பெத்லேகேமில் போர்ச்சூழலால் உற்சாகமிழந்த கிறிஸ்து பிறப்பு விழா!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
போர் மற்றும் இழப்புகளுக்கு மத்தியில், பெத்லகேமில் ஒரு துயரம் சூழ்ந்த நிலையில் கிறிஸ்து பிறப்பு விழா இடம்பெற்றது என்றும், அதன் இயேசு பிறப்புப் பேராலயத்தில் நிகழ்ந்த திருப்பலியில் அம்மக்களின் போரற்ற மற்றும் அமைதி நிறைந்த வாழ்க்கைக்காக இறைவேண்டல்கள் எழுப்பப்பட்டன என்றும் உரைக்கிறது யூக்கான் செய்தி நிறுவனம்.
காசாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிகளுக்கும் இடையே இடம்பெற்று வரும் போர்ச்சூழலில் பெத்லேகேமிலுள்ள இயேசு பிறப்புப் பேராலயத்தில் (Church of the Nativity) கிறிஸ்து பிறப்புப் பெருவிழா திருப்பலி எவ்வித ஆராவாரமின்றி மிகவும் அமைதியாக நிகழ்ந்து முடிந்தது என்றும் கூறியுள்ளது அச்செய்தி நிறுவனம்.
பெத்லகேமின் பாரம்பரிய பண்டிகை அலங்காரங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டன என்றும், அதன் மாநகராட்சித் தலைவர் மக்கள் அனைவரையும் இறைவேண்டலில் கவனம் செலுத்தத் தூண்டினார் என்றும் மேலும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.
இப்பேராலயத்தில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாத் திருப்பலியை நிறைவேற்றிய எருசலேமின் இலத்தின் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, பேராயர் Pierbattista Pizzaballa அவர்கள், காசாவிற்கு தான் மேற்கொண்ட பயணம் குறித்தும், போரின் பேரழிவு மற்றும் அங்கு மக்கள் அனுபவிக்கும் பெரும் துயரம் குறித்தும் தனது மறையுரையில் பகிர்ந்துகொண்டார் என்றும் உரைக்கிறது அச்செய்தித் தொகுப்பு.
பரவலாகப் போர் ஏற்படுத்தியுள்ள அழிவின் மத்தியில் காசாவில், கிறிஸ்தவர்கள் புனித போர்பிரியஸின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கோவிலில் ஒன்றுகூடி இறைவேண்டலில் ஈடுபட்டு தங்களுக்கான ஆறுதலைத் தேடிக்கொண்டனர் என்றும் கூறுகிறது.
இதற்கிடையில், தமஸ்கு நகரில் கிளர்ச்சியாளர்கள் கிறிஸ்துமஸ் மரத்தை எரித்ததைத் தொடர்ந்து அங்கு எதிர்ப்புகள் கிளம்பின என்றும், இது இஸ்லாமியத் தலைமையின் கீழ் தங்கள் எதிர்காலம் குறித்து சிரியா கிறிஸ்தவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது அச்செய்தி நிறுவனம்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்