கடவுளுக்கு மகிமை அளிக்கும் இலாவோஸ் கத்தோலிக்க சமூகம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
மொழிச்சிக்கல்கள், அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் அது தொடர்பான சிக்கல்கள் இருந்தாலும், இலாவோஸில் உள்ள கத்தோலிக்க சமூகம் கடவுளுக்கு மகிமை அளிக்கிறது என்றும், வலுவான நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் தனது பயணத்தைத் தொடர்கின்றது என்றும் கூறியுள்ளார் இலாவோஸ் - கம்போடியா மறைமாவட்ட ஆயர் Enrique Figaredo Alvargonzález.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஆயர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் கூட்டப்பட்ட ஆயர்களின் மாநாடு பற்றி ஃபீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்கு பதிலளித்தபோது இவ்வாறு கூறியுள்ளார் இலாவோஸ் மற்றும் கம்போடியா மறைமாவட்ட ஆயரும், ஆயர் பேரவைத்தலைவருமான (CELAC) இயேசுசபையைச் சார்ந்த ஆயர் Enrique Figaredo Alvargonzález.
பல்வேறு இடர்ப்பாடுகள் இருந்தபோதிலும், கடவுளின் அருளால் தலத்திருஅவை நாளுக்கு நாள் முன்னேறுகின்றது என்றும், சமூகத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை நன்றாக செல்கிறது என்றும் எடுத்துரைத்த ஆயர் Figaredo அவர்கள், திருமுழுக்கு அருளடையாளம் பெற்றவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
கத்தோலிக்க மக்களின் இத்தகைய வளர்ச்சியினை ஒரு சிறிய அற்புதமாக தான் பார்ப்பதாக எடுத்துரைத்துள்ள ஆயர் Figaredo அவர்கள், பல அருள்சகோதரிகள், மறைக்கல்வியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்குச் சென்று, மறைபரப்புப்பணி செய்து மேய்ப்புப்பணி வளர்ச்சிக்கு உதவுகின்றார்கள் என்றும் கூறியுள்ளார்.
லாவோஸில் உள்ள தலத்திருஅவையில் அதிமகான இறைநம்பிக்கை இருக்கின்றது என்றும்,உயிர்த்துடிப்புடன் இயங்கும் அத்தலத்திருஅவையில் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ள ஆயர் Figaredo அவர்கள் கம்போடியாவை விட இலாவோஸ் தலத்திருஅவையில் கத்தோலிக்க மக்கள் அதிக அளவில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
குருத்துவம், துறவறம் ஏற்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இலாவோஸ் தலத்திருஅவையில் இருப்பதாக எடுத்துரைத்துள்ள ஆயர் Figaredo அவர்கள், வெளிநாட்டுத் தொடர்புகளுக்காகவும், தலத்திருஅவை வளர்ச்சிக்காகவும், பிலிப்பீன்ஸில் படித்து, ஆங்கிலம் கற்ற சில அருள்பணியாளர்கள் அங்கு பணியாற்றுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
உள்ளூர் அருள்பணியாளர்கள் மற்றும் துறவறத்தார் மட்டுமே இருக்கின்ற இலாவோஸில் வெளிநாடுகளிலிருந்து மறைப்பணியாற்ற வருபவர்கள் நிரந்தரமாக இருக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும், அண்டை நாடுகளில் உள்ள தலத்திருஅவைகளில் இருந்து வரையறுக்கப்பட்ட ஆதரவை மட்டுமே அவர்களால் பெற முடிந்தாலும் ஒவ்வொரு நாளும் கடவுளின் மாட்சிக்காக வாழ்கின்றார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார் ஆயர் Figaredo. (FIDES)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்