சிரிய மக்களின் ஒரே நம்பிக்கை திருஅவை மட்டுமே!
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
ஜூன் 3 முதல் 6 வரை உரோமையில் நடைபெற்ற சிரிய கத்தோலிக்கத் திருஅவையின் ஆயர்மாமன்றத்தில் பங்கேற்று சிரிய நாட்டின் ஹோம்ஸ் நகரத்திற்குத் திரும்பிய பேராயர் Jacques Mourad அவர்கள் , அந்நாட்டின் கிராமப் பங்குத் தலங்களில் தற்போது சிறுவர் சிறுமியரின் முதல் நற்கருணை விழாவைக் கொண்டாடுவது தங்களின் இதயத்தைத் தொடுவதாகவும்,வறுமையின் சூழலில் நடைபெறும் இதுபோன்ற நம்பிக்கையின் அறிகுறிகளுக்காக இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் fides செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
துறவு இல்லத்தைச் சேர்ந்த பேராயர் Mourad அவர்கள் ஹோம்ஸ் , ஹாமா மற்றும் நெபெக் ஆகிய மறைமாவட்டங்களுக்கு பேராயராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் , கடந்த ஜூன் 22ஆம் தேதி டமஸ்கஸ்சின் புனித எலியாஸ் ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது கொல்லப்பட்ட மக்களின் செய்தி அவரை ஆழமாகப் பாதித்துள்ளதாகவும் மேலும் அச்செய்தி நிறுவனம் தெரிந்துள்ளத .
மேலும், சிரிய நாடு முடிவுக்கு வந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்துள்ள பேராயர் Mourad அவர்கள், இருப்பினும் சிரியாவில் உள்ள திருஅவை தன்னுடைய பயணத்தையும் பணியையும் தொடர வேண்டும் என்று உறுதியளித்ததையும் அச்செய்திக் குறிப்பு எடுத்துரைத்துள்ளது.
டமஸ்கஸ்சின் புதிய அரசு மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாகவும், ஒவ்வொரு அரசும் தனது மக்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்புள்ளது என்று பேராயர் கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.
சிரிய நாட்டின் தற்போதைய அரசும், முந்தைய அரசும் மக்களுக்கெதிரான வேலைகளையேச் செய்தன என்றும், அரசுகள் எப்போதும் சிரிய மக்களையும், அவர்களின் வரலாற்றையும் மதிக்கவுமில்லை என்றும் பேராயர் Mourad அவர்கள் fides செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
மேலும், உரோமில் நடைபெற்ற ஆயர்மாமன்றத்தில் பங்கு பெற்ற பேராயர் அவர்கள், சிரிய மக்களுக்கு ஆதரவு அளிக்க திருஅவையை ஊக்குவிக்கக் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களிடம் கேட்டுக்கொண்டதையும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான சிரிய மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் நிலையிலும், படுகொலை செய்யப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்றும், அவர்களின் மாண்பை மீட்டெடுக்கும் வலிமை அவர்களிடமே இல்லை என்றும் அந்நாட்டு மக்களின் வலிமையற்ற நிலையை செய்தி நிறுவனத்திடம் எடுத்துரைத்துள்ளார் பேராயர் Mourad.
அரசுகளின் ஆதரவு எதுவுமே இல்லாத நிலையில் சிரியா நாட்டு மக்களின் ஒற்றை நம்பிக்கையாக இருப்பது திருஅவை மட்டுமே என்றும், மக்களை ஆதரிக்க தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் பேராயர் Mourad அவர்கள் fides செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்