MAP

அன்னை மரியின் திருவிழாவில் மக்கள் அன்னை மரியின் திருவிழாவில் மக்கள் 

இந்தோனேசியாவில் அன்னைமரியின் விழாவில் இஸ்லாமியர்கள்!

இஸ்லாமிய மக்கள் பாரம்பரிய உடையணிந்து, அன்னை மரியை வரவேற்கும் விதமாக அவர்களின் தெருக்களை மூங்கிலால் அலங்கரித்த காட்சி மதங்களுக்கு இடையேயான ஒன்றிப்பின் ஆற்றல் வாய்ந்த சான்றாக அமைந்தது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான் 

இந்தோனேசியாவின் பெரும்பான்மையான கத்தோலிக்க மக்களைக் கொண்ட ஃப்ளோரெஸ் தீவில், அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட  மதக்கலாச்சார  Golo Koe  விழாவின்போது,  அப்பகுதியின் இஸ்லாமிய மக்கள், கத்தோலிக்கருடன் பவனி மற்றும் இறைவேண்டல்களில்  கலந்துகொண்டதாக யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூலை 9  முதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை சிறப்பிக்கப்படும்   ஃப்ளோரெஸ் தீவில் உள்ள Bari-யின் புனித மார்ட்டின் பங்குத் தலத்தில் நடைபெற்ற விண்ணேற்பு அன்னையின் திருஉருவம் தாங்கிய பவனியில் Golo Koe  என்னும் அன்னைமரியின் விழாவினைக்  கொண்டாட நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடியதாகவும்  கூறியுள்ளது  அச்செய்தி நிறுவனம்.

இந்தோனேசியாவின் Labuan Bajo  மறைமாவட்டத்தில் உள்ள 26 பங்குத் தலங்களில் Golo Koe  என்னும் அன்னைமரியின் விழா கொண்டாடப்படுகிறது என்றும், அந்நாட்டின் பாரம்பரிய நடனங்கள், பாடல்கள் மற்றும் சடங்குகளுடன் இவ்விழா  தொடங்கப்பட்டதாகவும்  தெரிவித்துள்ளது அச்செய்திக் குறிப்பு.

மேலும், அப்பகுதியின் இஸ்லாமிய மக்கள் பாரம்பரிய உடையணிந்து,  அன்னை மரியை வரவேற்கும்  விதமாக அவர்களின் தெருக்களை    மூங்கிலால் அலங்கரித்ததாகவும், இக்காட்சி மதங்களுக்கு இடையேயான ஒன்றிப்பின் ஆற்றல் வாய்ந்த சான்றாக அமைந்ததாகவும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அன்னை மரியா ஒற்றுமைக்கும், இறையாட்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும், இவ்விழாவில்  இஸ்லாமிய சகோதரர்களின் பங்கேற்பு,  ஒன்றிப்பின்  சிந்தனையை பிரதிபலிக்கிறது என்றும், ஜூலை 9 அன்று தொடக்கவிழாத் திருப்பலியைத் தலைமையேற்று சிறப்பித்த ஆயர்  Maksimus Regus கூறியுள்ளதையும் யூக்கான் செய்தி நிறுவனம் எடுத்துரைத்துள்ளது.

Golo Koe  திருவிழா வெறும் மதம் சார்ந்த விழா மட்டுமல்ல, இவ்விழாவானது மத மற்றும் இனங்களைக் கடந்த, ஆன்மிகமும் கலாச்சாரமும் கலந்த ஒன்றிப்பின் இயக்கம் என்று Labuan Bajo மறைமாவட்டத்தின் முதன்மைக்குருவும்,விழா ஒருங்கிணைப்பாளருமான அருள்பணியாளர்.ரிச்சர்டு மங்கு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்திற்கும் மேலாக  நடைபெறும் இவ்விழா, விண்ணேற்பு அன்னையின் திருஉருவம் தாங்கிய மிகப்பெரிய பவனியுடன், ஆகஸ்ட் 14 அன்று வாட்டர்பிரண்ட் நகரத்திலிருந்து  கோலோ கோ மலைவரை சென்று நிறைவு பெறுகிறது என்றும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 ஜூலை 2025, 13:09