பாப்புவா நாட்டின் முதல் புனிதராக உயரும் பீட்டர் டோ ராட்!
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
1945-ஆம் ஆண்டு பாப்புவா நியூ கினியில் நடந்த ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது மறைச்சாட்சியான அருளாளர் பீட்டர் டோ ராட் அவர்கள், வரும் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதியன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களால் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படவிருக்கிறார் என்று யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாப்புவா நியூ கினியின் முதல் தலைமுறை கத்தோலிக்கர்களான ஏஞ்சலோ டோ புயா மற்றும் மரியா லா துமுல் ஆகியோருக்குப் மகனாகப் பிறந்த அருளாளர் ராட் அவர்கள் “நம்பிக்கை மற்றும் கிறிஸ்தவச் சான்று வாழ்வின் முன்னுதாரணம்” என்று வத்திக்கானில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புனிதர்பட்ட படிநிலைகளுக்கான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளார் என்று மேலும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.
அருளாளர் ராட் அவர்களின் பெற்றோர் அக்கால மறைப்பணியாளர்களுடன் நெருங்கியத் தொடர்பைக் கொண்டிருந்தனர் என்றும், அவர்கள் கோவில்கள், பள்ளிகள் மற்றும் மறைப்பணியாளர்கள் குடியிருப்புக்கான நிலங்களைக் கொடையாகக் கொடுத்துள்ளனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய குடும்பப் பின்னணியில் பிறந்த அருளாளர் ராட் அவர்கள், தனது சிறு வயதிலிருந்தே நற்கருணை மீது அதிக பக்தி கொண்டிருந்ததாகவும், திருப்பலியில் உதவி செய்யும் ஆர்வமுடைய பீடப்பணியாளராகவும் திகழ்ந்தார் என்று அந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டியுள்ளதையும் எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.
மேலும் அருளாளர் ராட் அவர்கள், தனது 18-வது வயதில் தன் தந்தையின் ஆலோசனைப்படி அருள்பணியாளர் கார்ல் லாஃபர் அவர்களால் நடத்தப்பட்ட மறைக்கல்வியாளர் பள்ளிக்கு அனுப்பப்பட்டார் என்றும், அப்போது அருள்பணியாளர்&Բ; லாஃபர் அவர்கள், ராட் அவர்களை குருமடத்திற்குச் அனுப்புவது பற்றி கேட்டபோது அவரின் தந்தை அதற்கு இசைவு தெரிவிக்கவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
1944-ஆம் ஆண்டு ஜப்பானிய ஆக்கிரமிப்பால் கிறிஸ்தவ மத நடவடிக்கைகள் முழுமையாகத் தடை செய்யப்பட்ட நிலையில், பல கத்தோலிக்க அருள்பணியாளர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அருளாளர் ராட் அவர்கள் திருஅவையின் மறைப்பணியைத் தொடர முடிவு செய்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், தடைகள் அனைத்தையும் மீறி, மறைக்கல்வியாளரான அருளாளர் ராட் அவர்கள், தான் கத்தோலிக்கராக வாழ்வதையும் கத்தோலிக்கராக இறப்பதையும் அவர்களால் தடை செய்ய முடியாது என்றும், தன் உயிரை இழந்தாயினும் கத்தோலிக்கக் கடமையை நிறைவேற்றுவேன் என்று அவர் வாழ்ந்தார் என்றும், அருள்பணியாளர் லாஃபர் எழுதியுள்ளதாக கூறியுள்ளது அச்செய்தி நிறுவனம் .
ஜப்பானிய அடக்குமுறை மிகவும் வன்முறையாக மாறியிருந்த நிலையில், அருளாளர் ராட் அவர்கள், மாலையில் இரகசியமாக வெளியே சென்று விசுவாசிகளின் சிறிய குழுக்களைச் சந்தித்து, அவர்களுக்கு மறைக்கல்வி கற்பித்தார் என்றும், இறைவேண்டல்களுக்கு தலைமை தாங்கி, தேவைப்படும்போது, திருமுழுக்கு வழங்குவதோடு திருமணங்களை ஆசிர்வதித்தார் என்றும் கூறும் அச்செய்தி நிறுவனம், பலதார மணமுறையை அவர் எதிர்த்தார் எனவும், குறிப்பாக, தனது மூத்த சதோதரரின் இரண்டாம் திருமணத்தையும் துணிவுடன் எதிர்த்தார் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாடுகளை ஏற்பாடு செய்தல் மற்றும் பலதார மணத்தை எதிர்ப்பதில் தேவையற்ற தலையீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட அருளாளர் ராட் அவர்கள், 1945-ஆம் ஆண்டு அவரது மூத்த சகோதரர் காவலரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஒரு குகைக்குள் அமைந்திருந்த ஒரு வதைமுகாமில் அடைக்கப்பட்டார் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இறுதியாக, அருளாளர் ராட் அவர்களுக்கு கொடிய நஞ்சு ஊசி மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்டது என்றும், அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அவரை மறைச்சாட்சி என அழைத்ததாகவும் அச்செய்தி எடுத்துக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்