தென்கொரியாவின் சியோலில் உலக இளையோர் தின தயாரிப்புகள்
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கத்தோலிக்க இளையோர் தினம் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று, பொதுநிலையினர், குடும்பங்கள் மற்றும் வாழ்விற்கான திருப்பீடத் துறையின் செயலர் Gleison de Paula Souza நம்பிக்கைத் தெரிவித்துள்ளாதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூலை 8 முதல் 13 வரை தென் கொரியாவிற்கு பயணம் மேற்கொண்டபோது இதனைத் தெரிவித்த Gleison அவர்கள், 2027 ஆம் ஆண்டு உலக இளையோர் தின நிகழ்வில் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களும் கலந்து கொள்வார் என்று உறுதிப்படுத்தியதையும் குறிப்பிட்டுள்ளது அச்செய்தி நிறுவனம்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகளாவிய கத்தோலிக்க இளைஞர் கூட்டம், உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்துள்ளது என்றும் யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
1985 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் இத்தினம் நிறுவப்பட்டது.
உலகளவில், குறிப்பாக தென் கொரியாவில் இளைஞர்களிடையே தற்கொலை விகிதம் அதிகமாக இருப்பதைக் குறிப்பிட்டு, இன்றைய உலகில் இளைஞர்கள் சந்திக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள், துன்பங்கள், வெறுப்பு மற்றும் கவலைகள் பற்றித் திருஅவையும் சமூகமும் நன்கு அறிந்திருக்கிறது என்றும் Gleison அவர்கள் கூறியதையும் அச்செய்தி நிறுவனம் எடுத்துரைத்துள்ளது.
ஜூலை 9 அன்று, சியோல் மறைமாவட்டத்தின் துணை ஆயர் Paul Kyung Sang Lee, அத்தலத் திருஅவையின் இளையோர் தின ஏற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிற தன்னார்வலர்களுடன் இணைந்து Gleison அவர்கள், Jeoldusan மறைசாட்சிகளின் ஆலயத்தில் மரக்கன்றுகளை நட்டார் என்றும் தெரிவித்துள்ளது அச்செய்தி நிறுவனம்.
கொரிய இளைஞர்கள் மேற்கொண்ட மரம் நடும் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த Souza அவர்கள், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், நான்ஜிடோ தீவில் 10,000 மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற அவர்களின் இலக்கில் திருப்பீடத்தின் ஆதரவைக் காட்டுவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும் என்று கூறியதையும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மரம் நாடும் நிகழ்விற்கு முன்னதாக, உலக கத்தோலிக்க இளையோர் தினத்தில் தன்னார்வலர்களின் பணியின் நிலை குறித்து அவர்களுக்கு விளக்குவதற்காக, சியோலின் மியோங்டாங்கில் உள்ள WYD திட்டமிடல் அலுவலகத்தில் நடந்த ஒரு கூட்டத்திலும் வத்திக்கான் பிரதிநிதிகள் கலந்து கொண்டதாகவும் அச்செய்தி நிறுவனம் தகவலளித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்