திருத்தந்தையுடன் உக்ரைன் அதிபர் சந்திப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஜூலை 8, இச்செவ்வாயன்று, உக்ரைன் அதிபர் வலோதிமிர் ஜெலென்ஸ்கி அவர்கள், உரோமைக்கு அருகிலுள்ள காஸ்தல் கந்தோல்போ கோடை விடுமுறை இல்லத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களைச் சந்தித்து உரையாடியதாகக் கூறியுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
இந்தச் சந்திப்பின்போது, போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வருத்தம் தெரிவித்த திருத்தந்தை, கைதிகளின் விடுதலை மற்றும் குழந்தைகளை அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைப்பது உள்ளிட்ட உரையாடலுக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்காக உக்ரைன் மற்றும் இரஷ்யா ஆகிய இரு நாடுகளின் பிரதிநிதிகளையும் வத்திக்கானுக்கு வரவேற்கத் தயாராக இருக்கும் திருப்பீடத்தின் விருப்பத்தையும் உக்ரேனிய அதிபரிடம் திருத்தந்தை மீண்டும் வலியுறுத்தினார்.
திருத்தந்தையுடனான சந்திப்பைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் அதிபர், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தங்களை அன்புடன் வரவேற்று உபசரித்ததற்காகவும், குறிப்பாக, இரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட உக்ரேனிய குழந்தைகள் தொடர்பான பிரச்சனையில், திருத்தந்தை மற்றும் வத்திக்கானின் ஆதரவிற்காகவும் தான் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.
மேலும் அமைதியை அடைவதற்கான உக்ரைனின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய அதிபர், "நிச்சயமாக நாங்கள் அமைதியையும், போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதையும் விரும்புகிறோம்," என்று கூறியதுடன், "இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உயர்மட்டத் தலைவர்களின் கூட்டத்திற்கு ஓர் இடத்தை வழங்க வத்திக்கானும் திருத்தந்தையும் உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்