காசாவில் ஊட்டச்சத்து உதவி விநியோகத்தின் போது குழந்தைகள் கொலை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காசாவின் டெய்ர் அல் பலாவில் ஊட்டச்சத்து உதவிக்காகக் காத்திருந்தபோது ஒன்பது குழந்தைகள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட 15 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்று பெரிதும் கவலை அளிக்கும் செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
ஜூலை 10, இவ்வியாழனன்று, இத்தகவலை அறிக்கையொன்றில் வழங்கியுள்ள அந்நிறுவனம், இச்சம்பவத்தின்போது 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும், அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் என்றும் கூறியுள்ளது.
இந்த உதவியை யுனிசெஃப் நிறுவனத்தின் துணைவரான ப்ராஜெக்ட் ஹோப் (Project Hope) என்ற அமைப்பு மிகவும் தேவைப்படும் குடும்பங்களுக்கு விநியோகித்து வந்தது என்று கூறும் அதன் அறிக்கை, பாதிக்கப்பட்டவர்களில் ஒரு வயது சிறுவன் முகமதுவும் இருந்தான் என்றும், அவனது அன்னை டோனியா பலத்த காயமடைந்த நிலையில் உயிர் பிழைத்தாள் என்றும் எடுத்துக்காட்டியுள்ளது.
இந்தத் தாக்குதல் "மனசாட்சிக்கு முரணானது" என்றும், "அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது" என்றும் கண்டனம் தெரிவித்துள்ள யுனிசெஃப் நிறுவனம், தொடர்ச்சியான மோதல்கள் காரணமாக, காசாவில் உள்ள குழந்தைகள் பட்டினியால் போதிய அளவிற்கு உதவிகள் இன்றி பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளனர் என்றும் கூறியுள்ளது.
அதேவேளையில், இஸ்ரேல் நாடு தனது ஈடுபாட்டு விதிகளை மறுபரிசீலனை செய்யவும், தனது மனச்சான்றுக்கேற்ப விசாரணை ஒன்றை மேற்கொள்ளவும், பொதுமக்களின் பாதுகாப்பையும் மனிதாபிமான அணுகலையும் உறுதி செய்யவும் வலியுறுத்தியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
மேலும் உடனடி மற்றும் நீடித்த போர்நிறுத்தம் ஏற்படுத்துதல், பிணையக்கைதிகளை விடுவித்தல், பொதுமக்களுக்கு உயிர்காக்கும் பொருள்களை தடையின்றி வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளுமாறு மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்