MAP

காணொலிக் காட்சியில் செய்தி வழங்கும் திருத்தந்தை காணொலிக் காட்சியில் செய்தி வழங்கும் திருத்தந்தை  

போட்டியும் இதயமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை!

"உடைந்த இதயங்களைக் குணப்படுத்துவதும், கடவுளில் நமது ஒன்றிப்பை அங்கீகரிப்பதும் நமது மிகப்பெரிய சவாலும் அழைப்புமாக உள்ளது" : திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

“போட்டி" என்பது எதிர்கொள்ளலைக் குறிக்கிறது என்றும், எதிராளிகள் கூட தங்களை ஒன்றிணைக்கும் ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்கும் ஒரு மோதல்களம்தான் விளையாட்டு என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூலை 15, இச்செவ்வாயன்று, "Partita del Cuore" அதாவது, 'இதயத்தின் விளையாட்டு' என்று அழைக்கப்படும் கால்பந்தாட்ட நிகழ்வொன்றின் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள காணொளிச் செய்தியொன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, போட்டி என்ற வார்த்தையும், இதயம் என்ற வார்த்தையும் ஒன்றோடு ஒன்று மிகவும் தொடர்புடையவை என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

"Partita del Cuore" அதாவது, 'இதயத்தின் விளையாட்டு' என்பதன் ஆழமான அர்த்தத்தைப் பற்றி தனது சிந்தனைகளை இச்செய்தியில் வழங்கியுள்ள திருத்தந்தை, எதிர்கொள்ளல் மற்றும் இரக்கத்தின் முக்கியத்துவத்தையும் இதில் வலியுறுத்தியுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக, குழந்தை இயேசு மருத்துவமனை மற்றும் காரித்தாஸ் இத்தாலியால் ஒருங்கிணைக்கப்பட்ட இவ்விளையாட்டுப் போட்டிக்காகவும் அவைகளைப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை.

கடந்த 1914-ஆம் ஆண்டு நிகழ்ந்த கிறிஸ்துமஸ் போர் நிறுத்தத்தை தனது செய்தியில் நினைவு கூர்ந்துள்ள திருத்தந்தை, அங்கு எதிரிகள் ஒரு பகிரப்பட்ட போட்டியின் மூலம் சிறிது நேரத்தில் தோழர்களாக மாறினர் என்றும், போரின்போதும்கூட மற்றவர்களை ஒன்றிப்பில் சந்திப்பது எப்போதும் சாத்தியம் என்றும் மொழிந்துள்ளார்.

விளையாட்டும் தொலைக்காட்சியும் அன்பு மற்றும் உள்ளடக்கத்துடன் (அனைவரையும் உள்ளடக்கி) செயல்படும்போது, அவை பிரிவினையை அகற்றி ஒன்றிணைந்த சமூகமாக மாற்றும் என்பதைப் பாராட்டியுள்ள திருத்தந்தை, அரசியல்வாதிகள் மற்றும் இசைக்கலைஞர்களின் தனித்துவமான ஒன்றிப்பையும் எடுத்துக்காட்டி, அரசியல் அமைதிக்கு சேவை செய்ய முடியும், இசை மனிதகுலத்தை வளப்படுத்த முடியும் என்பதைச்  சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக, இயற்கையாகவே கடவுளைக் காணும் தூய இதயங்களைக் கொண்ட குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ளவும், அமைதி, வரவேற்பு மற்றும் நம்பிக்கையைத் தழுவவும் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஊக்குவித்துள்ள திருத்தந்தை, இந்தப் போட்டி அமைதிக்கும் மனிதகுலத்திற்கும் ஒரு வெற்றியாக அமைய வேண்டும் என்று இறைவேண்டல் செய்வதாகவும் உறுதியளித்து தனது செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 ஜூலை 2025, 12:25