MAP

பங்குத்தந்தை Tadeusz Rozmus பங்குத்தந்தை Tadeusz Rozmus 

திருத்தந்தையின் வருகையால் புதுப்பொழிவு பெறும் காஸ்தல் கந்தோல்போ

திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை காஸ்தல் கந்தோல்போவில் உள்ள தூய தோமா பங்குத்தளத்தில் திருப்பலி நிறைவேற்ற இருப்பதை முன்னிட்டு திருத்தந்தையை வரவேற்கத் தயாராக இருக்கின்றனர் தூய தோமா பங்குத்தள மக்கள்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

காஸ்தல் கந்தோல்போவிற்கு விடுமுறைக்காக ஒவ்வொரு திருத்தந்தையரும் வரும் நேரங்களில் எல்லாம் நகரம் மிகவும் பொழிவு பெறுகின்றது என்றும்,  திருவிழாக்கோலம் பெறுகின்றது என்றும் வத்திக்கான் செய்திகளுக்குத் தெரிவித்தார் பங்குத்தந்தை ததேயூஸ் ரோஸ்முஸ்.

ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரம் காலை 9:30 மணிக்கு காஸ்தல் கந்தோல்போவில் உள்ள தூய தோமா பங்குத்தளத்தில் திருப்பலிக்குத் தலைமை தாங்கும் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களை வரவேற்க, நகர மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர் என்றும், திருத்தந்தை இந்த ஆலயத்திற்கு வருவது என்பது நம் வீட்டிற்குள் வரும் ஒரு விருந்தினரை வரவேற்கத் தயாராகுவது போன்றது என்றும் தெரிவித்தார் பங்குத்தந்தை ரோஸ்முஸ்.

சலேசிய சபை அருள்பணியாளரும் தூய தோமா பங்குத்தளத்தின் பங்குத்தந்தையுமான அருள்தந்தை ததேயூஸ் ரோஸ்முஸ் அவர்கள், திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றுவதற்கான தயாரிப்பு பணிகளில் ஏராளமான பேர் உதவி செய்ய முன் வருகின்றார்கள் என்றும், இத்தகைய அழகான ஒற்றுமை செயலானது செல்வம் போன்று திகழ்கின்றது, திருத்தந்தையின் உடனிருப்பு ஒன்றிப்பின் அடையாளமாகத் திகழ்கின்றது என்றும் எடுத்துரைத்தார்.

விருந்தினருக்காக வீட்டை சுத்தம் செய்தல், எல்லாவற்றையும் ஒழுங்கமைத்தல், ஒவ்வொரு விவரத்தையும் கவனித்துக்கொள்ளுதல் போன்ற பணிகளை திருத்தந்தையின் வருகைக்காக அனைவருடனும் பகிர்ந்து செய்து வருவதாக எடுத்துரைத்த அருள்தந்தை ரோஸ்முஸ் அவர்கள், உதாரணமாக, ஓபஸ் டீயைச் சேர்ந்த பெண்கள் குழு பல்வேறு பகுதிகளிலிருந்து உதவி செய்ய முன் வந்தது புத்துணர்ச்சியூட்டும் அடையாளங்களாக இருக்கின்றன என்றும் கூறினார்.

திருத்தந்தையின் உடனிருப்பு ஒரு நிகழ்வாக மட்டுமல்லாது, ஒற்றுமையின் அடையாளமாக இருக்கின்றது என்றும், ஒரு மகத்தான பரிசை அனுபவிக்கிறோம்: உலகம் எவ்வளவு பிளவுபட்டு இருந்தபோதிலும், ஒரே இலக்கை நோக்கி பயணிக்கும் நமது வாழ்க்கைப் பயணத்தில் இருக்கும் நாம் அனைவரும் ஒரே திருஅவையைச் சார்ந்தவர்கள் என்பதை  ஒருங்கிணைந்த பயணம் நமக்கு நினைவூட்டுகிறது என்றும் தெரிவித்தார் அருள்தந்தை ரோஸ்முஸ்.

திருப்பலிக்காக மக்கள் அனைவரும் இணைந்து செய்யும் முயற்சிகள் ஒவ்வொன்றும் திருத்தந்தை மற்றும் திருஅவை மீதான நம்பிக்கை மற்றும் அன்பின் வெளிப்பாடாக இருக்க விரும்புவதாகவும் எடுத்துரைத்தார் அருள்தந்தை ரோஸ்முஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 ஜூலை 2025, 13:32