MAP

அருளாளர் ஃபுளாரிபர்ட் அவர்களின் அருளீக்கப்பவனியின்போது மக்கள் அருளாளர் ஃபுளாரிபர்ட் அவர்களின் அருளீக்கப்பவனியின்போது மக்கள் 

குடும்பம், சமூகத்தில் வேரூன்றப்படும் புனித வாழ்வு

குழந்தைகளின் முதல் நம்பிக்கைப் பள்ளியாக கிறிஸ்தவ குடும்பங்கள் இருக்க வேண்டும், அதற்கு பெற்றோர்கள் முக்கிய பங்களிக்க வேண்டும் - பேராயர் Fulgence Muteba Mugalu.

மெரினா ராஜ் – வத்திக்கான்

காங்கோ ஜனநாயகக் குடியரசின் அருளாளர் Floribert Bwana Chui Bin Kositi, அவர்கள், எளியவர், சாதாரண மனிதர், உலக மக்களுக்கு எடுத்துரைக்கப்படும் நற்செய்தியின் மாதிரிகை என்றும், புனிதமான வாழ்வு என்பது நமது அன்றாட வாழ்க்கையில் நமது குடும்பத்தின் சமூகத்தில் பணியிடங்களில் வேரூன்றப்படுகின்றது என்றும் கூறினார் பேராயர் Fulgence Muteba Mugalu.

அண்மையில் காங்கோ ஜனநாயகக் குடியரசின் கோமாவில் நடைபெற்ற அருளாளர் Floribert Bwana Chui Bin Kositi அவர்களின் அருளீக்கப் பவனிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு எடுத்துரைத்தார் Lubumbashi உயர் மறைமாவட்ட ஆயரும், காங்கோ ஜனநாயக் குடியரசின் ஆயர் பேரவைத் தலைவருமான பேராயர்  Fulgence Muteba Mugalu.

கடந்த ஜூன் 15 அன்று திருத்தந்தை 14 -ஆம் லியோ அவர்களால் அருளாளராக உயர்த்தப்பட்டவரும், இளைஞர்களை அதிகமாகக் கொண்ட ஆப்ரிக்கக் கண்டத்தின் மறைசாட்சியாளருமான அருளாளர் ஃபுளோரிபெர்ட் அவர்கள், “அமைதியின் புளிக்காரமாக இளையோர் மற்றும் பொதுநிலையினர் மத்தியில் ஒளி நிறைந்த சான்றாக திகழ்கின்றார்” என்றும் திருத்தந்தை அவர்கள் கூறிய கருத்துக்களையும் பேராயர் நினைவுகூர்ந்தார்.

ஒரு கிறிஸ்தவராக, அநீதியை எதிர்த்து, சிறியவர்களையும் ஏழைகளையும் பாதுகாத்த அருளாளர் அவர்கள், தனது 26 வயதில் கொல்லப்பட்டார் என்றும், அவரது சான்றுள்ள வாழ்வானது காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் அனைத்து ஆப்ரிக்க இளைஞர்களுக்கும் துணிவையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும் என்றும் திருத்தந்தை கூறியதை எடுத்துரைத்தார் பேராயர். 

இளம் அருளாளரின் வாழ்க்கை முன்மாதிரியைப் பின்பற்றி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நற்செய்தியின் மதிப்புக்களை வலியுறுத்தி வளர்த்தெடுக்க வேண்டும் என்றும், குழந்தைகளின் முதல் நம்பிக்கைப் பள்ளியாக கிறிஸ்தவ குடும்பங்கள் இருக்க வேண்டும், அதற்கு பெற்றோர்கள் முக்கிய பங்களிக்க வேண்டும் என்றும் பேராயர் மறையுரையில் வலியுறுத்தினார்.

நாடு முழுவதிலுமிருந்து பல பேராயர்கள், ஆயர்கள் மற்றும் ஏறக்குறைய 200 அருள்பணியாளர்கள் மற்றும் திருத்தொண்டர்கள் பங்கேற்ற இச்சிறப்பு நிகழ்வில், ஆயர்களால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அருளாளரின் நினைவுச்சின்னங்கள் கோமாவின் ஆலயத்திற்குள் சிறப்பாக தயாரிக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டன. உண்மை மற்றும் நீதிக்கான இந்த இளம் சாட்சிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மலர் பூங்கொத்துகளும் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 ஜூலை 2025, 12:16