நம்பிக்கை மற்றும் அன்புடன் கடவுளை நோக்கி செபிப்போம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
நாம் வாழ்கின்ற சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், நாம் ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடனும் அன்புடனும் கடவுளிடம் ஜெபித்தால், எல்லா சிரமங்களையும் தாங்கிக்கொள்பவர்களாகவும், இயேசு கிறிஸ்துவுடன் இணைந்து அவரது சிலுவையைச் சுமப்பவர்களாகவும், அவருடைய ஆறுதல் மற்றும் ஊக்கத்தின் அருளைப் பெற்றுக்கொள்பவர்களாகவும் நாம் வாழ முடியும் என்று எடுத்துரைத்துள்ளனர் மியான்மார் ஆயர்கள்.
ஜூலை 12, சனிக்கிழமை துன்புறும் மியான்மார் மக்களுக்கு ஆறுதல் கூறியும் கடந்த 4 ஆண்டுகளாக நாட்டில் நிலவி வரும் சூழல் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்தும் அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளனர் மியான்மாரின் Myitkyina, Banmaw மற்றும் Lashio மறைமாவட்ட ஆயர்கள்.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் மோதலினால் மனித உயிர்கள், குடும்பங்கள், பண்ணைகள் மற்றும் நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் ஆயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்தோர் முகாம்களில் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் வருத்தத்துடன் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், மக்கள் தங்களது பாதுகாப்பு, தங்கள் குழந்தைகளின் கல்வி குறித்து கவலைப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
மத்திய மியான்மாரானது அண்மையில் ஆற்றல் மிக்க நிலநடுக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டது என்றும், வீடுகள் இடிந்து விழுந்தன, பலர் காயமுற்றனர் மரணமடைந்தனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், நாட்டின் நிலையற்ற தன்மை மற்றும் துன்பம் நிறைந்த ஒரு மோசமான சூழ்நிலையில், தங்களது மக்களை ஆறுதல்படுத்துவதற்காக இச்செய்தியை அவர்களுக்கு எழுதியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
“நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். (யோவான் 14:1), என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். (மத் 16:24). என்ற நற்செய்தி வரிகளுடன் மக்களுக்கு ஆருதல் தெரிவித்து தங்கள் செய்தியைத் துவக்கியுள்ளனர் ஆயர்கள்.
உலகில் உள்ள பல நாடுகள் இயற்கை பேரழிவுகள், வன்முறை, போர்கள், மரணம், நோய் மற்றும் பலவீனத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், துன்புறும் மக்கள் அனைவரும் நம்பிக்கையையும் நீதியையும் இழக்காமல், இந்த நிலையை விசுவாசத்துடன் வாழ அழைக்கப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சோர்வடையாமல், நீடித்த அமைதிக்காக செபிப்போம், நம் முழு இதயத்தாலும், மனத்தாலும், பலத்தாலும் கடவுளிடமிருந்து அமைதியை வேண்டிக்கொள்வோம். எல்லாவற்றுக்கும் மேலாக, எதிர்நோக்கு நிறைந்த இந்த யூபிலி ஆண்டில் ஒருவர் மற்றவருக்காக செபிப்போம், ஊக்கமூட்டுவோம். ஆறுதல் கூறுவோம், உதவுவோம் என்றும் வலியுறுத்தியுள்ளனர் ஆயர்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்