புறக்கணிக்கப்படும் சூடான் குழந்தைகளின் உரிமைகள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
சூடானில் வாழும் குழந்தைகளின் உரிமைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும், அவர்கள் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர், தங்கள் அன்புக்குரியவர்கள் கொல்லப்படுவதையும், ஊனமாக்கப்படுவதையும் நேரிடையாகக் காணும் நிலையில் இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் சேவ் தி சில்ட்ரன் தேசிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் துணை இயக்குநர் பிரான்செஸ்கோ லனினோ.
ஜூலை 12, சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள சூடானின் சேவ் த சில்ரன் அமைப்பின் தேசிய துணை இயக்குநர் பிரான்செஸ்கோ லனினோ அவர்கள், பல ஆண்டுகளாக அடிப்படைக் கல்வியை குழந்தைகள் இழந்துள்ளனர் என்றும், இது அவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
சூடானில் போர்நிறுத்தத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்கவும், மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தடையற்ற உதவியை அனுமதிக்கவும், பன்னாட்டு சமூகத்தை சேவ் தி சில்ட்ரன் அமைப்பு அழைக்கிறது என்றும் தெரிவித்துள்ள லனினோ அவர்கள், மனிதாபிமான உதவி, ஊட்டச்சத்து, கல்வி, குழந்தை பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதற்கான ஆதரவிற்கான நிதியை அதிகரிப்பதும் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
எகிப்து மற்றும் தென்சூடானில் உள்ள சூடான் புலம்பெயர்ந்தோருக்கும் சேவ் த சில்ரன் அமைப்பு ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்துள்ள லனினோ அவர்கள், எல் ஃபாஷர், தவிலா மற்றும் மத்திய டார்பூரில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது என்றும், ஊட்டச்சத்து, நீர், நலவாழ்வு, பாதுகாப்பு, வீட்டுவசதி ஆகியவற்றில் அடிப்படைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் சூடான் போரினால் நாட்டின் மையப்பகுதியான வடக்கு டார்பூரில், வன்முறை ஒரு தினசரி நிகழ்வாக ஏற்பட்டு வருகின்றது என்றும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இடம்பெயர்ந்தோர்க்கான ஜம்சாம் முகாம் கொடூரமாக தாக்கப்பட்டபோது இந்நிலை உச்சத்தை எட்டியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜம்சாமின் மொத்த மக்கள்தொகையில் தொண்ணூற்றொன்பது விழுக்காட்டினர் அதாவது, 5,00,000 பேர், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் முகாமிலிருந்து இடம்பெயர்ந்தனர் என்றும் அவர்களில் 2,60,000 பேர் குழந்தைகள் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார் லனினோ.
ஏறக்குறைய 75 விழுக்காட்டினர் ஜம்ஸாமிலிருந்து தென்கிழக்கே 60 கிமீ தொலைவில் அமைந்துள்ள தவிலா புலம்பெயர்ந்தோர் முகாமுக்கு குடிபெயர்ந்தனர் என்றும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார் லனினோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்