MAP

பாவத்தால் துயருறும் தாவீது அரசர் பாவத்தால் துயருறும் தாவீது அரசர்  

விவிலியத் தேடல் : திருப்பாடல் 69-5, பாவத்தால் விளைவது இழிநிலை!

தாவீதைப் போன்று நாமும் நமது பாவ வழிகளைக் கண்டறிந்து அவற்றிலிருந்து விடுதலைப்பெற இறையருள் வேண்டி இந்நாளில் மன்றாடுவோம்.
விவிலியத் தேடல்:திருப்பாடல் 69-5, பாவத்தால் விளைவது இழிநிலை!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'ஆண்டவரின் பேரன்பு நன்மைமிக்கது!' என்ற தலைப்பில் 69-வது திருப்பாடலில், 13 முதல் 18 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 19 முதல் 28 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறை ஒளியில் அவ்வார்த்தைகளை வாசிப்போம். “என் இழிவும், வெட்கக்கேடும், மானக்கேடும் உமக்குத் தெரியும்; என் பகைவர் அனைவரும் உம் முன்னிலையில் இருக்கின்றனர். பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்து விட்டது; நான் மிகவும் வருந்துகிறேன்; ஆறுதல் அளிப்பாருக்காகக் காத்திருந்தேன்; யாரும் வரவில்லை; தேற்றிடுவோருக்காகக் தேடிநின்றேன்; யாரையும் காணவில்லை. அவர்கள் என் உணவில் நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்; என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர்களுடைய விருந்துகளே அவர்களுக்குக் கண்ணியாகட்டும்! அவர்களுடைய படையல் விருந்துகளே அவர்களுக்குப் பொறியாகட்டும்! அவர்களின் கண்கள் காணாதவாறு ஒளியிழக்கட்டும்! அவர்களின் இடைகள் இடையறாது தள்ளாடட்டும்! உமது கடுஞ்சினத்தை அவர்கள்மேல் கொட்டியருளும்; உமது சினத்தீ அவர்களை மடக்கிப் பிடிப்பதாக! அவர்களின் பாசறை பாழாவதாக! அவர்களின் கூடாரங்களில் ஒருவனும் குடிபுகாதிருப்பானாக! நீர் அடித்தவர்களை அவர்கள் இன்னும் கொடுமைப்படுத்துகின்றார்கள்; நீர் காயப்படுத்தினவர்களின் நோவைப் பற்றித் தூற்றித் திரிகின்றார்கள். அவர்கள்மீது குற்றத்தின்மேல் குற்றம் சுமத்தும்!  உமது நீதித் தீர்ப்பினின்று அவர்களைத் தப்ப விடாதேயும்! மெய்வாழ்வுக்குரியோரின் அட்டவணையிலிருந்து அவர்களுடைய பெயர்களை நீக்கிவிடும்! அவற்றை நேர்மையாளரின் பெயர்களோடு சேர்க்காதேயும்!” (வச 19-28)

முதலில், “என் இழிவும், வெட்கக்கேடும், மானக்கேடும் உமக்குத் தெரியும்; என் பகைவர் அனைவரும் உம் முன்னிலையில் இருக்கின்றனர். பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்து விட்டது; நான் மிகவும் வருந்துகிறேன்; ஆறுதல் அளிப்பாருக்காகக் காத்திருந்தேன்; யாரும் வரவில்லை; தேற்றிடுவோருக்காகக் தேடிநின்றேன்; யாரையும் காணவில்லை" என்று கூறும் தாவீதின் வார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது எனக்கொரு கதை நினைவுக்கு வருகின்றது. அவன் ஒரு வியாபாரி. எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செயல்படாததால், அவன் பெரிய இழப்பைச் சந்திக்க நேர்ந்தது.  மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கே மெல்லிய நிலா வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓடவிட்டான். வியாபாரத்தில் தோற்றுப்போன அவலம் அவனை அழுத்தியது. பங்குதாரர்கள் எப்படியெல்லாம் தனக்குத் துரோகம் செய்தார்கள், நம்பவைத்துக் கழுத்தறுத்தார்கள் என்று எண்ணியெண்ணி வேதனையில் மூழ்கினான்.  தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப்போகிறோம். குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறோம் போன்ற எதிர்காலக் கவலைகள் வேறு ஒருபுறம் எழுந்து அடங்கின. இந்தச் சிந்தனையினாலேயே அவன் வலக்கை அவனை அறியாமல் ஆற்று மணலைத் துழாவி கைக்குத் தட்டுப்பட்ட சிறு சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் இருந்தது. இப்படியாக அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான்.  பொழுது விடிய ஆரம்பித்தது! வெளிச்சம் பரவியது. ஆற்றிலே வீசுவதற்கு அவனைச் சுற்றி இருந்த கற்கள் எல்லாம் தீர்ந்து போய்விட்டன. அவன் தன் கையில் இருந்த கடைசிக் கல்லைப் பார்த்தான். பிரமித்துவிட்டான். காரணம், அது சாதாரண கூழாங்கல் இல்லை. விலை உயர்ந்த வைரக்கல். யாரோ கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்து வந்த வைரக்கற்களை ஆற்றங்கரையிலேயே தவறவிட்டு விட்டு ஓடியிருக்கிறார்கள். அவற்றைத்தான் அவன் இருட்டில் இன்னதென்று அறியாமல் எடுத்து வீசியிருக்கிறான். ஒருவகையில் பார்த்தால் தாவீதின் வாழ்வும் இந்த வியாபாரியின் வாழ்வு மாதிரிதான். காரணம், கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துகொண்டு நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்தவர். கடவுள் அவருக்கு எல்லாவிதமான அருள்கொடைகளை வழங்கியும் கூட, எனக்கு இன்னும் வேண்டும்.... இன்னும் வேண்டும்... என்ற பேராசையினால் உந்தப்பட்டு உரியாவின் மனைவி பத்சேபாவுடன் பாவம் புரிக்கின்றார் தாவீது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர் சந்திக்கும் தோல்விகள், சறுக்கல்கள் மிகவும் அதிகம். குறிப்பாக, ஆட்சியை அபகரிக்கும் எண்ணமுடன் அவரது சொந்த மகன் அப்சலோம் அவருக்கு எதிராக எழுந்து ஏற்படுத்திய நெருக்கடிகள் யாவும் சொல்லிமாளாதவை. இதன்காரணமாகவே, உள்ளம் குத்துண்டவராக தனது பாவங்களே இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்பதை உணர்ந்தவராக இவ்வாறெல்லாம் கூறி புலம்புகிறார் தாவீது என்பதை இவ்விடம் நாம் உணர்ந்துகொள்வோம்.

இரண்டாவதாக, "தேற்றிடுவோருக்காகக் தேடிநின்றேன்; யாரையும் காணவில்லை. அவர்கள் என் உணவில் நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்; என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்" என்கின்றார் தாவீது. இந்த வார்த்தைகளும் அவர் நெருக்கடியில் இருந்தபோது ஏற்பட்ட துயரங்களின் வெளிப்பாடுதான். மிகவும் குறிப்பாக, தாவீதின் இந்த வார்த்தைகள் அவரது மகன் அப்சலோம் ஏற்படுத்திய கொடுந்துயரங்களின் விளைவுதான். காரணம், அவன் நல்லவன் போல நடித்துக்கொண்டு சில தந்திரமான வேலைகளைச் செய்தான். இன்னும் சொல்லப்போனால் அவரை நம்ப வைத்துக் கழுத்தை அறுத்தவன் அவன். எடுத்துக்காட்டாக, "ஒருநாள் அப்சலோம் அரசரிடம்,” நான் ஆண்டவருக்குச் செய்துள்ள நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும். எபிரோன் செல்ல தயைகூர்ந்து அனுமதிதாரும். உமது அடியான், சிரியாவிலுள்ள கெசூரில் வாழ்ந்தபோது, ‘ஆண்டவர் என்னை எருசலேமுக்குத் திரும்பிக் கொண்டு சென்றால், நான் ஆண்டவரைத் தொழுவேன்’ என்று ஒரு நேர்ச்சை செய்தேன்” என்றான். “நலமாய்ச் சென்று வா” என்று அரசர் அவனிடம் கூற, அவனும் புறப்பட்டு எபிரோனுக்குச் சென்றான். பின் அப்சலோம் இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களுக்கும் இரகசியத் தூதர் மூலம் “நீங்கள் எக்காள முழக்கம் கேட்டவுடன் ‘அப்சலோம் எபிரோனில் அரசர் ஆகிவிட்டார்’ என்று முழங்குங்கள்” என்று சொல்லியனுப்பினான். எருசலேமிலிருந்து அழைக்கப்பட்ட இருநூறு பேர் சென்றனர்; வஞ்சகமின்றி, இதுபற்றி ஏதும் அறியாதவராய் அப்சலோமுடன் சென்றனர். அப்சலோம் பலி செலுத்தியபோது, தாவீதின் ஆலோசகனான கீலோவியன் அகிதோபலை அவனது நகர் கீலோலிருந்து வருமாறு சொல்லியனுப்பினான். சதி வலுவடைந்தது; அப்சலோமின் ஆதரவாளருடைய எண்ணிக்கையும் மிகுதியானது. (காண்க. 2 சாமு 15:7-12) என்று வாசிக்கின்றோம். இதனைத் தொடர்ந்து தாவீது அரசருக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படுகின்றன. அதனால்தான், தாவீது தம்மோடு எருசலேமிலிருந்த அலுவலர் அனைவரிடமும், “வாருங்கள், நாம் தப்பியோடுவோம்; ஏனெனில், அப்சலோமிற்கு முன்பாக நாம் தப்ப முடியாது. விரைவில் வெளியேறுங்கள், இல்லையேல் அவன் விரைவில் நம்மை மேற்கொண்டு, நமக்குத் தீங்கு விளைவிப்பான்; நகரையும் வாள்முனையால் தாக்குவான்” (வச 14) என்று அச்சமுடன் கூறுவதைப் பார்க்கின்றோம்.

மூன்றாவதாக, தனக்கு இந்தத் தாங்கவொண்ணா நெருக்கடிகளையும் துயரங்களையும் ஏற்படுத்திய தனது எதிரிகளை அழித்தொழிக்க வேண்டுமென்று இறைவேண்டல் செய்கின்றார். அவ்வார்த்தைகளை மீண்டுமொரு முறை வாசித்து நமது இன்றைய நாள் விவிலியத் தேடல் நிகழ்ச்சியை நிறைவு செய்வோம். “அவர்களுடைய விருந்துகளே அவர்களுக்குக் கண்ணியாகட்டும்! அவர்களுடைய படையல் விருந்துகளே அவர்களுக்குப் பொறியாகட்டும்! அவர்களின் கண்கள் காணாதவாறு ஒளியிழக்கட்டும்! அவர்களின் இடைகள் இடையறாது தள்ளாடட்டும்! உமது கடுஞ்சினத்தை அவர்கள்மேல் கொட்டியருளும்; உமது சினத்தீ அவர்களை மடக்கிப் பிடிப்பதாக! அவர்களின் பாசறை பாழாவதாக! அவர்களின் கூடாரங்களில் ஒருவனும் குடிபுகாதிருப்பானாக! நீர் அடித்தவர்களை அவர்கள் இன்னும் கொடுமைப்படுத்துகின்றார்கள்; நீர் காயப்படுத்தினவர்களின் நோவைப் பற்றித் தூற்றித் திரிகின்றார்கள். அவர்கள்மீது குற்றத்தின்மேல் குற்றம் சுமத்தும்!  உமது நீதித் தீர்ப்பினின்று அவர்களைத் தப்ப விடாதேயும்! மெய்வாழ்வுக்குரியோரின் அட்டவணையிலிருந்து அவர்களுடைய பெயர்களை நீக்கிவிடும்! அவற்றை நேர்மையாளரின் பெயர்களோடு சேர்க்காதேயும்!”

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 ஜூன் 2025, 11:49