MAP

பிறரை புரிந்து கொள்வதும் நம்மை நாமே புரிந்துகொள்தலும் மன்னிப்புக்கு வழி காட்டும். பிறரை புரிந்து கொள்வதும் நம்மை நாமே புரிந்துகொள்தலும் மன்னிப்புக்கு வழி காட்டும். 

வாரம் ஓர் அலசல் – ஜூலை 07. – உலக மன்னிப்பு தினம்

‘மன்னித்தல் எப்பொழுதும் எளிதானதல்ல. சில சமயங்களில் நாம் பட்ட காயத்தை விட, அதை ஏற்படுத்தியவரை மன்னிப்பது மிகவும் வலி மிகுந்ததாக இருக்கிறது. இருப்பினும் மன்னிப்பு இல்லாமல் அமைதி இல்லை’.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

“தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை”, என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு வாக்கியம். அந்த மன்னிப்பை ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்கு வழங்கிக்கொண்டேயிருக்கிறார்.  

‘தண்டனை கொடுப்பதற்குத் தாமதம் செய். ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே’ என்றுரைத்தவர் அன்னை தெரசா. ‘மன்னிப்பு இல்லாமல் இங்கே எதிர்காலம் இல்லை’,- தன்னை இனவெறி கொண்டு சிறையடைத்தவர்களை மன்னித்த நெல்சன் மண்டேலா கூறினார். ‘மற்றவர்களை மன்னிக்க முடியாதவர்கள், தாங்கள் கடந்து செல்ல வேண்டிய பாலத்தை தாங்களே உடைக்கிறார்கள்’ என்றார் கன்பூசியஸ். ‘ஒரு மதத்தின் முழு நோக்கமும் அன்பு, இரக்கம், பொறுமை, சகிப்புத்தன்மை, பணிவு, மன்னிப்பு ஆகியவற்றை எளிதாக்குவதாகும்’ என்றுரைத்தவர், நம்மோடு இன்றும் வாழ்ந்துவரும் தலாய் லாமா.

‘மன்னிக்கும்போது, உங்களால் கடந்த காலத்தை எந்த வகையிலும் மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் நிச்சயமாக எதிர்காலத்தை மாற்றுவீர்கள்’, எனவும், ‘நாம் ஒருவரையொருவர் மன்னிப்பதற்கு முன், நாம் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும்’, எனவும்,  ‘மன்னித்தல் எப்பொழுதும் எளிதானதல்ல. சில சமயங்களில் நாம் பட்ட காயத்தை விட, அதை ஏற்படுத்தியவரை மன்னிப்பது மிகவும் வலி மிகுந்ததாக இருக்கிறது. இருப்பினும் மன்னிப்பு இல்லாமல் அமைதி இல்லை’, எனவும், ‘அன்பின் இறுதி வடிவம் மன்னிப்பு’ எனவும் பல சான்றோர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள்.

உலக மன்னிப்பு தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மன்னிப்பதன் முக்கியத்துவத்தையும், மன அமைதிக்கான அதன் பங்கையும் குறித்து உலகளாவிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மன்னிப்பு என்பது ஒருவருக்கு மட்டுமல்லாமல், நம் மன அமைதிக்கும் முக்கியமானதாகும். பழைய கசப்பான சம்பவங்களை மன்னிப்பதன் வழியாக, நாம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். பழைய சம்பவங்களை கடந்து செல்வதற்கும், புதிய நாளை துவக்குவதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமைகிறது. இதன் மூலம் நல்லிணக்கம் மற்றும் மன அமைதியை மேம்படுத்தலாம்.

அந்த வயது முதிர்ந்த தாய்க்கு தொழுநோய். கை நிறைய ஊதியத்தோடு வளமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் அவரது அருமை மகன் அவரைத் தெருவில் வீசிவிட்டார். அந்த தாய், தெருவில், தொழுநோய் முற்றிப்போய், உடல் அழுகிய நிலையில், அன்னை தெரேசா அவர்களது பிறரன்பு இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டார். மற்ற நோயாளிகளுடன், அந்த தாய்க்குப் பணிவிடை செய்த புனித அன்னை தெரேசா அவர்கள், அவரிடம், ‘உங்கள் மகனை மன்னிப்பது கடினம்தான், ஆனாலும் மகனை மன்னிக்க மாட்டீர்களா’ என்று அடிக்கடி கேட்டு வந்தார். அந்த தாய் தனது இறுதி மூச்சை விடுவதற்குமுன், தன் மகனை மனதார மன்னித்துவிட்டதாக ஒரு புன்னகையை உதிர்த்தார். அந்த நேரத்தை நினைவுகூர்ந்த புனித அன்னை தெரேசா அவர்கள், “அப்போது அந்த தாயின் முகத்தில் தோன்றிய புன்னகைதான், உலகிலேயே மிகச்சிறந்த புன்னகை” என்று சொன்னார்.

உண்மைதான். மன்னிக்கும் திறன் என்பது அனைத்து மனிதர்களுக்குள்ளும் இயல்பாக இருக்கிறது. ஆனால் ஆழ்மனதில் ஊடுருவி நிற்கும் ‘தான்’ என்னும் அகங்காரம் என்பது அதனை தடுத்து விடுகிறது. சுய உழைப்பு, கடும் வலிகளை தாண்டி வந்த மனிதர்கள் மன்னிப்பதையும், மன்னிப்பு கேட்பதையும் எளிதாக எடுத்துக் கொள்வார்கள். ஒரு தவறு செய்தால் மன்னிப்பு கேட்பவன் மனிதன், அதனை ஏற்று அரவணைப்பவன் மாமனிதன்.

ஆனால், இன்றைய மனித வாழ்க்கை சூழல் மனிதனை இயந்திரமாக மாற்றி வைத்துள்ளது. இதன் காரணமாக மன்னிப்பு என்பதற்கான அர்த்தம் புரியாமல்தான் பெரும்பாலானவர் உள்ளனர். முக்கியமாக, பழிக்கு பழி என்ற சொல் எங்கு பார்த்தாலும் முன்னிடத்தில் உள்ளது. மன்னிப்பு என்ற சொல்லை மனிதகுலம்  மறந்து வருகிறது.

பொறாமை, பிடிவாதம், வாக்குவாதம், புரிதலின்மை போன்றவையால் மன்னிப்பு என்பதே மறைந்து வருகிறது. பலருக்கு, தான் செய்தது தவறென்று தெரிந்தும் அதை ஒப்புக் கொள்வதற்கு தன்மானம் இடம் கொடுப்பது இல்லை.  நம் தவற்றை மற்றவர்கள் சுட்டிக் காட்டும்போது அது உண்மையாக இருந்தால், அதை நேர்மையாக ஒப்புக் கொள்வோம். அது நம்மைப் பற்றிய நன்மதிப்பைத் தான் அதிகரிக்கும். மன காயங்களை போக்கும் மாமருந்து மன்னிப்பு. அதனால்தான் அது வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்று. சக மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து ஏற்பதே இதற்கான அடித்தளம். வெறுப்புணர்வைக் கொண்டிருப்பவர்களை விட மன்னிப்பை நாடுவோர் நலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  மன்னிக்கும் மனது என்பது உடலையும், மனதையும் மேம்படுத்தும் ஓர் அரிய கலை என்றே கூறலாம். இதற்காகத்தான் ஒவ்வோர் ஆண்டும் இது குறித்து விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஜூலை 7ஆம் தேதி இன்று உலக மன்னிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்திங்கள்தான் அதற்கான நாள்.

20ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள், உளவியலாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மனித நல்வாழ்வில் ஏற்படும் தாக்கங்களை ஆராயத் தொடங்கியபோது, மன்னிப்பு அறிவியலின் கவனத்தை ஈர்த்தது. மனிதன் நலமாக, அமைதியாக வாழ மன்னிப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. 1994இல் கிறிஸ்தவ இயக்கம் ஒன்று பிரிட்டிஷ் கொலம்பியாவில் தேசிய மன்னிப்பு தினத்தை நிறுவியது. இந்த நாள் வேகமாக பரவத் துவங்கி, பின்னர் 'உலகளாவிய மன்னிப்பு தினம்' என மறுபெயரிடப்பட்டது.

மற்றவர்களின் கடந்த கால தவறுகளை மன்னிப்பதன் வழியாக அவர்களுடன் புதிய மற்றும் வலுவான பிணைப்பை உருவாக்க முடியும் என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. தவறு செய்யாத மனிதர்கள் இல்லை, அவர்கள் திருந்த நாம் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும், அது நம் கடமை. ஆம் நாம் மன்னிப்பு நிலைக்கு நம்மை மாற்றவேண்டும். மற்றவர்களை மன்னிப்பதன் வழியாகவும், சமுதாயத்தை அனைவருக்கும் சிறந்த இடமாக மாற்ற உதவுவதன் வழியாகவும் உலகில் மாற்றத்தை ஏற்படுத்த நாம் உதவுகிறோம். சுற்றியுள்ள அனைவரையும் மன்னித்து நேர்மறையான வாழ்க்கையை வாழ்வது, பிறருக்கு மட்டுமல்ல, நமக்கும் தேவையானது, மற்றும் அத்தியாவசியமானது. கருணையும் இரக்கமும் உள்ளவர் ஒருநாளும் மன்னிக்கத் தயங்குவதில்லை என்பது இந்நாள் நமக்கு சொல்ல விரும்பும் பாடம்.

ஓர் ஊரில் மன்னர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வேட்டையாடுவதில் அதிக ஆர்வம். அவர் தமது ஆயுதங்களுடன் காட்டில் கொடிய மிருகங்களை வேட்டையாடிவிட்டு நகருக்கு எல்லையில் உள்ள கோயில் மரத்தின் நிழலில் சிறிது நேரம் ஓய்வாக உறங்கிக் கொண்டிருந்தார். திடீரென்று எங்கிருந்தோ ஒரு கல் வந்து மன்னரை காயப்படுத்தி, அவர் தூக்கத்தை கலைத்தது. சுற்றி இருந்த காவலர்கள் நாலா பக்கமும் சென்று, ஒரு நடுத்தர வயது பெண்ணை பிடித்து அழைத்து வந்து மன்னர் முன் நிறுத்தினார்கள்.

மன்னர் அந்த பெண்மணியைப் பார்த்து, “ஏனம்மா என் மீது கல்லை எறிந்தாய்? அது என் தூக்கத்தைக் கலைத்ததுடன் என்னையும் காயப்படுத்தி விட்டது” என்றார். அதற்கு அரசரை பார்த்து, “மன்னர் பெருமானே, நான் காட்டில் விறகு வெட்டியும், அவைகளை பொறுக்கியும், நாட்டில் விலைக்கு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் என் குழந்தைகளுக்கு உணவு அளிக்கிறேன். வரும் வழியில் மரத்தில் பழங்கள் இருப்பதை பார்த்தேன். என் குழந்தைகளின் நினைவு வந்தது. பிள்ளைகளின் பசியை போக்குவது பெற்றவள் கடமை அல்லவா?. அந்த பழங்களை பறிப்பதற்காக ஒரு கல்லை எடுத்து மரத்தில் எறிந்தேன். தாங்கள் மர நிழலில் உறங்கிக் கொண்டிருந்தது தூரத்தில் இருந்த எனக்கு தெரியவில்லை. நான்  எறிந்த அந்த கல்லானது உங்கள் மீது பட்டு உங்கள் தூக்கத்தைக் கலைத்ததுடன் உங்களையும் காயப்படுத்தி விட்டது. இந்த தவறுக்கு நான்தான் காரணம் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்று வேண்டி நின்றாள் அத்தாய்.

மன்னர் அந்த பெண்மணியைப் பார்த்து, “பெண்ணே, நீ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கின்றாய். அது உன் சிறந்த பண்பு. உன்னை மன்னித்து விட்டேன்”, என்று கூறியதோடு அப்பெண்ணுக்கு இரண்டு பசுக்களையும், கை செலவுக்கு பணத்தையும் கொடுக்க ஆணையிட்டார்.

சுற்றி இருந்த காவலர்கள் மன்னரை நோக்கி, “அரசே, தங்களைக் கல்லால் அடித்தவளை மன்னித்ததுடன் அவளுக்கு பரிசும் தருகிறீர்கள். இச்செயல் எங்களுக்கு வியப்பு அளிக்கிறது” என்றனர்.

காவலர்களைப் பார்த்து மன்னர், “காவலர்களே, அறிவற்ற மரம் கல்லால் அடித்தால் பழம் தருகிறது. அவ்வாறு இருக்க, அறிவுள்ள நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?. மேலும் அவள் வேண்டுமென்று என்னை கல்லால் அடிக்கவில்லை. பழங்களை உதிர்க்கவே கல்லால் அடித்தாள், அது தவறுதலாக என் மீது பட்டு என்னை காயப்படுத்தியது. அவள் தான் செய்த தவறுக்கு வருந்தி என்னிடம் மன்னிப்பு கேட்டாள். அது மட்டுமல்ல, அவள் தன் பிள்ளைகளின் பசியை போக்கவே மரத்தின் மீது கல் எறிந்தாள். அது தாயாகிய அவள் கடமை அல்லவா?. அவள் அவளுடைய பிள்ளைகளுக்காக அவ்வாறு செய்தாள். நான் என் குடிமக்களுள் ஒருவராகிய அவளுக்கு பரிசு வழங்கினேன்” என்றார். காவலர்கள் மன்னரின் விளக்கம் கேட்டு வாயடைத்து நின்றனர்.

இனிய ஞாபகங்கள் தண்ணீரில் உப்பைப் போலவோ சக்கரைப் போலவோ மனத்துடன் இரண்டறக் கரைந்து விடுகின்றன. கசப்பான ஞாபகங்களோ தண்ணீரில் எறியப்பட்ட கற்களைப் போல அடியில் தங்கிவிடுகி, அல்லது குப்பைகளாய் மிதந்து நாறத் தொடங்கி விடுகின்றன. தண்ணீரைச் சுத்தப்படுத்த, மிதப்பவற்றையும் அடியில் தங்கி விடுபவற்றையும் அகற்ற வேண்டியது எந்த அளவுக்கு அவசியமோ அதே அளவு, மனதைச் சுத்தப்படுத்த, கசப்புகளை மன்னிப்பதும் அவசியம். சிலர் தவறு நடந்தவுடனேயே அந்த இடத்திலேயே மன்னிப்பு கேட்பதும் உண்டு. சிலரோ, மனதில் நினைத்தாலும் சுயகவுரவத்தினால் சொல்லாமல் விடுவதும் உண்டு. இன்னும் ஒரு படி மேலே போய், செய்த தவறை நியாயப்படுத்துவதும் உண்டு. கேட்கப்படாத மன்னிப்புக்கள் பல சமயங்களில் பல பேருடைய வாழ்க்கையையே மாற்றி விடுகின்றன.

சிலர் கேட்கலாம், ‘தவறுக்குத் தண்டனைதானே தீர்ப்பாக முடியும்? மாறாக, தவறை மன்னிப்பதால் தவறு செய்தவன் மேலும் ஊக்கம் கொள்ள மாட்டானா?‘ என்று. உண்மைதான். தண்டனை தேவைதான். அதற்கும் வழி காட்டுகிறார் தெய்வப்புலவர் வள்ளுவர். ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ என்கிறார். தீமை செய்தவர்களுக்கு மன்னிப்பு என்னும் நன்மை செய்து அவர்களை நாணமடையச் செய்வதே அவர்களுக்கானத் தண்டனை என்கிறார். இவ்வகையில் மன்னிப்பு என்பது ஒரு விதத்தில் நமக்கு தீங்கு செய்பவர்களுக்கு நாம் கொடுக்கும் சிறந்த தண்டனைதான். ஆனால் இந்த தண்டனை என்பது இருதரப்பு மனிதர்களையும் மாமனிதர்களாக மாற்றும். பழைய குறைகளில் இருந்து முன்னேறவும் இது ஒரு சிறந்த வாய்ப்பு.

செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பது சிறந்த குணமாகும். அதைவிட உயர்ந்தது, நாமே தேடிச் சென்று மன்னிப்பது. எனவே, நாம் தெரியாமல் தவறு செய்திருந்தால் உரியவரிடம் மன்னிப்பு கேட்க பழக வேண்டும்.

தவறு நம் பக்கம் எனில், மன்னிப்பு கேட்போம். தவறு அடுத்தவர் பக்கம் எனில், மன்னிப்பு கொடுப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 ஜூலை 2025, 12:32