மணிப்பூரில் அமைதிக்கான நடவடிக்கையில் முன்னேற்றம்!
சுஜிதா சுடர்விழி- வத்திக்கான்
கடந்த ஜூன் 13, 14 வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், மணிப்பூரிலுள்ள இம்பால் பள்ளத்தாக்கில் மெய்தி இன மக்கள் ஆதிக்கம் கொண்டுள்ள மாவட்டங்களில் பாதுகாப்புப் படைகள் 328 ஆயுதங்கள் மற்றும் 9,000-க்கும் அதிகமான வெடிமருந்துகளை கைப்பற்றியதாக யூக்கான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவத் தலைவர்கள் மற்றும் மக்கள், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மெய்தி இனக்குழுவின் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளிலிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும், இதன் காரணமாக, அங்குப் படிப்படியாக அமைதி மீட்டெடுக்கப்படுகிறது என்றும் யூக்கான் செய்தி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, மெய்தி மற்றும் கிறிஸ்தவ குக்கி இன பூர்வகுடி மக்களுக்கிடையே கடுமையான ஆயுத மோதல் ஏற்பட்டதாகவும், இதனால் 260 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 60,000 மக்களை, பெரும்பாலும் கிறிஸ்தவர்களை, இடம்பெயரச் செய்தாகவும் அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் 2023-ஆம் ஆண்டு மே மாதம் 3-ஆம் தேதியன்று, மெய்தி இன மக்கள் குக்கி இன மக்களின் ஓர் எதிர்ப்புப் பேரணியில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து வன்முறை இடம்பெறத் தொடங்கியது எனவும், இந்தப் பேரணி, மெய்தி இனப் பூர்வகுடியினருக்கு சாதி அடையாளம் வழங்கப்படுவதற்கு எதிராக நடந்தது என்றும் அச்செய்தி நிறுவனம் மேலும் எடுத்துரைத்துள்ளது.
மேலும் இந்த வன்முறைகளை தடுக்கும் பொறுப்பில் தோல்வியடைந்தமையால், முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் அவர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து, கடந்த 2024-ஆம் ஆண்டு, பிப்ரவரி 13-ஆம் தேதி மணிப்பூர் மாநிலம், ஒன்றிய அரசின் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவரப்பட்டது எனவும் கடந்த இரண்டு ஆண்டுகள் இடம்பெற்ற வன்முறைகளினால் 11,000 வீடுகள், 360 கோவில்கள் மற்றும் பல கிறிஸ்தவ நிறுவனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
மாநிலத்தில் மொத்தம் உள்ள 32 இலட்ச மக்களில் 41 விழுக்காட்டினர் பாரம்பரிய குக்கி இனக் கிறிஸ்தவர்கள் என்றும், 53 விழுக்காட்டினர் மெய்தி இனத்தவர் என்றும், நிர்வாகத்தை மெய்தி இனத்தவர் தங்கள் அதிகாரத்துக்குள் வைத்திருக்கின்றனர் என்றும் யூக்கான் செய்தி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்