கள் யூதருக்கு எழுதி, மன்னரின் கணையாழியால் முத்திரையிடுங்கள்’’ என்று கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்