அன்பு, இரக்கம் என்னும் எண்ணெயினை நம்மேல் பொழியும் இறைவன்
மெரினா ராஜ் - வத்திக்கான்
கடவுள் நம் மேல் கொண்ட பார்வையை நாம் மற்றவர்களிடத்தில் கொண்டிருக்க வேண்டும் என்றும், நல்ல சமாரியராகிய இயேசு நமது காயங்களைக் குணப்படுத்த வந்தார், அன்பு, இரக்கம் என்னும் எண்ணெயினை நம்மேல் ஊற்றினார் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூலை 13, ஞாயிறு காஸ்தல் கந்தோல்போவில் உள்ள வில்லானோவா, தூய தோமா திருப்பீடப் பங்குத்தளத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றியபோது இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் நல்ல சமாரியர் உவமை குறித்தக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
நல்ல சமாரியரைப்போல கிறிஸ்து நம்மை அன்பு செய்கின்றார், நம்மை பாதுகாக்கின்றார் அவரைப்போல பிறரை அன்பு செய்யவும், பாதுகாத்து பராமரித்து இரக்கமுள்ளவர்களாக வாழவும், நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம் என்பதை நமது வாழ்க்கையின் ஆழத்தில் நாம் கண்டடைகின்றோம் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இயேசு கிறிஸ்துவால் குணமாக்கப்பட்டு அன்பு செய்யப்பட்ட நாம், உலகில் அவருடைய அன்பு மற்றும் இரக்கத்தின் அடையாளங்களாக மாறுகிறோம் என்றும், கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள், மனம்மாறுங்கள் என்று முதல் வாசகத்தில் மோசே வலியுறுத்துவதுபோல, நாம் நமது இதயத்திற்குத் திரும்பவும், அங்கு இறைவன் எழுதியுள்ள அன்பின் சட்டங்களைக் கண்டறியவும் அழைக்கப்படுகின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை.
கடல்மட்டத்திற்கும் கீழானதாக இருக்கும் எரிக்கோ நகரை நோக்கிச் செல்லும் பாதையானது, தீமை, துன்பம் மற்றும் வறுமையில் மூழ்கிய அனைவரும் பயணிக்கும் பாதை என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், உடைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்டு, அடக்குமுறை அரசியல் அமைப்புகளால் பாதிக்கப்பட்டு, வறுமையில் தள்ளப்பட்டு வாழும் துன்புறும் மக்களின் கனவுகளையும் வாழ்க்கையையும், கொல்கின்ற போரின் பாதையை இப்பாதையானது அடையாளப்படுத்துகின்றது என்றும் கூறினார்.
நாம் நம் அருகில் துன்புறும் அயலாரைக் கண்டு கடந்து செல்கின்றோமா? அவருக்கு உதவ நம் இதயத்தில் இடமளிக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், நமக்கு விருப்பமானவர்கள் நம்மைச் சார்ந்தவர்களை நாம் அயலாராகக் கருதும் நிலையில், இயேசு அதற்கு மாற்றாக, காயம்பட்டவரான வேற்று நாட்டவரானவரை நமது அயலாராகக் கருத வலியுறுத்துகின்றார் என்றும் தெரிவித்தார்.
நமது பார்வை வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றது. ஏனெனில், இதயத்தில் நாம் நினைப்பவற்றை நமது பார்வையானது வெளிப்படுத்துகின்றது. நம்மைக் கடந்தவற்றையும், நாம் உணர்ந்தவற்றையும் நமது பார்வையால் நாம் எடுத்துரைக்க முடியும் என்று மொழிந்த திருத்தந்தை அவர்கள், கடவுள் நம் மேல் கொண்ட பார்வையை நாம் மற்றவர்களிடத்தில் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறினார்.
இயேசு கிறிஸ்து இரக்கமுள்ள கடவுளின் வெளிப்பாடாக இருப்பதால், அவரை நம்புவதும், அவருடைய சீடர்களாக மாறி அவரைப் பின்பற்றுவதும், நாமும் அவருடைய அதே உணர்வுகளைப் பெற நம்மை மாற்றிக்கொள்ள அனுமதிப்பதும் அவசியம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நெகிழ்ச்சியடைந்த இதயம், கடந்து செல்லாமல் பார்க்கும் பார்வை, காயங்களுக்கு உதவுகின்ற, ஆற்றுகின்ற இரண்டு கரங்கள், தேவையிலிருப்பவர்களின் சுமையை சுமக்கும் வலுவான தோள்கள் நமக்கும் தேவை என்றும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்