பொதுக் காலம் 16-ம் ஞாயிறு : விருந்தோம்பல் தரும் வியத்தகு கொடைகள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. தொநூ 18: 1-10 II. கொலோ 1: 24-28 III. லூக் 10: 38-42)
பொதுக்காலத்தின் 16-ஆம் ஞாயிறு இன்று சிறப்பிக்கப்படுகின்றது. இன்றைய வாசகங்கள் விருந்தோம்பலால் வரும் வியத்தகு கொடைகள் பற்றிய சிந்தனைகளை நமக்கு வழங்குகின்றன. முதலில் தமிழரின் தனிப்பெரும் அடையாளமாக விளங்கும் விருந்தோம்பல் பற்றி சிறிது சிந்தித்துவிட்டு, பின்னர் இன்றைய வாசகங்களின் அடிப்படையில் நமது ஆன்மிகச் சிந்தனைகளை விரிவுபடுத்துவோம். ‘மருந்தே ஆயினும் விருந்தோடுண்’ என்கிறார் ஒளவையார். நாம் உண்கின்ற உணவை பசியோடு வருகின்றவர்களுக்கும் கொடுத்து உபசரிக்கும் பண்பு தமிழர்களுக்கு உரியதாகும். ‘இட்டு கெட்டவர் யாரும் இல்லை’ என்றும் கூறுவார்கள். இதன் அடிப்படையிலேயே தமிழரின் விருந்தோம்பல் பண்பும் அதன் மாண்பும் குறித்து தமிழ் இலக்கியங்களில் சிறப்பாகப் பேசப்படுகிறது. தொல்காப்பியம், திருமந்திரம், அகத்தியம், திருக்குறள், அகநானூறு, புறநானூறு ஆகிய சங்க இலக்கிய நூல்கள் விருந்தோம்பலைப் பற்றி அழகாக எடுத்துரைக்கின்றன. பொதுவாக, தமிழர் தம் வீடுகளுக்கு வரும் விருந்தினர்களை வாசல் வரை சென்று இன்முகத்துடன் வரவேற்று, கைகால்களை கழுவ வைத்து, இனிமையாகப் பேசி, நலம் விசாரிப்பர். பின்பு அவர்களுக்கு உணவு சமைத்து விருந்து பரிமாறுவர். இறுதியாக, அவர்கள் உண்டு முடித்த இலைகளை உபசரிப்பவர்களே எடுப்பதுடன் அவர்கள் சாப்பிட்ட கைகளைக் கழுவ நீரையும் ஊற்றி வைப்பர். பின்பு அவர்களுடன் அன்பாக உரையாடி வாசல் வரை சென்று அவர்களை வழியனுப்பி வைப்பர்.
பசியோடும் களைப்போடும் வருபவர்களுக்கு உணவளிப்பது உயர்ந்த புண்ணியம் என்கின்றன பல்வேறு மதங்கள். மண்ணில் உள்ள உயிர்களுக்கெல்லாம் உணவும், உடையும், வீடும் அளிப்பது தான் உயர்ந்த அறம் எனப்படுகிறது. மேலும், வறியவர்கள், முதியவர்கள், பிறவிகுறைபாடு உடையவர்கள், கைவிடப்பட்டு வீதியில் நிற்பவர்கள், நோயுற்றவர்கள் ஆகியோருக்கு உணவளிப்பதை சிறந்த அறமாகப் போதிக்கிறது மணிமேகலை என்னும் நூல். “அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள்” (நற்றிணை 142:9-11) என்கிறது நற்றிணை என்னும் நூல். சங்ககால மகளிர் நள்ளிரவில் விருந்தினர் வந்தாலும் முகம் திரிந்து நோக்காது அவர்களை எதிர் கொண்டு வரவேற்று உணவளித்தமையைக் கற்புடைமைக்குப் பொருத்திக் காட்டியுள்ளனர் நம் முன்னோர்கள்.
இந்தச் சிந்தனைகளின் அடிப்படையில் இன்றைய வாசகங்களை உற்றுநோக்குவோம். இப்போது முதல் வாசகத்தின் முதல் பகுதியை வாசிப்போம். பின்பு, ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, “என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம்மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டு வருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில், உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்” என்றார்.
இங்கே தமிழர் வரலாற்றில் நாம் கண்ட விருந்தோம்பல் பண்புகள் ஆபிரகாம் வாழ்விலும் அப்படியே காணக்கிடக்கின்றன. இன்றைய முதல் வாசகமும் மூன்றாம் வாசகமும் முக்கியமான கருத்தொன்றை நம்முன் வைக்கின்றன. அதாவது, நாம் நிறைந்த மனதுடன் ஒருவருக்கு விருந்தோம்பல் செய்யும்போது, அதற்கான பயனாக இறைவனின் அருள்வரங்களைப் பெற்றுக்கொள்கின்றோம். ஆபிரகாம் தன்னிடம் வந்த அம்மூன்று மனிதர்களுக்கும் விருந்தோம்பல் அளித்ததன் பயனாக அவருக்கு ஈசாக் என்னும் மகன் கொடையாக வழங்கப்படுவதைப் பார்க்கிறோம். இது முதல் வாசகத்தின் இரண்டாம் பகுதியில் அமைகிறது. அப்பொழுது ஆண்டவர்; “நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்றார்.
இன்றும்கூட நமது நடைமுறை வாழ்வில் இதனைக் காணமுடியும். அதாவது, நம்மை அழைக்கும் மக்களின் இல்லங்களுக்கு நாம் விருந்துண்ண செல்லும்போது, முதலில் அவர்களுக்காக இறைவேண்டல் செய்வதோடு, அவர்களை ஆசீர்வதிக்கின்றோம். குறிப்பாக, அவர்களின் சிறப்புத் தேவைகள் என்ன என்பதை அறிந்து அவைகளுக்காக செபிக்கின்றோம். “கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார், கடவுள் என்றும் உங்களைக் கைவிடமாட்டார், உங்களின் அனைத்துத் துன்ப துயரங்களும் நீங்கப்பெற்று நீங்கள் நலமாய் வாழ்வீர்கள், உங்களுக்கு எக்குறையும் வராது, விரைவில் உங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் கைகூடும், ஏற்கனவே திருமணமான உங்கள் பிள்ளைகளுக்கு இறைவன் குழந்தைச் செல்வங்களை வழங்குவார்” என்பன போன்ற வார்த்தைகளை அவர்களிடத்தில் நாம் கூறும்போது, அவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைவர். இன்னும் சிறப்பாக, அவர்களின் இந்தத் தேவைகளில் சில நிறைவேறும்போது நம்மை நினைத்து அவர்கள் பெரிதும் மகிழ்வார்கள். “அன்றைக்கு நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்து உணவருந்திவிட்டு, எங்களுக்காக இறைவேண்டல் செய்ததன் பயனாகத்தான் இந்த நலன்களையெல்லாம் நாங்கள் பெற்றுள்ளோம்” என்று நம்மைப் பார்க்கும்போதெல்லாம் பெருமையாகக் கூறுவார்கள்.
பழைய ஏற்பாட்டில் அரசர்கள் நூலில் அருமையான நிகழ்வு ஒன்று வருகிறது. எலியா காலத்தில் பெரும்பஞ்சம் ஏற்படுகிறது. அப்போது சாரிபாத்தில் வாழும் ஒரு ஏழைக் கைம்பெண்ணிடம் எலியா அனுப்பப்படுகிறார். அந்தக் கொடிய பஞ்சத்திலும் தன்னிடம் இருக்கும் சிறிதளவு மாவு மற்றும் எண்ணையைக் கொண்டு அக்கைம்பெண் அவருக்கு அப்பம் சுட்டு உணவளிக்கிறார். அத்தாயின் தாராள மனதின் காரணமாக அந்த மாவும் எண்ணையும் சிறிதளவு கூடக் குறையவில்லை. இதைத் தொடர்ந்து அகைம்பெண்ணின் ஒரே மகன் நோயுற்று இறந்து போகிறான். அப்போது எலியா “என் கடவுளாகிய ஆண்டவரே, இந்தச் சிறுவன் மீண்டும் உயிர் பெறச் செய்யும்” என்று மன்றாடினார். ஆண்டவரும் எலியாவின் குரலுக்குச் செவி கொடுத்தார். சிறுவனுக்கு மீண்டும் உயிர் திரும்பி வரவே, அவன் பிழைத்துக் கொண்டான். எலியா சிறுவனைத் தூக்கிக் கொண்டு மாடி அறையிலிருந்து இறங்கி வீட்டிற்குள் வந்து, “இதோ! உன் மகன் உயிருடன் இருக்கிறான்” என்று கூறி அவனை அவன் தாயிடம் ஒப்படைத்தார். அந்தப் பெண் எலியாவிடம், “நீர் கடவுளின் அடியவரென்றும் உம் வாயிலிருந்து வரும் ஆண்டவரின் வாக்கு உண்மையானதென்றும் தெரிந்து கொண்டேன்” என்றார் (1 அர 17:19-24). இங்கே விருந்தோம்பல் என்பது மறுவாழ்வு அளிக்கவும் வழிவகை செய்கிறது என்பதைப் பார்க்கின்றோம்.
இறுதியாக நற்செய்தி வாசகத்தைக் குறித்த சிந்தனைகளை உள்வாங்குவோம். இப்போது அப்பகுதியை வாசிப்போம். அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றார். ஆண்டவர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால், தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்
இன்றைய நற்செய்தியில் வரும் மார்த்தா மரியா நிகழ்வு, இயேசு ஆண்டவர் அக்குடும்பத்தின்மீது கொண்டிருந்த அளவற்ற சகோதர அன்பைக் குறித்துக் காட்டுகிறது. அவ்வாறே, அவர்கள் இருவரும் இயேசுவின்மீது கொண்டிருந்த தூய்மையான சகோதரத்துவ அன்பையும் நம்மால் காண முடிகிறது. இவர்கள்மீது இயேசு கொண்டிருந்த உறவைக் குறித்து லூக்கா நற்செய்தியாளர் மிகச் சுருக்கமாகக் கூறினாலும், யோவான் நற்செய்தியாளர் மிகவும் விரிவாக எடுத்துரைக்கின்றார் (காண்க யோவா 11: 1-37). “நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்” என்று இயேசு கூறியதும், அவனுக்காகக் கண்ணீர்விட்டு அழுததும் அக்குடும்பத்தின் மீது அவர் கொண்டிருந்த அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்துகிறது. முதலாவதாக, மார்த்தாவும் மரியாவும் இயேசுவுக்குக் கொடுக்கின்ற அன்பான விருந்தோம்பலின் வழியாக இயேசுவின் நிறைவான அன்புக்கு உரியவர்களாக மாறிப்போகின்றனர். குறிப்பாக, இன்றைய நற்செய்தியில் இறைவார்த்தையைக் கேட்கும் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டதற்காக மரியாவைப் பாராட்டுகிறார் இயேசு. ஆனால் அதேவேளையில், இத்தகைய உன்னத வாய்ப்பை நழுவவிட்ட மார்த்தாவைக் கடிந்துகொள்கிறார். பொதுவாக, நாம் எல்லாருமே பரபரப்பாய் செயல்படும் மார்த்தாவின் மேல் குற்றச்சாட்டுகளை வீசுகின்றோம். ஆனால் மார்த்தா செய்த செயல் மிகவும் கண்டனத்துக்குரிய செயல் ஒன்றும் இல்லை. யூத பாரம்பரியத்தின் படி வீட்டிற்குப் போதகர் ஒருவர் வரும்போது, அவ்வீட்டின் பெண்கள் அவரைக் கவனித்துக்கொள்வதில் தான் கவனம் செலுத்த வேண்டும். அதுமட்டுமன்றி, ஒரு போதகரின் காலடி அருகில் அமர்ந்து அவரது போதனைகளைக் கேட்பதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அவர்களின் தலையாயக் கடமை அப்போதகருக்கு விருந்து படைப்பது மட்டும்தான். ஆக, மார்த்தா இதனை நன்கு உணர்ந்திருந்ததனால்தான் இயேசுவுக்கு உணவு படைப்பதில் அவர் பரபரப்பாக இருக்கிறார். மேலும், “எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என இயேசுவிடம் வேண்டுகோள் ஒன்றையும் விடுக்கிறார். ஆனால் மரியா இந்தப் பாரம்பரியத்தை உடைத்தெறிந்துவிட்டு இறைவார்த்தைகளைக் கேட்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். ஆகவே, மனித வாழ்விற்கு இதுதான் அடிப்படைத் தேவை என்பதை உணர்ந்தவராய், மரியாவைப் போல செயல்படும்படி மார்த்தாவையும் அறிவுறுத்துகின்றார் இயேசு.
அதேவேளையில், மார்த்தாவிடமும் இறைநம்பிக்கையும் இறையியல் சிந்தனைகளும் அதிகம் காணப்பட்டன என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. எடுத்துக்காட்டாக, இலாசர் இறந்து நான்கு நாள்கள் கழித்து, அவனை உயிர்ப்பித்துக் கொடுப்பதற்காக இயேசு பெத்தானியாவுக்கு வருகின்றார். அப்போது இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு செல்கின்றார். ஆனால் மரியா வீட்டிலேயே இருந்துவிடுகிறார். அப்போது மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” என்கிறார். அப்போது இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்கும்போது, மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்று உரைக்கின்றார் (காண்க. யோவா 11:20-27). இயேசுவைக் குறித்து மார்த்தா வெளிப்படுத்தும் வார்த்தைகள் இறைநம்பிக்கையில் அவ்வளவு ஆழம் கொண்டவைகளாக இருக்கின்றன.
மேலும் இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயேசுவைப் பற்றியும் அவரது இறையாட்சிப் பற்றியும் அறிந்துகொள்வது மிகவும் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதன் அடிப்படையில்தான், "கிறிஸ்துவைப்பற்றியே நாங்கள் அறிவித்து வருகிறோம். கிறிஸ்துவோடு இணைந்து ஒவ்வொருவரும் முதிர்ச்சிநிலை பெறுமாறு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி முழு ஞானத்தோடு கற்பித்து வருகிறோம். இதற்காகவே வல்லமையோடு என்னுள் செயல்படும் அவருடைய ஆற்றலுக்கு ஏற்ப வருந்தி பாடுபட்டு உழைக்கிறேன்" என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுகின்றார் புனித பவுலடியார். ஆகவே, நமது அன்றாட வாழ்வில், நாம் வழங்கும் விருந்தோம்பல் வழியாக நமது ஆன்மிக வாழ்வையும் வளர்ச்சிபெற செய்து அதனால் வரும் நிறைந்த பயனையும் மகிழ்வுடன் அனுபவிப்போம். அதற்கான அருளை ஆண்டவராம் இயேசுவிடம் இந்நாளில் கேட்டு மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்