கர்தினால் Oswald Gracias : ‘Dilexit Nos’ ஓர் ஆன்மீக வழிகாட்டி
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
இந்தியாவில் பல இல்லங்கள் இயேசுவின் திரு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பதை எண்ணி பெருமைப்படுவதாக மும்பை பேராயர், கர்தினால் Oswald Gracias &Բ;தெரிவித்துள்ளார்.
இயேசுவின் திருஇதயத்திற்கு நம் இல்லங்களை அர்ப்பணிக்கின்ற செயலின் அர்த்தத்தை மீண்டும் புரிந்து கொள்வது முக்கியம் என்றும், இவற்றின் வழியாக நம் நாடு மிகுந்த பயனடையும் என்றும் தெரிவித்துள்ளார் கர்தினால் Gracias.
அக்டோபர் 24ஆம் தேதி வியாழனன்று, காயப்பட்ட உலகிற்கான செய்தியையும், இயேசுவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட என்னும் சுற்றுமடலையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்.
என்னும் இந்த புதிய ஆவணத்தின் விளக்கவுரையை மும்பை பேராயர் கர்தினால் Oswald Gracias அவர்கள் வழங்கியபோது, இயேசுவின் திருஇதய பக்தி இந்தியாவில் கத்தோலிக்கர்களிடையே பரவலாக உள்ளது என்றும், திருஅவை ஆற்றிவரும் தன்னலமற்ற சேவைக்கும் குறிப்பாக ஏழைகள், சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டவர்கள் ஆகியோருக்கு ஆற்றிவரும் சேவைக்கும் இயேசுவின் திருஇதய பக்தி ஓர் உத்வேகம் அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இயேசுவின் திருஇதயத்திற்கான அர்ப்பணிப்பு குறித்து திருத்தந்தையின் வழிகாட்டுதலை மீண்டும் பெற்றிருப்பதில் கத்தோலிக்கர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர் என்றும் கூறியுள்ளார் கர்தினால் Gracias.
பல இல்லங்களும் குடும்பங்களும் இயேசுவின் திருஇதயத்திற்கு ஓர் அரியணையைக் கொண்டுள்ளன என்றும், இறைவனின் அன்பைப் புரிந்து கொள்ள இந்த சுற்றுமடல் உத்வேகம் அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார் கர்தினால் Gracias.
இயேசுவுடனான நம் உறவை எவ்வாறு வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், இயேசுவின் அன்பு ஏழைகளுக்கும், சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் உரியது என்றும், அமைதியிழந்த இவ்வுலகில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு முயற்சியே திருத்தந்தையின் சுற்றுமடல் என்றும் தெரிவித்துள்ளார் கர்தினால் Gracias.
இந்தியாவில் அமைதியையும் உறவுகளையும் மனிதர்களையும் மிகவும் மதிக்கிறோம் என்றும், உறவுகளைக் கவனித்துக் கொள்வதில் மிகவும் கவனம் செலுத்தி வரும் வேளையில் திருத்தந்தையின் இந்த சுற்றுமடல் மிகவும் வரவேற்கத்தக்கது என்றும், இந்தச் சுற்றுமடல் ஓர் ஆன்மீக வழிகாட்டி என்றும் தெரிவித்துள்ளார் கர்தினால் Gracias.
இயேசுவின் திரு இதயத்தை தொடுகின்ற நாம், பிறரின் இதயத்தை தொடுகிறோம் என்றும், நாம் மேற்கொள்ளும் பிறரன்புப் பணிகள் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது இயேசுவின் திருஇதய அன்பே என்றும் மேலும் கூறியுள்ளார் கர்தினால் Gracias.
சாதி மத பேதமின்றி அனைவரின் உடன்பிறந்த உறவாக நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாத கடமை நமக்கு உள்ளது என்றும், கிறிஸ்து மனித குலத்திற்கு அதிக நெருக்கமாக வந்து அனைவருக்கும் நன்மை செய்தார் என்றும். இயேசுவின் செயல்கள் துன்புறுவோரையும், உதவி தேவைப்படுவோரையும் சார்ந்தே இருந்தது என்றும் கூறினார் கர்தினால் Gracias.
இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருஅவையின் நலவாழ்வு பணிகள் அனைத்தும் நோயுற்றவர்கள் மற்றும் துன்பப்படுபவர்களின் வலியைப் போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் கர்தினால் Gracias.
நமது சுயநலம், மற்றவர்களைப் பற்றிய அக்கறையின்மை மற்றும் மற்றவர்களுடனான உறவுகள் இல்லாமை ஆகியவற்றிலிருந்து குணமடைய உலகிற்கு நலமாக்கும் தொடுதல் தேவைப்படுகிறது என்றும், திருத்தந்தையின் என்னும் சுற்றுமடல் முழுவதுமே அதன் அடிப்படையிலானது என்றும் தெரிவித்துள்ளார் மும்பை பேராயர், கர்தினால் Gracias.
இதயத்தில் தாழ்மை உள்ளவர்களாக வாழ்வதற்கு முக்கியமான வழிகாட்டுதலை திருத்தந்தையின் சுற்றுமடல் நமக்குத் தருகிறது என்றும், நமது பணியில், நாம் மென்மையான, பணிவான இதயத்தைக் கொண்டு அமைதி நிறைந்த சமுதாயத்தை உருவாக்க அழைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் கர்தினால் Gracias.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்